ஜனாதிபதித் தேர்தலை எதிர்பார்த்து நாடெங்கும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தென்னிலங்கையில் மாத்திரமன்றி, வடக்கு கிழக்கில் சிறுபான்மை மக்கள் மத்தியிலும் தேர்தல் சூடு பற்றிக்கொண்டு விட்டது.
வடக்கில் தமிழ் அரசியல்வாதிகளில் ஒரு தரப்பினர் பொதுவேட்பாளர் என்ற எண்ணக்கருவில் மூழ்கியுள்ளனர். பொதுவேட்பாளர் ஒருவர் தமிழர் தரப்பில் தேர்தலில் நிறுத்தப்பட்டால் அவர் வெற்றியடைவது சாத்தியமில்லை என்ற போதிலும், தாங்கள் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தியே தீருவதென்று அவர்கள் கூறுகின்றனர்.
அங்குள்ள நிலைமை இவ்வாறிருக்கையில், தென்னிலங்கையில் அரசியல் களமானது குழப்பநிலையிலேயே இன்னும் உள்ளது. பலமுனைகளில் இம்முறை போட்டி நிலவக் கூடுமென்றே ஊகிக்க முடிகின்றது.
நாட்டில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலவிய காலகட்டத்தில், அரசாங்கம் பதவியிழந்த போது ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு எவருமே முன்வரவில்லை. மூழ்கிப் போன பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு திறமையில்லாததன் காரணமாகவே அரசியல்வாதிகள் பலரும் ஆட்சியைப் பொறுப்பேற்க அவ்வேளையில் முன்வரவில்லை.
ஆனால் நாட்டை மீட்டெடுக்க முடியுமென்ற நம்பிக்கையில் ஆட்சியைப் பொறுப்பேற்றவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆவார்.
அவர் ஆட்சியைப் பொறுப்பேற்றதில் இருந்து நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக மீட்சி பெற்று வருகின்றது.
நிலைமை இவ்வாறிருக்கையில், அன்றைய வேளையில் நாட்டைப் பொறுப்பேற்க முன்வராதவர்கள் இன்று மக்களுக்கு முன்பாகச் சென்று வீறாப்புப் பேசுகின்றனர். தாங்கள் பதவிக்கு வந்தால் நாட்டை முழுமையாக மீட்கப் போவதாகக் கூறுகின்றனர்.
அவர்களது பேச்சு வேடிக்கையானதாகும். அன்றைய நெருக்கடி வேளையில் நாட்டைப் பொறுப்பேற்கத் தயங்கியவர்கள், இன்று நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்ததும் ஆட்சியைப் பிடிக்கக் கனவு காண்கின்றனர்.
இதனை நாட்டின் மீதான அக்கறையென்று எவ்வாறு சொல்வது? அதிகார ஆசனத்தில் அமர்வதற்கு ஆசை கொள்வதன் வெளிப்பாடே இதுவாகும்.
நாடு நெருக்கடியில் சிக்கித் தவித்த போது ஒதுங்கிக் கொண்டவர்கள், இன்று நாடு மீட்சி பெற்றிருக்கையில் அதிகாரத்துக்கு ஆசைப்படுகின்றனர். நாட்டின் மீதும், மக்கள் மீதும் கொண்ட உண்மையான அக்கறையாக இதனை எவ்வாறு கூற முடியும்?