“முத்தமிழ்க் கலசம்” என்ற காலாண்டு இதழின் பிரதம ஆசிரியராகச் செயற்படும் கொழும்பைச் சேர்ந்த வஃபீரா வஃபி என்பவரின் ஹைக் கூக்களின் தொகுப்பாக, தமிழ் நெஞ்சம் அமீனின் வடிவமைப்பில் 365 ஹைக்கூக்களோடு, 128 பக்கங்களில் மலர்ந்திருக்கின்றது
“புள்ளியில்லாக் கோலம்”.
“உள்ளதை உள்ளபடி” சொல்லும் மூன்றடிக் கவிதை வடிவமான “ஹைக்கூ”, இன்று பலராலும் விரும்பப்படுகின்ற ஒரு கவிதை வடிவமாகத் திகழ்கின்றது.
குறிப்பாக, புதிதாக எழுத்துலகில் பிரவேசிப்பவர்களின் முதல் கவிதை முயற்சியாக ஹைக்கூ அமைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
ஹைக்கூ தமிழுக்கே உரித்தான ஒரு கவிதை வடிவமல்ல.
14ஆம் நூற்றாண்டில் ஜப்பானில் பிறந்த கவிதை வடிவமான ஹைக்கூ, 19ஆம் நூற்றாண்டில், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்டு, இப்போது சென்ரியூ, குக்கூ, பழமொன்றியூ, விடுகவிக் கூ, எதுகைக்கூ மோனைக்கூ என்று கிளைகள் பல பரப்பி விரிந்து நிற்கிறது.
ஈழத்தைப் பொறுத்தவரையில் “வரவுப்பா” வான ஹைக்கூ அதிக செல்வாக்கைப் பெற்றிருக்க வில்லை யென்பதே உண்மையாகும். இங்கு ஹைக்கூ நூல்களும் அதிகம் வெளிவரவில்லை.1988 முதல்2016 வரை மிகக் குறைந்த எண்ணிக்கையான (12 நூல்கள் அளவில். முதல் நூல் சு.முரளீதரனின் “கூடைக்குள் தேசம்”) நூல்களே வெளி வந்துள்ளதாக அறியக் கிடைக்கிறது.
ஆயினும், சமூக வலைத் தளங்கள், முக நூல் இலக்கிய குழுமங்களின் செயற்பாடுகள், இந்திய குழுமங்களின் முகநூல் பயிற்சி வகுப்புக்களோடு நம்மவர்கள் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகள் என்பவற்றினூடாக ஹைக்கூ, தற்போது ஈழத்தின் இளைய தலைமுறைப் படைப்பாளிகளை ஈர்த்து வருவதை அவதானிக்க முடிகிறது. அதன் தொடர்ச்சியாகவே வஃபீரா வஃபீயின் “புள்ளியில்லாக் கோலம்” வெளிவந்திருக்கின்றது.
ஹைக்கூக்கள் பற்றி அறிந்து, பயின்று பயிற்சி பெற்று அவர் ஹைக்கூக்களை எழுதி வருவதை நூலிலுள்ள ஹைக்கூக்களைப் படிப்பதனூடாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.
ஹைக்கூ பற்றிய அறிவு, அதன் விதிகள், இலக்கணங்கள் குறித்தும் வஃபீரா சில ஹைக்கூக்களை இந் நூலில் எழுதியுள்ளார்.
ஒரு காட்சிப் படிமம்
பலகோணத்தில் சிந்திக்க வைக்கும்
தலைசிறந்த ஹைக்கூ.(291)
எழுதிய ஹைக்கூ
சேர்க்கப்படவே இல்லை
கற்பனை வளம்(290)
அழகிய சூழல்
வடிவம் பெற்று வருகிறது
புதிய ஹைக்கூ.(286)
கவிஞனின் வெற்றி
திருப்புமுனையாக அமைந்திருந்தது
ஹைக்கூவின் ஈற்றடி(300)
பல சிற்றுயிர்கள்
சிறப்பித்து மகிழ்வு தரும்
தரமான ஹைக்கூ(294)
ஹைக்கூ ஒரு காட்சிப் படிமமாக அமைவதை, கற்பனை, உவமை, உருவகம், இருண்மை, பிரசாரத் தன்மை என்பவற்றைத் தவிர்த்து எளிமையான சொற்களில் அமைவதை ஹைக்கூ வரிகளில் எடுத்துச் சொல்வதோடு, சிற்றுயிரையும் நேசித்து எழுதுவதையும், ஈற்றடி வியப்பூட்டுவதாக அமைவதையும் அவ்வரிகளில குறிப்பிடுகின்றார் கவிஞர். ஒருபடப் பிடிப்பாளனைப் போல காட்சிகளை ஹைக்கூக் கவிஞன் தன்கவி வரிகளுக்குள் படம் பிடிப்பான். வஃபீராவும் இயற்கையை, சமூக அவலங்களை, நிகழ்வுகளை, உணர்வுகளை காட்சிப் படிமமாக்கித் தருவதில் முன்னிற்பதை அவரின் பெரும்பாலான கவிதைகள் பறைசாற்றுகின்றன.
இனிய சங்கீதம்
ஒலித்துக் கொண்டே இருக்கும்
சொட்டும் மழை நீர்(7)
வேலியில் பச்சோந்தி
அடிக்கடி நிறம்மாறும்
அந்தி வானம்(16)
அருகில் புதையல்
தொடாமல் நின்று ரசிக்கும்
வரைந்த ஓவியன்.(29)
அழகு மயில்
பறந்ததும் ஆட ஆரம்பிக்கும்
மிதக்கும் படகு(35)
அடுப்பில் வைத்த பாத்திரம்
திடீரென வெடித்துச் சிதறும்
சோளப் பொரி(48)
அழகான சிலைகள்
ஒரே பாறையில் செதுக்கப்படும்
பலமதச் சின்னங்கள்(126)
பூந்தோட்டத்தில் கைம்பெண்
நெற்றியில் திலகமிட்டுச் செல்கிறது
உரசிய பட்டாம் பூச்சி.(210)
பாய்ந்த முயல்
கையில் பிடிபடவே இல்லை
அதன் நிழல்,(310)
உதித்த சூரியன்
இன்னும் மறையவே இல்லை
பனிக் கூட்டம்(365)
கவிஞனின் அனுபவத்தை வாசகருக்குள்ளும் பரவச் செய்கின்ற வகையில் அவரின் ஹைக்கூக்கள் அமைந்திருக்கின்றன. வாசகன், முதல் இரு வரிகளைப் படித்து விட்டு, சற்று சிந்தித்துப் பார்த்துவிட்டு. பின்னர் மூன்றாம் வரியைப் படிக்கையில் வியப்பூட்டுவதை- எதிர்பாராத முடிவைத்தரும் விதமாக ஹைக்கூக்கள் அமைந்திருப்பதை அவரின் பெரும்பாலான ஹைக்கூக்களில் தரிசிக்க முடிகின்றது. எடுத்துக் காட்டாக.
அடுப்பில் வைத்த பாத்திரம் திடீரென வெடித்துச் சிதறும்
நிறுத்தி, ஏன் என்று கேள்வி எழுப்பி விட்டு மூன்றாம் வரியைப் பார்த்தால் சோளப் பொரி என்று வியப்பூட்டுகிறார் கவிஞர். இவ்வாறு ஒவ்வொரு ஹைக்கூவாகப் பார்க்கின்ற போது ஈற்றடி திருப்புமுனையாக அமைந்து கவி இன்பம் தருகின்றன ஹைக்கூக்கள். ஹைக்கூ கவிதைகளில் தொடர்ந்தியங்கும் முனைவர் கா.ந. கல்யாண சுந்தரம், தமிழ் நெஞ்சம் அமின், தென்றல்கவி தமிழ்ச்சிட்டு, வெண்பா வேந்தர் ஏடி வரதராசன், டாக்டர் கவிஞர் ஜலீலா முஸம்மில், மணிக்கூ கவி நஸீரா எஸ். ஆப்தீன், கவிஞர் அன்புச் செல்வி சுப்புராஜு, எஸ்.கமர்ஜான்பீபீ ஆகிய தமிழக – இலங்கை- பிரான்ஸ் எழுத்தாளர்களின் அணிந்துரை, மகிழ்ந்துரை, வாழ்த்துரை, என்பவற்றைப் பெற்றிருக்கின்றது நூல். ஒரு128 பக்க நூலுக்கு இவ்வளவு உரைகள் அவசியம் தானா? என்று கேள்வியெழ இடமுண்டு. எதிர்காலத்தில் இதனைக் கருத்தில் கொண்டு ஆக்கங்களைத் தரவேண்டுமென்பதே நமது அன்புக் கோரிக்கையாகும்.
நூல்:- புள்ளியில்லாக் கோலம்
வெளியீடு:- சித்தி வஃபீரா, 023,அமரசேகர மாவத்தை, ஹவ்லொக் டவுண்,
கொழும்பு- 05
விலை- இலங்கை ரூபா 850/-