இலங்கையின் ஒலிபரப்புச் சேவை நூற்றாண்டு வரலாற்றை சந்திக்கவிருப்பது வானொலி நேயர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சிதரும் விஷயமாகும். அந்தவகையில், ஒலிபரப்புச் சேவையுடன் இணைந்து தோற்றம்பெற்ற தாய் வானொலியாகப் போற்றப்படும் இலங்கை வானொலி இன்னும் ஆறு மாதங்களில், அதாவது எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதியன்று தனது வரலாற்றுப் பாதையில் 99 வருடங்களை நிறைவு செய்து நூறாவது ஆண்டில் கால்பதிக்கிறது.
தென்கிழக்கு ஆசியாவிலேயே முதன்முதலாக ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்த பெருமைக்குரியது இலங்கை வானொலி. தேசிய சேவை, வர்த்தக சேவை, கல்விச் சேவை முதலான பல்வேறு சேவைகளாக வகைப்படுத்தி, மும்மொழிகளிலும் ஒலிபரப்பை முன்னெடுத்து வரும் இலங்கை வானொலி, செய்தியறிக்கை, நேயர்களுக்கான அறிவூட்டல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கியதாக பல நிகழ்ச்சிகளை காலத்துக்குக் காலம் அறிமுகம் செய்து வழங்கி வருவதை சிறப்பாகக் குறிப்பிடலாம்.
இந்தவகையில் இலங்கை வானொலி தமிழ் தேசிய சேவையின் பழம்பெரும் நிகழ்ச்சிகளுள் ஒன்றான ‘வாரம் ஒரு வலம்’ இம்மாதம் (ஜூன்) முதலாம் திகதியிலிருந்து மீள்அறிமுகமாக ஒலிபரப்பாகி வருகிறது. மூத்த ஒலிபரப்பாளர் இளையதம்பி தயானந்தா நிகழ்ச்சியை தயாரித்து தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மாலை 7.00 மணி முதல் 8.00 மணிவரை இந்த நிகழ்ச்சி இடம்பெறுகிறது. இதனை வெறுமனே ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்றோ அல்லது நேரத்தை நிரப்பும் நிகழ்ச்சியாகவோ சொல்லிவிட முடியாது. இலங்கை வானொலி வழங்கும் தனித்துவமான நிகழ்ச்சியாகவே இதனை குறிப்பிடவேண்டும். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் பெரும் வரலாற்றுச் சிறப்பொன்று இருக்கிறது.
நேயர்கள் கடிதங்கள் வாயிலாக வானொலி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வந்த அன்றைய நிலை சற்று மாற்றமும் வளர்ச்சியுமடைந்து, தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு, எந்தவொரு நிகழ்ச்சியிலும் குரல் மூலம் நேரடியாகக் கலந்து கொள்ளும் நிலை உருவானது. இதுவே நவீன தொழில்நுட்ப வசதியுடன் இணைந்த Phone in programme என்பதாக தோற்றம் பெற்றது. இந்தப் புதிய தொழில்நுட்பத்துடன் அமைந்த இன்றைய வானொலி நிகழ்ச்சிகளுக்கு முன்னோடியாக அமைந்ததுதான் இந்த ‘வாரம் ஒரு வலம்’. இலங்கையில் தனியார் வானொலிகள் தோற்றம் பெறாத காலப்பகுதியில், அதாவது 1992 ஜூலை மாதத்தில் இலங்கை வானொலி தேசிய சேவையில் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.
ஒலிபரப்பு வரலாற்றிலே சிறப்புமிக்கதாக குறிப்பிட்டுச் சொல்லப்படுகின்ற அன்றைய ‘வாரம் ஒரு வலம்’ நிகழ்ச்சியானது, இப்போது சகல வானொலிகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் வெறுமனே திரைப்படப் பாடல்களை விரும்பிக் கேட்கும் ஒரு நேரடி நிகழ்ச்சியாக இருந்திருக்கலாம் என சமகால நேயர்கள் நினைக்கக்கூடும். அது முற்றிலும் தவறானது.
அன்றைய காலப்பகுதியில் இலங்கை வானொலியில் கடமையாற்றிக் கொண்டிருந்த ஒலிபரப்பாளர் எஸ். எழில்வேந்தன் ‘வாரம் ஒரு வலம்’ நிகழ்ச்சியை அறிமுகம் செய்தார். 1989ஆம் ஆண்டில் இங்கிலாந்திலுள்ள ‘பொதுநலவாய நாடுகள் நட்புறவு நிதியம்’ என்ற அமைப்பு ஒலிபரப்புத்துறையில் முத்திரை பதித்தவர்களை அழைத்து, அங்குள்ள தொலைக்காட்சி, வானொலி நிலையங்களுக்குச் சென்று ஒளிபரப்பு, ஒலிபரப்பு தொடர்பான தகவல்களையும், நுட்பங்களையும் அறிந்து கொள்ளுவதற்குரிய சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தது. அவர்களுள் ஒருவராக இலங்கை வானொலியிலிருந்து லண்டன் சென்றிருந்த எஸ். எழில்வேந்தன் அங்கு பார்த்து கற்றறிந்த விஷயங்களின் வெளிப்பாடுதான் இந்த நிகழ்ச்சியின் தோற்றத்திற்கு காரணமாக அமைந்தது.
வாரம் ஒரு வலம் நிகழ்ச்சி ஆரம்பத்தில் சனிக்கிழமைகளில் காலை மணி 8.05 முதல் 8.30 வரை ஒலிபரப்பாகி வந்தது. 1996 ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் காலை மணி 7.10 முதல் 8.00 மணிவரை ஒலிபரப்பாகத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை எஸ். எழில்வேந்தன் அறிமுகம் செய்த நாளிலிருந்து நான்கு வருடங்களுக்கும் மேலாக, அதாவது 1996ஆம் ஆண்டு இறுதிப் பகுதிவரை தொகுத்து வழங்கியிருப்பது சிறப்புக்குரியது.
எஸ். எழில்வேந்தனுக்குப் பின்னர் மயில்வாகனம் சர்வானந்தா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதேவேளையில் அறிவிப்பாளர் குணராசாவும் நிகழ்ச்சித் தொகுப்புக்கு இடையிடையே உதவி வந்துள்ளார். 1997ஆம் ஆண்டு பிற்பகுதியிலிருந்து இளையதம்பி தயானந்தா ‘வாரம் ஒரு வலம்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இணைத் தொகுப்பாளராகவிருந்த முருகேசு ரவீந்திரன், தொகுப்பாளரான தயானந்தா இல்லாதவேளைகளில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். தயானந்தா தொகுப்பாளராகவிருந்த காலத்தில் அறிவிப்பாளர் அகமட் எம். நசீர் இந்த நிகழ்ச்சித் தொகுப்புக்கு பெரிதும் உதவி வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் சகல பகுதிகளிலிருந்தும் சமகாலத் தகவல்கள், அந்தந்தப் பகுதிகளில் காணப்படும் பிரச்சினைகள், பொதுமக்களின் தேவைகள் என்பனவற்றை உடனுக்குடன் நேரடியாக அறிந்து கொள்வதுடன், அது தொடர்பாக உடனடியாகவே வானொலி நிலையத்திலிருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, அத்தகைய குறைபாடுகளுக்கு தீர்வு அல்லது தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதே இந்த வாரம் ஒரு வலம் நிகழ்ச்சியாகும். பல்வேறு சந்தர்ப்பங்களில் அமைச்சர்களுடனும் தொடர்பு கொள்ளப்பட்டு, தேவையான தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
2002 மார்ச் மாதத்திலிருந்து வாரம் ஒரு தொகுப்பாளர் என்ற ரீதியில் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் செயற்பாடு நடைமுறைக்கு வந்தது.
‘வாரம் ஒரு வலம்’ ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகி வந்தவேளையில், ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்களில் ‘நாள் மகிழ் அரங்கம்’ என்ற பெயரில் மற்றுமொரு சமகால விவகார நிகழ்ச்சி 2000ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதியிலிருந்து (திங்கள் முதல் வெள்ளி வரை) ஒலிபரப்பாகத் தொடங்கியது. 2003 ஜூன் மாதத்துடன் ‘வாரம் ஒரு வலம்’, ‘நாள் மகிழ் அரங்கம்’ ஆகிய இரு நிகழ்ச்சிகளும் நிறுத்தப்பட்டன. இதற்குப் பதிலாக, இவ்விரு நிகழ்ச்சிகளும் ஒன்றிணைக்கப்பட்டு, மற்றொரு வடிவமாக ‘விடியும் வேளை’ என்ற பெயரிலான புதிய நிகழ்ச்சி 2003 ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து தேசிய சேவையில் தினமும் ஒலிபரப்பாகத் தொடங்கியது.
நீண்டகாலமாக ஒலிபரப்பாகி வந்த ‘விடியும்வேளை’ நிகழ்ச்சிக்குப் பதிலாக, மற்றுமொரு வடிவமாக – 2022 ஒக்டோபர் 24ஆம் திகதியிலிருந்து ‘காலைக் கதம்பம்’ என்ற பெயரிலான நிகழ்ச்சி தேசிய சேவை, தென்றல் ஆகிய இரு சேவைகளிலும் ஏக காலத்தில் ஒலிபரப்பாகி வந்தது. 2023 ஜனவரி 2ஆம் திகதியிலிருந்து ‘காலைக் கதம்பம்’ தென்றல் சேவையில் மட்டும் ஒலிக்கத் தொடங்கியது. அதேநேரம் தேசிய சேவையில் கொழும்பு சர்வதேச வானொலி நிகழ்ச்சி இணைக்கப்பட்டது. இந்த வருட ஆரம்பத்தில் தென்றல் சேவையில் ஒலிபரப்பாகி வந்த ‘காலைக் கதம்பம்’ நிகழ்ச்சியும் நிறுத்தப்பட்டுவிட்டது.
இந்த நிலையிலேயே, இலங்கை வானொலி தேசிய சேவையில், அந்நாளில் வரலாற்றுச் சாதனை படைத்த ‘வாரம் ஒரு வலம்’ மீள் அறிமுகமாகி மாலைநேர நிகழ்ச்சியாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அரச வானொலியொன்று முதன்முதலாக உலகளாவிய ரீதியில், ஒருமொழி பேசுகின்ற தனியார் வானொலிகளுடன் இணைந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் நேரடி நிகழ்ச்சியாகவும் இது முக்கியத்துவம் பெறுவதையும் சிறப்பாகக் குறிப்பிடலாம்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக பல்வேறு சந்தர்ப்பங்களில் பதவி வகித்துள்ள – இப்போதும் பணியாற்றிவரும் ஹட்சன் சமரசிங்கவின் நீண்டகால ஒலிபரப்புத்துறை மீதான ஈடுபாடும் – அனுபவ முதிர்ச்சியும் காரணமாக, அவர் இத்தகையதொரு காத்திரமான நிகழ்ச்சியை தமிழ் தேசிய சேவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் கொண்டவராக, அதற்கான அங்கீகாரத்தை வழங்கியிருப்பதை இங்கு சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்லலாம். மூத்த ஒலிபரப்பாளர் – இலங்கை வானொலியின் முன்னாள் அறிவிப்பாளர் – அந்நாளில் ‘வாரம் ஒரு வலம்’ நிகழ்ச்சியை நீண்டகாலமாக தொகுத்து வழங்கியவர் என்ற சிறப்புக்குரிய இளையதம்பி தயானந்தா மீளவும் அழைக்கப்பட்டு, மீள்அறிமுக நிகழ்ச்சியை தயாரித்து தொகுத்து வழங்கும் சந்தர்ப்பம் கையளிக்கப்பட்டிருப்பது இலங்கை வானொலி நேயர்களுக்கு பெருமகிழ்ச்சிக்குரிய விஷயம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவரின் விருப்பத்திற்கமைய, தமிழ்ச்சேவைப் பணிப்பாளர் ஆர். கணபதிப்பிள்ளை தேவையான ஒத்துழைப்பை வழங்கியிருப்பதுடன், அதற்கான நேரத்தையும் ஒதுக்கி தேசிய சேவையில் நிகழ்ச்சியை ஒலிக்கச் செய்திருக்கிறார்.
2024 ஜூன் மாதம் முதலாம் திகதி. மாலைப்பொழுது மறைந்து இரவுப் பொழுது தோன்றும் நேரம். “இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் – தேசிய சேவை. நேரம் ஏழு மணி” என்று கம்பீரமான குரலுடன் தனது அறிவிப்பைத் தொடங்குகிறார் இளையதம்பி தயானந்தா. “வாரம் ஒரு வலம் – உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் இலங்கை வானொலியின் நேரலை நிகழ்வு” என்று மகுடவாசகமாகக் குறிப்பிட்டு, “சங்ககாலத்து கணியன் பூங்குன்றனாரின் கவிவரிகளுடன் நிகழ்ச்சியை ஆரம்பிக்கிறோம்” என்று அறிவித்தார்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கவி வரிகள் ஒலித்தன. அதற்கு விளக்கமும் தந்தார் நிகழ்ச்சித் தொகுப்பாளர். யாழ்ப்பாண பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளர் நவரட்ணம் பரந்தாமன் குரலில் பாடல் இடம்பெற்றது.
முதலில் இலங்கை வானொலி தமிழ்ச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் திருமதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அவுஸ்திரேலியா சிட்னியிலிருந்து நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழக இதழியல், தொடர்பியல்துறை பேராசிரியர் தங்க ஜெய்சக்திவேல் வாழ்த்து தெரிவித்ததுடன், அவரது கருத்துக்கள் நேர்காணலாக அமைந்திருந்தது. “நூற்றாண்டை எட்டப்போகும் இலங்கை வானொலியுடன் தமிழக நேயர்களுக்கு நெருங்கிய தொடர்புண்டு. தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் இலங்கை வானொலி ஒலித்துக் கொண்டிருந்த பெருமை உண்டு.” என்று சிறப்பாகக் குறிப்பிட்டார். இவர் சில வருடங்களுக்கு முன் ‘பன்முகப் பார்வையில் இலங்கை வானொலி’ என்ற நூலை வெளியிட்டு எங்கள் வானொலிக்கு பெருமை சேர்ந்தவர் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது பொருத்தமானது.
இவரைத் தொடர்ந்து, எங்கள் தாய் வானொலி பெற்றெடுத்த புதல்வர்களான பி. விக்னேஸ்வரன், க. சிவசோதி ஆகிய இருவரும் கனடாவிலிருந்து இணைந்துகொண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
இலங்கை வானொலியில் மட்டுமன்றி, ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையின் தமிழ்ப் பிரிவுத் தலைவராகவும் பணியாற்றிய பி. விக்னேஸ்வரன் இப்போது கனடாவிலும் ஒலி / ஒளி ஊடகப் பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இவர் தனது வானொலி மற்றும் தொலைக்காட்சி அனுபவங்களை தொகுத்து, அண்மையில் ‘நினைவு நல்லது’ என்ற நூலொன்றை வெளியிட்டிருக்கிறார்.
கனடா தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் க. சிவசோதி இலங்கை வானொலியின் முன்னாள் அறிவிப்பாளர். இப்போது இளையபாரதி என்ற பெயரில் கனடாவில் வானொலி சேவையை நடத்திவரும் இவர், அங்குள்ள தமிழ் நேயர்களது பேரபிமானம் பெற்றுத் திகழுகிறார்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒலிக்கும் அனைத்துலக தமிழ் ஒலிபரப்பு நிலையத்தை நடத்திவரும் எங்கள் தாயகத்தைச் சேர்ந்த எஸ். கே. ராஜென் வழங்கிய வாழ்த்துச் செய்தியில் “உலகத் தமிழ் வானொலிகள் ஒன்றிணைந்து ஒலிபரப்புச் சேவையை நடத்த வேண்டும் என மூத்த ஒலிபரப்பாளர் பி.எச். அப்துல்ஹமீத் அன்று விரும்பியது போலவே இப்போது வாரம் ஒரு வலம் அமைந்திருப்பது சிறப்புக்குரியது” என்று குறிப்பிட்டிருந்தார்.
நோர்வேயிலிருந்து ‘றேடியோ தமிழ்’ வானொலியில் தேன் தமிழ் ஓசை நிகழ்ச்சியை நடத்திவரும் ஜூலியஸ் அன்ரனி, கனடாவிலிருந்து ரைம் எப்.எம் வானொலி ஒலிபரப்பாளர் தயா கதிர்காமநாதன் ஆகியோரும் வாரம் ஒரு வலம் நிகழ்ச்சியில் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். இதேவேளை ஜெர்மனியிலிருந்து நேரலையாக ஐரோப்பிய தமிழ் வானொலியும் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை வானொலியில் ‘வாரம் ஒரு வலம்’ நிகழ்ச்சி தோற்றம் பெறுவதற்கு காரணமாகவிருந்த எஸ். எழில்வேந்தன் அவுஸ்திரேலியா சிட்னியிலிருந்து நிகழ்ச்சியில் இணைந்து கொண்டார். தனது ஒலிபரப்பு வாழ்க்கை ஆரம்பமாவதற்கு களமாகவிருந்த தாய்வீடான இலங்கை வானொலி, தான் வெளிநாடுகளில் ஒலிபரப்புத்துறை சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்வதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்ததை நன்றியுடன் நினைவுகூர்ந்தார். இங்கிலாந்தில் தான் பெற்றுக் கொண்ட பயிற்சியின்போது கற்றறிந்த விடயங்களுக்கு அமைய நிகழ்ச்சியொன்றை தயாரித்து வழங்கப்போவதாக அப்போதைய பணிப்பாளர் நாயகத்திடம் கேட்டபோது, அதற்கு அவர் அனுமதி வழங்கியதையும் எடுத்துச் சொல்லி, இன்றைய நிகழ்வை அன்றைய நாட்களுக்கு கொண்டு சென்று நினைவூட்டி மகிழ்ந்தார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், இப்போது லண்டனில் வாழ்ந்து வருபவருமான மு. நித்தியானந்தன் தனது வாழ்த்துச் செய்தியில் “உலகின் மூலைமுடுக்கெல்லாம் எளிதாகச் சென்றடையும் சிறப்பு வானொலிக்கு உண்டு. முன்பெல்லாம் வானொலி நிகழ்ச்சிகளைப் பற்றிய விமர்சனங்களையும் கருத்துக்களையும் நேயர்கள் கடிதங்கள் ஊடாக எழுதியனுப்பினர். அவ்வாறு இப்போது அனுப்புவதில்லை. நேரடியாகவே அபிப்பிராயங்களை சொல்லக்கூடியதாக நிலைமை மாறிவிட்டது” என்று தெரிவித்தார்.
தினகரன் நாளிதழ் மற்றும் தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர், தமிழன் நாளிதழ் ஆசிரியர் இ. சிவராஜா ஆகியோரும் நிகழ்ச்சியில் இணைந்து கொண்டு வாழ்த்துச் செய்திகளை வழங்கியதுடன், “ஒரே நேரத்தில் உலக நாடுகளை இணைத்து தகவல்களை பரிமாற்றம் செய்யக்கூடியதான இந்த நிகழ்ச்சி மிகப் பயனுள்ளதாக அமையும். நிகழ்ச்சியின் வளர்ச்சிக்கும் விருத்திக்கும் எங்கள் நாளிதழ்கள் ஊடாக தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தனர்.
மாலை 7.00 மணிக்கு ஆரம்பித்த ‘வாரம் ஒரு வலம்’ நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் இரவு 8.00 மணியை எட்டிப் பிடித்து விட்டதால் நிகழ்ச்சியில் இணைந்து கொள்வதற்கு காத்திருந்த ஒருசிலருக்கு சந்தர்ப்பம் கிடைக்காதது வருத்தத்திற்குரியது. அவர்கள் அனைவருக்கும் எதிர்வரும் வாரங்களில் நிச்சயமாக இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
வாரம் ஒரு வலம் நிகழ்ச்சியை தயாரித்து தொகுத்து வழங்கும் இளையதம்பி தயானந்தா என்பவர் யார்? என சில நேயர்கள் கேட்கக்கூடும். இவர் பலருக்கு அறிமுகமாக இருந்தாலும், சமகால நேயர்களுக்கு இவரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இவர் 1993ஆம் ஆண்டிலிருந்து 2004ஆம் ஆண்டுவரை இலங்கை வானொலி தேசிய சேவையில் அறிவிப்பாளராகவும், நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். கவிதைக் கலசம் வானொலி குறுக்கெழுத்துப் போட்டி, சித்தத்தின் உள்ளே (உளவியல் தொடர்), தேன் தமிழ் நாதம், அருணாசலக் கவிராயரின் கீர்த்தனைகளைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட இராம நாடகம் (இசை நாடகத் தொடர்) போன்ற பல நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார். பல துறைசார் அறிஞர்களையும், கலைஞர்களையும், அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து நேர்காணல்களை நடத்தியிருக்கிறார். ஆலய உற்சவங்கள் மற்றும் தேசிய நிகழ்வுகளின்போது நேர்முக வர்ணனைகளிலும் இவர் பங்கு கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், இலங்கை வானொலியிலிருந்து விலகிச் சென்ற இவர் இரு வருடங்கள் – ஐரோப்பிய தமிழ் ஒளிபரப்பு நிலையமான வெக்ரோன் தொலைக்காட்சி சேவையின் இலங்கை கலையகப் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றினார். 2006ஆம் ஆண்டிலிருந்து ‘இருக்கிறம்’ என்ற மாதாந்த சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும், பின்னர் ‘வியூகம்’ என்ற மாதாந்த சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
2008ஆம் ஆண்டு லண்டன் சென்ற இவர், 2010ஆம் ஆண்டு முதல் லண்டன் பி.பி.ஸி தமிழோசை வானொலி லண்டனில் செயற்பட்ட காலம்வரை, அதில் இணைந்து பணியாற்றியிருக்கிறார். பின்னர் லண்டன் லைக்கா நிறுவனத்தின் ஆதவன் தொலைக்காட்சி சேவையின் பொறுப்பதிகாரியாக சில வருடங்கள் கடமையாற்றிவிட்டு, இலங்கை திரும்பி இலத்திரனியல் ஊடகப் பணியில் பங்காற்றி வருகிறார்.
இருதசாப்த காலத்திற்கு முன் யாழ். பல்கலைக்கழகம் ஆரம்பித்து நடத்திய ஊடக வளங்கள் பயிற்சி மையத்தில் முதலாவது கற்கைநெறியின் போது இ. தயானந்தா அங்கு விரிவுரையாளராக கடமையாற்றியிருக்கிறார். இது தவிர, கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஊடக கற்கை நிலையத்திலும் இவர் விரிவுரையாளராக சேவையாற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் ஒலிபரப்புச் சேவை நூற்றாண்டு வரலாற்றை அண்மித்துக் கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில், இலங்கை வானொலி தேசிய சேவையில் மற்றுமொரு காத்திரமான நிகழ்ச்சியாக தோற்றம்பெற்று உலகளாவிய ரீதியில் வலம்வரத் தொடங்கியிருக்கும் ‘வாரம் ஒரு வலம்’ பல்லாயிரக்கணக்கான உலகத் தமிழ் நேயர்களின் செவிகளுக்கு சென்றடைகிறது என்பது சிறப்புக்குரியது. இது இனிவரும் காலங்களில் மேலும் வளர்ச்சியும் எழுச்சியும் பெற்று நேயர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
- ஊரெழு அ. கனகசூரியர்