நாட்டின் அரசியலமைப்பை மதித்து அதன்படி செயற்பட வேண்டியது ஒவ்வொரு பிரஜையினதும் பொறுப்பாகும். அரசியலமைப்புக்கு முரணாகச் செயற்படுவதோ அல்லது கருத்துகள் வெளியிடுவதோ முறையானதல்ல.
எந்தவொரு அரசாங்கமும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று இலங்கையின் அரசியலமைப்பு கூறுகிறது. அரசியலமைப்பு இவ்வாறிருக்கையில், அதற்கு முரணான முறையில் சில அரசியல்வாதிகள் நடந்து கொள்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இலங்கையில் பிக்குகளுக்கான முதலாவது வைத்தியசாலை கிரிவத்துவாவவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டமை நினைவிருக்கலாம். ‘குருதேவ சுவ அரண’ என்ற பெயர் கொண்ட இந்நிலையம் கொஹுவளை விகாரையின் விகாராதிபதியாகவும், இலங்கை ரமண்ய நிக்காயாவின் தலைமைப் பதிவாளராவும் இருந்த மறைந்த வண. மாபாலகம சிறி சோமிஸ்ஸர நாயக்க தேரரின் எண்ணக்கருவுக்கு அமைய இலங்கை மற்றும் வெளிநாட்டு பிக்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து மருத்துவ வசதிகளையும் கொண்ட பிக்குகளுக்கென தனியான வைத்தியசாலையொன்று அமைக்கப்பட்டுள்ளமை சிறப்புக்குரியதாகும்.
இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றியிருந்தார். “நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் அவரவர் விருப்பப்படி ஒரு மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. மேலும் எந்த மதத்திலும் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்கான உரிமையும் உள்ளது. எந்தவொரு அரசாங்கமும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று நாட்டின் அரசியலமைப்பு கூறுகிறது.
அதனால் ஜனாதிபதி தலைமையிலான நிறைவேற்றுத்துறை, சபாநாயகர் தலைமையிலான சட்டவாக்கத்துறை, பிரதம நீதியரசர் தலைமையிலான நீதித்துறை உள்ளிட்ட மூன்று துறைகளும் பௌத்த கோட்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியது அவசியம். அதற்கான பொறுப்பு தற்போதைய அரசாங்கத்துக்கும் உள்ளது. எம்.பி.க்கள் அனைவரும் அரசியலமைப்பை பின்பற்றுவோம் என உறுதிமொழி எடுத்துள்ளோம். இதற்கு ஆதரவளிக்கத் தவறுவது அரசியலமைப்புக்கு எதிரானதாகும்” என்று ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை ஒரு ஜனநாயக நாடாகும். நாட்டின் அடிப்படை சட்டக் கட்டமைப்பாக அரசியலமைப்பே விளங்குகிறது. அதன்படி பௌத்த கோட்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியது அவசியம். இலங்கையின் அரசியலமைப்பு இவ்வாறிருக்கையில், அரசாங்கத்தையும் பௌத்தத்தையும் பிரிக்க வேண்டியது அவசியம் என்ற கருத்து இப்போது சிலரால் முன்வைக்கப்படுகிறது. அரசியலமைப்புக்கு முரணான இக்கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
அக்கருத்து பொருத்தமற்றதாகும். அரசியலமைப்பின் அடித்தளமான ஜனாதிபதி தலைமையிலான நிறைவேற்றுத் துறை, சபாநாயகர் தலைமையிலான சட்டவாக்கத் துறை, பிரதம நீதியரசர் தலைமையிலான நீதித்துறை உள்ளிட்ட மூன்று துறைகளும் பௌத்த கோட்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியதே அவசியமாகின்றது.
ஜனாதிபதி தனது உரையில், ‘சட்ட ஏற்பாடுகள் பற்றி விவாதிக்கலாம். கோட்பாடுகள் தொடர்பில் விவாதிக்க முடியாது. அரசாங்கம் என்ற வகையில் அதனைப் பின்பற்ற வேண்டும். இதை மாற்ற விரும்புவோர் அரசியலமைப்பைத்தான் மாற்ற வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட வேண்டும் என்றால் அந்த அரசியலமைப்பையே முதலில் மாற்ற வேண்டும் என்பதை முரண்பாடான கருத்துக் கொண்டோர் முதலில் புரிந்து கொள்வது அவசியம். அதனை விடுத்து அரசாங்கத்தையும் பௌத்தத்தையும் பிரிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைப்பது தவறானதாகும்.
ஜனநாயக நாடான இலங்கையின் அரசியலமைப்புக்கு உயரிய மதிப்பளித்துச் செயற்படுவது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.