பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக ஜெனரல் ஷவேந்திர சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பின் பேரில் இந்த மீள்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2387/43 என்ற இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2024ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி முதல் 2024 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை இந்த நியமனம் செல்லுபடியாகுமென மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி தொடர்பான சட்டத்தின் 03 ஆம் பிரிவின் கீழ் ஜெனரல் சில்வாவின் பதவிக் காலத்துக்கான நீட்டிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் 23வது தளபதியாகவும் பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதம அதிகாரியாகவும் கடமையாற்றிவந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவத் தளபதி பதவியை நிறைவு செய்ததையடுத்து, 2022 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
ஸாதிக் ஷிஹான்