- Black List பண்ணப்பட்டவர்களுக்கும் வாய்ப்பு
- நிதி மற்றும் கைத்தொழில் அமைச்சுகள் இணைந்து ‘RE ENERGISE’ என்ற பெயரில் இத்திட்டத்தை அமுல்படுத்துகின்றன
கோவிட்19 தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதில் சிரமங்களுக்குள்ளானவர்களுக்கு இந்த வாரம் முதல் 07 வீதம் சலுகை வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சும் கைத்தொழில் அமைச்சும் இணைந்து மேற்கொண்டுள்ள இந்தக் கடன் திட்டம் மீண்டும் வலுவூட்டல் (‘RE ENERGISE’) என பெயரிடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
இந்தக் கடன் திட்டத்தின் கீழ் நலிவுற்ற அல்லது முடங்கிய அல்லது தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியாத நிலையிலுள்ள எந்தவொரு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் அல்லது வர்த்தக நடவடிக்கைகளை மீள கட்டியெழுப்புவதற்கு ஊக்கமளிக்கப்படும் என செயலாளர் கூறினார்.
வர்த்தக வங்கிகளால் Black List க்கு உட்படுத்தப்பட்டவர்கள், இந்தத் திட்டத்தின் கீழ் கடனை எளிதாக பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்த செயலாளர், 05 வருட காலத்துக்குள் திருப்பி செலுத்த கூடிய வகையில் 50 இலட்சம் ரூபா வரையில் மீண்டும் வலுவூட்டல் (‘RE ENERGISE’) திட்டத்தின் கீழ் கடனை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
கடன் வழங்கப்படும் போது 02 இலட்சம் ரூபா வரையிலான தனிநபர் உத்தரவாதத்திலான கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதற்கு மேலுள்ள கடன்களுக்கு சொத்தை பிணையாக சமர்ப்பிக்க வேண்டும்.
மீண்டும் வலுவூட்டல் ‘RE ENERGISE கடன் திட்டம் தொடர்பான இறுதி நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை நிறைவடைந்தன. இதற்கமைய அரச வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் அடங்கலாக 10 வங்கிகளில் இந்தக் கடன்கள் வழங்கப்படவுள்ளன.
பிராந்திய அபிவிருத்தி வங்கி, மக்கள் வங்கி, இலங்கை வங்கி, சம்பத் வங்கி, செலான் வங்கி, கொமர்ஷல் வங்கி, கார்கில்ஸ் வங்கி, சனச அபிவிருத்தி வங்கி, ஹற்றன் நெஷனல் வங்கி மற்றும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி ஆகியவற்றினூடாக இந்தக் கடன்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்தக் கடன் திட்டத்தின் மற்றுமொரு அம்சமாக முதலீட்டு நடவடிக்கைகளுக்காக ஒரு கோடி 50 இலட்சம் ரூபா வரையிலான கடனுக்கு விண்ணப்பிக்க முடியும். அதற்கும் வட்டி 07 % . செலுத்தும் காலம் 10 ஆண்டுகள். மேலும் ஓராண்டு நிவாரணகால அவகாசம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.