பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்களுடன் நாளை திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் சிறந்த தீர்வை வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இதனை தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன்,
“தற்போது பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு துரதிஷ்டவசமான விடயம். ஏனெனில் இதனூடாக எதிர்கால சந்ததியினரான மாணவர்களே பாதிக்கப்படுகின்றனர். இதன் மூலம் நாளாந்தம் சுமார் 150 மில்லியன் ரூபா நேரடியான நட்டம் ஏற்படுகின்றது. இது நிதி ரீதியிலான நட்டம் மாத்திரமே. மனித நேரமும் இதன் மூலம் வீணடிக்கப்படுகிறது. எனவே இன்னும் ஒரு மணிநேரமேனும் வீணடிக்க அரசாங்கத்துக்கு அவசியமில்லை. பெற்றோர் என்ற வகையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இதன் பாதிப்பு தெரியும் என்று நினைக்கிறேன். எனவே அவர்களும் இதனை தொடர்ந்து கொண்டு செல்ல விரும்பமாட்டார்கள். இதற்கு சரியான தீர்வை எவ்வாறு எட்டுவது என்பதையே நாம் இப்போது பார்க்க வேண்டும்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு நிறைவேற்ற சுமார் 1.1 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது. நான் இது பற்றி விரிவான அறிக்கையொன்றை தருமாறு கேட்டிருக்கிறேன். மேலும் நாம் எவ்வாறு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்பது குறித்து நிதி அமைச்சு மற்றும் திறைசேரியின் உயர் அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளேன். நான் நாளை திங்கட்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளேன். ஒரு மத்திய நிலையிலிருந்து இதற்கு தீர்வு காண்பதே எனது எதிர்பார்ப்பாகும்.