ஒரு மாதமாகவே ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கிரிக்கெட் திருவிழா இன்றுடன் முடிவடைகின்றது. இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைசஸ் ஐதராபாத் அணியுடன் மோதவுள்ளது. சென்னையின் ஐபிஎல் கனவும் தகர்ந்துள்ளது. தோனி இனிமேல் விளையாடாவிட்டால் சென்னையின் எதிர்காலம் என்ன என்ற கேள்விக்குறியும் உள்ளது.
புதிய கேப்டன், ஏலத்தில் எடுக்கப்பட்ட புதிய வீரர்கள், முதல் வெற்றி, புள்ளிப்பட்டியலில் 3-ஆவது இடம் வரை ஏற்றம் என உற்சாகமாக ஐபிஎல் 2024 சீசனைத் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
வழக்கம்போல் இந்த முறையும் சிஎஸ்கே தான் சாம்பியன், ப்ளே ஆஃப் சுற்றில் வெல்லப்போகிறது, தோனியின் வழிகாட்டலில் சிஎஸ்கே கோப்பையை வெல்லும் என்றெல்லாம் ரசிகர்கள் சிஎஸ்கே அணியின் செயல்பாடு குறித்து புளங்காகிதம் அடைந்தனர்.
ஆனால், ஐபிஎல் தொடரில் உயிர்ப்பித்து நின்றிருக்க வேண்டிய முக்கியமான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் ஒட்டுமொத்த பலவீனமும் அம்பலமானது. முக்கியமான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்து ஐபிஎல் பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு வெளியேறியது 5 முறை சாம்பியன் வென்ற சிஎஸ்கே அணி.
2024 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 7 தோல்வி என 14 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட் 0.392 என 5ஆவது இடத்தைப் பிடித்து, ப்ளே ஆஃப் செல்லாமல் லீக் சுற்றோடு வெளியேறியது.
ஆனால், தொடக்கத்தில் முதல் 8 போட்டிகளில் ஒரு வெற்றி, அதன்பின் தொடர்ந்து 6 வெற்றிகளைக் குவித்து ஆர்சிபி அணி யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் சிஎஸ்கே-வைச் சாய்த்து ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றிருக்கிறது.
ஐபிஎல் தொடரின் முதல் பாதி சுற்று முடியும் போது ஆர்சிபி-யின் நிலையைப் பார்த்து, ஆர்சிபி வெளியேறிவிடும் என்று அந்த அணியின் ரசிகர்களே பேசத் தொடங்கி, கருத்துக்களைப் பதிவிட்டனர். ஆனால் அனைத்துக் கணிப்புகளையும் ஆர்சிபி அணி பொய்யாக்கி, ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றிருக்கிறது.
ஐபிஎல் வரலாற்றில் 2024 சீசன்தான் சிஎஸ்கே அணியின் 3வது மோசமான ஆட்டம் என்பது தெரியவந்துள்ளது. 2008-ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியின் ஐபிஎல் வெற்றி சதவீதம் குறைந்தபட்சம் 55 சதவீதத்துக்கு மேல் இருந்து, அதிகபட்சம் 68 சதவீதம் இருந்துள்ளது.
எந்தெந்த சீசனில் வெற்றி சதவீதம் குறைந்ததோ அந்த சீசனில் சிஎஸ்கே மோசமாக அடிவாங்கியது. குறிப்பாக 2020-ஆம் ஆண்டு சிஎஸ்கே வெற்றி சதவீதம் 42.86 ஆகவும், 2022-ஆம் ஆண்டில் சிஎஸ்கே வெற்றி சதவீதம் வெறும் 28.57 சதவீதமாகவும் இருந்தது. அதற்கு அடுத்தாற்போல் 2024 சீசனில் சிஎஸ்கே வெற்றி சதவீதம் 50 சதவீதம் இருந்துள்ளது.
ஆக, ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியின் மோசமான செயல்பாடாக 2024 ஐபிஎல் சீசன் அமைந்திருக்கிறது என்பதை புள்ளிவிவரங்கள் வாயிலாக அறியலாம்.
இதில் 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே லீக் சுற்றோடு வெளியேறியதற்கு முதல் காரணம், சிஎஸ்கே-வின் கேப்டன்சி மாற்றம் குறித்த அறிவிப்புதான். சிஎஸ்கே கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டு மீண்டும் தோனி நியமிக்கப்பட்ட குழப்பம் தோல்விக்கு இட்டுச் சென்றது.
அதேபோன்ற குழப்பம் 2024 சீசன் தொடக்கத்திலும் ஏற்பட்டது. ஐபிஎல் சீசன் தொடங்கும்வரை தோனிதான் கேப்டன் என்று அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த நிலையில் திடீரென ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது, அதிர்ச்சியையும், அவர் எவ்வாறு வழிநடத்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
அது மட்டுமல்லாமல் 2024 ஐபிஎல் சீசன் போட்டியின் இடையே டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் அறிவிப்பும் சிஎஸ்கே ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஏனென்றால் சிஎஸ்கே அணிக்காகக் கடந்த சில சீசன்களாகச் சிறப்பாக விளையாடிவரும் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணிக்கான டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெறவில்லை ஆனால், ஷிவம் துபே, ஜெய்ஸ்வால் இடம்பெற்றது குறித்து சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான். ஆனால், கெய்க்வாட் கடந்த சில சீசன்களாக சிறப்பாகச் செயல்பட்டநிலையில் அவருக்கான இடம் இந்திய அணியில் இல்லை.
ஆனால், இந்த ஆதங்கத்தை கெய்க்வாட் எந்த ஆட்டத்திலும் வெளிப்படுத்தவில்லை, அவரது பேட்டிங் திறன் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றபோதிலும், மனதளவில் அவருக்கு இது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும், அவரின் தன்னம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். அதேவேளை 2024 ஐபிஎல் தொடரில் எப்போதும் இல்லாத வகையில் பேட்டிங்கின் மூலம் பல உலகசாதனைகளை படைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு அணியில் இருக்கும் அதிரடி வீரர்களும் 200-250 ஸ்டிரைக்ரேட்டில் விளையாடி, பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிவருகின்றனர்.
’பந்துவீச்சாளர்கள் பாவம் பா’ என கூறுமளவு 30 முறைக்கும் மேல் 200 ரன்களுக்கு மேலான மொத்தஓட்டங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதுவரை ஐபிஎல் தொடரில் படைக்கப்பட்டுள்ள அனைத்து பிரமாண்ட சாதனைகளும் பேட்டில் இருந்து மட்டுமே வந்துள்ளன.
அதிவேகமாக 1000 சிக்சர்கள்
கடந்த ஐபிஎல் தொடர்களில் இல்லாதவகையில், நடப்பு ஐபிஎல் தொடரில் குறைவான பந்துகளில் 1000 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளது. ”பந்துவீச்சாளர்ளை யாராவது காப்பாத்துங்க” என பல ஜாம்பவான் வீரர்களே சொல்லுமளவு, நடப்பு ஐபிஎல்லில் பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
கடந்த 2023 மற்றும் 2022 ஐபிஎல் தொடர்களில் 15390 பந்துகள், 16269 பந்துகளில் 1000 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே சாதனையாக இருந்துவந்தது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் வெறும் 13079 பந்துகளிலேயே 1000 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளது.
டி20 வரலாற்றில் மிகப்பெரிய ரன்சேஸ்
கடந்த ஏப்ரல் 26ம் திகதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில், டி20 கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட மிகப்பெரிய ரன்சேஸ் பதிவுசெய்யப்பட்டது.
முதலில் ஆடிய கொல்கத்தா அணி 261 ரன்களை குவித்து எட்டவே முடியாத ஒரு இலக்கை பஞ்சாப் அணிக்கு நிர்ணயித்தது. ஆனால் நம்பிக்கையை கடைசிவரை விடாமல் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, வெறும் 18.4 ஓவர் முடிவிலேயே 262 ரன்களை குவித்து உலகசாதனை ரன்சேஸை பதிவுசெய்தது. இதற்கு முன்பு 259 ரன்களை சேஸ் செய்ததே டி20 கிரிக்கெட்டில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச ரன்சேஸ்ஸாக இருந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி அதை உடைத்து புதிய சாதனையை வரலாற்றில் எழுதியது.
ஒரு டி20 போட்டியில் மட்டும் 42 சிக்சர்கள்
262 ரன்கள் ரன்சேஸ் செய்த கொல்கத்தா மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஒரு டி20 கிரிக்கெட் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் பதிவுசெய்யப்பட்டன.
இரண்டுபுறமும் சிக்சர் மழைகளை பொழிந்த அணிகள் மொத்தமாக 37 பவுண்டரிகள், 42 சிக்சர்களை அடித்து உலகசாதனையை படைத்தனர். இதற்கு முன்பு 38 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே அதிகப்படியான சிக்சர்களாக இருந்தது.
287 ரன்கள் குவிப்பு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டர்கள், ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச மொத்த ஓட்டங்கள் என்ற 287 ரன்களை குவித்து மிரட்டிவிட்டனர்.
இது ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச டோட்டல் மற்றும் சர்வதேச அளவில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச டோட்டல் என்ற மிரமாண்ட சாதனையாக மாறியது.
அபிஷேக் சர்மா (35 சிக்சர்கள்), டிராவிஸ் ஹெட் (31), ஹென்ரிச் கிளாசன் (31) முதலிய மூன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்கள், 2024 ஐபிஎல் தொடரின் பெரிய ஹிட்டர்களாக மாறி ஒரு புதிய வரலாற்று சாதனைக்கு SRH அணியை அழைத்துச்சென்றனர்.
ஒரு ஐபிஎல் தொடரில் 146 சிக்சர்களை அடித்திருக்கும் சன்ரைசர்ஸ் அணி, இதற்கு முன்பு 2018ம் ஆண்டு சிஎஸ்கே அடித்திருந்த 145 சிக்சர்கள் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளது.