Home » மீரிகமவை உலுக்கிய கொலைகள்

மீரிகமவை உலுக்கிய கொலைகள்

சந்தேக நபரான மருமகன் கைது

by Damith Pushpika
May 26, 2024 6:17 am 0 comment

கடும் வறட்சி, உஷ்ணமான காலநிலையையடுத்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் கொட்டித்தீர்க்கிறது மேமாத பருவ மழை. போதாததற்கு மீரிகம பிரதேசத்தையே உலுக்கியது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் மரணம்.

மீரிகம மாலதெனிய பிரதேசத்தில் பணத்துக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

அது கடந்த 18ஆம் திகதி. நால்ல பொலிஸார் இரவு நேர ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது இவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஒருதரப்பினர் மீரிகம மாலதெனிய நோக்கியும் இன்னுமொரு தரப்பினர் மற்றொரு பக்கமும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

19ஆம் திகதி அதிகாலை 2 மணியிருக்கும். மாலதெனிய பகுதியிலிருந்து மீரிகம நோக்கி நபரொருவர் சைக்கிளை தள்ளிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தார். உடனே பொலிஸார் அவரை வழிமறித்தனர். அவருடைய சைக்கிளின் இரண்டு சில்லுகளிலும் காற்றுப் போயிருந்தது.

அவரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட போது அவரிடமிருந்து ரூ.255,000 பெறுமதியான தங்க மோதிரம் தங்கச் சங்கிலி மற்றும் குறடொன்றும் அவரிடமிருப்பது கண்டறியப்பட்டது.

அவர் அணிந்திருந்த ஆடையில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த கத்தி, கையுறை என்பவற்றையும் பொலிஸார் மீட்டனர்.

இதனையடுத்து சந்தேகம் வலுக்கவே, சந்தேகநபரை பொலிஸார் நால்ல பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர் அணிந்திருந்த சட்டைப் பையில் மாலதெனிய பிரதேசத்திலுள்ள வீடொன்றின் விலாசம் அடங்கிய காகிதத் துண்டு காணப்பட்டது.

இதனையடுத்து விசேட பொலிஸ் குழுவினர் அவ்விலாசத்தை தேடிச் சென்றனர். இதன்போதே, பொலிஸார் சென்ற வீட்டில் பெரும் அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளமை தெரியவருகின்றது.

பொலிஸார் அங்கு சென்ற போது வீட்டின் கதவுகள் அனைத்தும் திறந்திருந்தன. வீட்டுக்குள் நுழைந்த பொலிஸாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீட்டிலிருந்த அனைவரும் பரிதாபகரமான முறையில் கொலைசெய்யப்பட்டு ஆங்காங்கே வீழ்ந்து கிடந்தனர்.

அதுமட்டுமின்றி, மின்சார மானிக்கு சமீபமாக வீட்டுக்கு மின்சாரத்தை வழங்கும் பிரதான மின்கம்பி அறுந்து கிடப்பதையும் பொலிஸார் அவதானித்தனர்.

குறடினால் மின்சாரத்தை துண்டித்து அதன்பின்னர் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் ஊகித்தனர்.

மீரிகம மாலதெனிய பகுதியைச் சேர்ந்த நுகதேனி ஆராச்சிகே லயனல் பிரேமசிறி (வயது 78), அவரது மனைவி துலியாவதி ஜயலத் மெனிக்கே (80) மற்றும் மாற்றுத்திறனாளியான மகன் நுகதேனி ஆராச்சிகே சுமுது பிரியசாந்த (42) ஆகியோரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டிருந்தனர்.

தாயும் தந்தையும் அவர்கள் உறங்கும் அறையிலும் மாற்றுத்திறனாளியான மகனின் சடலம் வரவேற்பறையிலும் கிடப்பதை பொலிஸார் அவதானித்தனர். உயிரிழந்த மகனுக்கு இரத்தக் காயம் இருந்ததாகவும், அவர்கள் மூவரும் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகித்தனர்.

லயனல் என்றால் அந்த ஊரில் பெரியவர், சிறியவர் என அனைவருக்கும் தெரிந்தவர். அமைதியான யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் வாழ்ந்துவந்த மனிதர் என ஊரவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர் ஒரு திறமையான விவசாயி. 2002ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 20வருடங்கள் அவ்வூர் விவசாய அமைப்பின் செயலாளராக செயற்பட்டு வந்திருக்கிறார். ஊரிலுள்ள விகாரையின் அனைத்து புண்ணிய காரியங்களிலும் முன்னின்று செயற்பட்டார்.

அவர் சம்பாதிக்கும் பணத்தை மனைவி, மகனின் நலனுக்காக செலவழித்தார். தங்களுக்குப் பிறகு மாற்றுத்திறனாளியான மகனை பாராமரிக்க யாருமில்லை என்ற கவலை அவரை வாட்டியது. இதனால் மகனுக்காக ஒவ்வொரு நாளும் உழைப்பில் ஒரு சிறு தொகைப் பணத்தைச் சேமித்துவந்தார். எனினும் அதுவே அவருக்கு எமனாக மாறும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

லயனலின் மூத்த சகோதரியின் மகள் சிலாபத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்துள்ளார். அவர் பெயர் சமிந்த ரொஷான். 44 வயதான இவரின் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் மாலதெனியா பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தங்கியிருந்தனர். தொழில் நிமித்தம் ரொஷான் சிலாபத்தில் தங்கியிருந்தான். மனைவியையும் பிள்ளைகளையும் பார்ப்பதற்கு வாரம் ஒருமுறை வந்து செல்வது இவரின் வழக்கமாக இருந்தது. கடைசியாக மாலதெனியா வந்த போது லயனலின் வீட்டுக்கு வந்திருந்தார். தொலைக்காட்சி திருத்தவேலைகளுக்காக வந்து போனார். இதன்போது தனது வருமானத்தில் கிடைத்த பணத்தை லயனல் சரிபார்த்து எடுத்து வைத்துகொண்டிருந்தார். இதை அங்கு தொலைக்காட்சி திருத்த வேலைகளுக்காக வந்திருந்த மருமகன் ரொஷான் யன்னல் வழியாக பார்த்துகொண்டிருந்தான்.

சிலாபத்தில் தங்கியிருந்த இவன் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்டு பெருந்தொகை பணத்தை இழந்துள்ளார். இதனால் கடனாளியான இவர் லயனல் சேர்த்துவைத்திருக்கும் பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டினார்.

அதன்படி கடந்த 18ஆம் திகதி இருள் சூழ்ந்ததும் தனது மனைவிக்கு தெரியாமல் சிலாபத்திலிருந்து மாலதெனியா நோக்கி முச்சக்கர வண்டியில் வந்து லயனலின் வீட்டுக்கு பின்புறமாகவுள்ள பாழடைந்த வீட்டில் மறைத்திருந்தார். அதன்பின்னர் நள்ளிரவில் லயனலின் வீட்டுக்கு சென்று தனது திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற மின் இணைப்பை துண்டித்தார்.

அதன்பின்னர் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைகின்றார். கதவு உடைபடும் சத்தத்தை கேட்ட லயனல் தனது மனைவியிடம் ‘நீங்கள் கட்டிலிருந்து கீழே விழுந்து விட்டீர்களா? என கேட்டார். அதற்கு அவர் ‘இல்லை’ என பதிலளிக்க இருவரும் அதைப்பற்றி அலட்டிகொள்ளவில்லை. இது சந்தேகநபருக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது.

அவர் தனது திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினார். மூவரையும் கொலைசெய்துவிட்டு, பணம், நகை அனைத்தையும் கொள்ளையடித்துவிட்டு லயனலின் சைக்கிளையும் எடுத்துகொண்டு அங்கிருந்து வெளியேறினார்.

எனினும் மாலதெனியா பகுதியில் இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் அவருடைய பயணத்துக்கு இடையூறு ஏற்பட்டது. பொலிஸாரின் துல்லியமான விசாரணையில் சந்தேகநபர் எல்லா உண்மைகளையும் கக்கினார்.

கைவிரல் அடையாள திணைக்களத்தினர் வீட்டிலிருந்து சந்தேகநபரின் கைவிரல் அடையாளங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து பொலிஸாரின் இரவு நேர ரோந்து நடவடிக்கைகளினால்தான் இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியுமென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

வசந்தா அருள்ரட்ணம்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division