நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. கரையோரப் பிரதேசங்களில் கடும் காற்றுடன் மழை பெய்வதனால் ஆங்காங்கே அனர்த்தங்கள் சம்பவித்திருக்கின்றன.
முன்னரெல்லாம் மழைக்காலங்களின் போது வெள்ளம் காரணமாகவே மக்களுக்கு அனர்த்தங்கள் ஏற்படுவது வழமை. ஆனால் இம்முறை மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் உயிரிழப்புகளும், உடைமைச் சேதங்களும் அதிகளவில் ஏற்பட்டுள்ளன.
நாட்டில் தற்போது மழை மற்றும் கடும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இலங்கையில் கடந்த 19ஆம் திகதி முதல் நேற்றுமுன்தினம் வரை மரங்கள் முறிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் ஒருவார காலத்தில் வீதியோரங்களில் நின்றிருந்த சுமார் இருபது மரங்கள் கடும் காற்றினால் முறிந்து வீழ்ந்துள்ளன. இச்சம்பவங்களால் சிலர் காயமடைந்துள்ளதுடன், வாகனங்களும் சேதமடைந்துள்ளன. கொழும்பின் சில பகுதிகளில் வீதியோரம் விருட்சமாக நிற்கின்ற மரங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அழகுக்காக நடப்பட்டவையாகும். சில இடங்களில் இருநூறு வருடகால பழைமை வாய்ந்த மரங்களும் காணப்படுகின்றன.
இவ்வாறான மரங்களும் ஆபத்து மிக்கவையாகும். அம்மரங்கள் சரிந்து விழுமானால் ஏற்படக் கூடிய அனர்த்தங்களை நினைத்துப் பார்க்க முடியாது. இந்நாட்களில் கடும் காற்று வீசுவதால் கொழும்பு மாத்திரமன்றி ஏனைய பிரதேசங்களிலும் வீதியோரம் நிற்கின்ற மரங்கள் குறித்து மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
இதேவேளை மரங்கள் முறிந்து வீழ்வதால் ஏற்படுகின்ற சேதங்களைத் தடுக்கும் வகையிலான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்திருக்கின்றார்.இலங்கையில் நிலவுகின்ற சீரற்ற வானிலை தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டின் 18 மாவட்டங்களில் 9688 குடும்பங்களைச் சேர்ந்த 35,796 பேர் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
சீரற்ற காலநிலையின் போது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். தங்களது உயிரை மாத்திரமன்றி, உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்ளத் தவறக் கூடாது.