இந்தியாவில் கோடை மழை தொடங்கி குளிச்சியான சூழல் ஏற்பட்டாலும் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையின் சூடு இன்னும் தணியாமலே இருக்கிறது. கருத்து மோதல்களுடன் கட்சித் தலைவர்கள் தேர்தல்களத்தில் பயணித்து வருகிறார்கள்.
இந்தியாவில் அடுத்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற போட்டியில் காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.கவும் தங்களின் தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டு போனதை விட ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொள்வதிலேயே அதிக கவனம் எடுத்துக் கொள்கின்றன.
மக்களுக்கு எதிர்காலத்தில் என்ன நன்மைகள் செய்யப் போகிறோம் நாட்டின் வளர்ச்சிக்கு என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறோம் என்பதெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு காங்கிரஸ் கூட்டணியில் இருப்பவர்கள் ஏன் அதானி, அம்பானி பற்றி பேசுவதில்லை? அவர்களுடன் தேர்தல் ரகசிய உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டார்களா? என்று ஆளும் கட்சியான பா.ஜ.க குற்றச்சாட்டை முன்வைக்கிறது. இதற்கு பதிலடியாக ஆட்சியில் இருந்த பத்து வருடமாக அதானி, அம்பானி பற்றி பேசாதவர்கள் இப்போது ஏன் பேசுகிறார்கள்? தோல்வி பயத்தில் இந்தியா கூட்டணி உறுதியாகிவிட்டது என்பது தெரிந்த உடன் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அதானி அம்பானியை உதவிக்கு அழைத்துள்ளார்களா என்று காங்கிரஸ் கட்சியும் பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13, ஆகிய திகதிகளில் 4. கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன.
இறுதியாக ஜூன் 1 வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் கட்சித் தலைவர்களின் பரப்புரையும் வேகம் எடுத்துள்ளது. இறுதி வாக்குப் பதிவு நேரத்தில் மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்து டெல்லி முதலைமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் பரப்புரையில் ஈடுபட உயர்நீதி மன்றம் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி சிறையிலிருந்து விடுவித்துள்ளது
கேஜ்ரிவால் சிறையிலிருந்து வெளியே வந்த மறுநாளே, தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கி விட்டார்.
சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் சர்வாதிகாரத்திலிருந்து நாட்டைக்காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்தது ஆம் ஆத்மா கட்சியினரை உட்சாகப்படுத்தினாலும், இந்தியா கூட்டணியில் பெரிய வரவேற்பைப் பெற்றதாக தெரியவில்லை, கேஜ்ரிவாலின் தேர்தல் பரப்புரையில் ஆளும் கட்சியான பா.ஜ.க மீதான எதிர்ப்பு மட்டுமே கூடுதலாக இருந்தது.
இது தேர்தல் வெற்றிக்கு பலன் தருமா என்று உறுதியாக சொல்ல முடியாது. ஏனென்றால், கேஜ்ரிவால் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டவர் என்று பா.ஜ.க.வின் தொடர் பரப்புரையால் மக்கள் மத்தியில் எதிர்மறையான எண்ண அலையும் வீசலாம் என்பதையும் அவதானிக்க வேண்டியுள்ளது.
தேர்தல் பரப்புரைகள் தொடங்கிய காலத்திற்கும், வாக்குப் பதிவுகள் நடக்கத் தொடங்கிய பின்னும் மக்கள் மத்தியில் கட்சிகளுக்கான ஆதரவு ஏற்றமும் இறக்கமுமாக தான் இருக்கிறது.
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளார் யார்? என்ற பா.ஜ.க.வின் கேள்விக்கு காங்கிரஸ் கட்சியினரிடம் பதில் இல்லைதேர்தல் முடிவுக்குப் பிறகு தெரிவிக்கலாம் என்ற காங்கிரஸின் நிலைப்பாடாக இருப்பது வெற்றிக்கான தடையாக இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக பா.ஜ.க ஆட்சியில் இருப்பதற்கான பலமே காங்கிரஸ் கட்சியின் பலவீனம் தான், என்று அரசியல் நோக்கர்களின் கருத்தையும் புறந்தள்ளிவிட முடியாது.
தென்னிந்திய ஆதரவையும், வட இந்திய ஆதரவையும் ஒப்பிட்டு பார்த்தால் பா.ஜ.க பக்கமே அதிக எண்ணிக்கையிலான ஆதரவு இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மீதான அதிருப்தியில் புதிதாக உருவாக்கப்பட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியில் இணைந்திருந்தாலும், தங்களின் பலம் மாநில அரசியலுக்கு மட்டுமே முக்கியம் என்பதில் உறுதியாக இருப்பதால், தேசிய அரசியல் மீதான கவனம் குறைவாக இருப்பதையே காண முடிகிறது.
தேசிய அரசியலுக்கு இந்தியா கூட்டணியில் இணைந்திருந்தாலும், மாநில அரசியலில் எதிரும் புதிருமாக இருப்பதும் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம்.
கடந்த இரண்டு தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த பெரிய வெற்றி, இந்த முறையும் கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது, ஏனென்றால் கடந்த பத்தாண்டு கால பா.ஜ.க வின் ஆட்சியில் சில முரண்பாடான நடவடிக்கையால் மக்கள் மத்தியில் சில அதிருப்தியும் இருக்கிறது. குறிப்பாக விவசாயிகள் முன்னெடுத்த நாடு தழுவிய போராட்டம் இன்றும் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளார்களை பரப்புரையில் ஈடுபடுவதை மக்கள் தடுத்து வருகின்றனர்.
அங்கே காவல்துறையினரின் பாதுகாப்புடனேயே, பரப்புரையில் ஈடுபட முடிகிறது. இந்தத் தாக்கம் அருகில் உள்ள மாநிலங்களிலும் பா.ஜ.க வுக்கான ஆதரவைப் பாதிக்கலாம்.
ஆனால், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இடையே நேரடியாக தேர்தல் மோதல் நடந்த ராஜஸ்தான். மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம், ஹரியாணா, கோவா, உத்தராகண்ட், அசாம், ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க மாபெரும் வெற்றியை ருசித்துள்ளது. வட இந்தியாவில் முக்கிய மாநிலங்களான உத்திரபிரதேசம், மற்றும் பீகாரில் பா.ஜ.க வும் காங்கிரஸும் தங்களுக்கு ஆதரவான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் பா.ஜ.க கூட்டணிக்கு இருக்கும் பலம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்பதும் உண்மையே.
உத்திரபிரதேசத்தில் கடந்த முறை காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. ஆனால், இம்முறை சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து களம் இறங்கியுள்ளது. இது மட்டுமே காங்கிரஸுக்கு உள்ள ஆதரவு. அதேசமயம் மேலும் சில மாநில கட்சிகள் சமாஜ்வாதி கட்சியின் கூட்டணியை விட்டு விலகி தற்போது பா.ஜ.க வுடன் கூட்டணி அமைத்துள்ளன.
மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமானால், வடக்கே அக்கட்சி பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும். இந்த சூத்திரத்தை பா.ஜ.க நன்றாக புரிந்து கொண்டு செயல்பட்டு வருவதால் கடந்த இரண்டு மக்களவைத் தேர்தலிலும் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. இது போன்ற யுத்திகள், காங்கிரஸிடம் இல்லை என்பதாலே பலவீனப்பட்டுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.
தற்போதுள்ள சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு தெலுங்கான மற்றும் கர்நாடகாவில் ஆதரவு இருக்கிறது.
இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே தற்போது ஆட்சியில் இருப்பதால் மக்களவைத் தேர்தலும் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு கூடுதலாக இருக்கிறது.
இதேபோல மகாராஷ்டிராவிலும் உத்தவ் தாக்கரே இணைந்ததால் காங்கிரஸுக்கு பலம் என்றே சொல்லலாம்.
டெல்லி மற்றும் ஜார்க்கண்டின் தோழமைக் கட்சிகளான ஆம் ஆத்மி மற்றும் ஜே.எம்.எம். கட்சிகளை காங்கிரஸ் நம்பிருந்தாலும் இந்த இரண்டு கட்சிகளின் தலைவர்களான அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் ஆகிய இருவர் மீதும் ஊழல் வழக்கு இருப்பதால், இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவைத் தரலாம்.
மேற்குவங்கத்தில், மம்தா பானர்ஜி, ஒடிசாவில் நவீன்பட்நாயக், உத்திரபிரதேசதில் அகிலேஷ் யாதவ், பிஹாரில் லாலு பிரசாத் யாதவ், மற்றும் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் இவர்களின் ஆதரவை மட்டுமே வைத்து காங்கிரஸ் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
பாத்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சிமாற்றம் வரும் என்பதே முந்தைய கால ஆரசில் நிலவரமாக இருப்பதால் தேர்தல் முடிவுக்காக இந்திய மக்களும் காத்திருக்கின்றனர்.