செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனத்தைச் செலுத்துவது சட்டத்தில் தண்டனைக்குரிய குற்றமாகும். சம்பந்தப்பட்ட நபருக்கு அந்த வாகனத்தைச் செலுத்துவதற்கான தரப்படுத்தப்பட்ட தகுதிகள் உள்ளன என்பதே அந்தச் சாரதி அனுமதிப்பத்திரத்தின் மூலம் கருதப்படுகின்றது. அவ்வாறில்லாவிட்டால் அந்த வாகனத்தை அவரால் வீதியில் செலுத்த முடியாது. சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கான மருத்துவச் சான்றிதழும் அவசியமாகும்.
நமது நாட்டில் வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்வது அவ்வளவு கடினமானதல்ல. இன்று எல்லா இடங்களிலும் சாரதிப் பயிற்சி நிலையங்கள் உள்ளன. காலை முதல் மாலை சூரியன் மறையும் வரைக்கும் ‘L’ அட்டை பொருத்தப்பட்ட வாகனங்கள் பயிற்சிகளை வழங்குகின்றன. எமது நாட்டு இளைஞர்கள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதால் மருத்துவச் சான்றிதழ் பெறுவதும் கடினமானதாக இல்லை. எனினும் இவை அனைத்தையும் முடித்துக் கொண்டு சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்குச் செல்லும் போது மோட்டார் வாகனத் திணைக்களத்தில் கணிசமான நேரத்தைச் செலவிட வேண்டிய நிலை சில காலமாக நிலவியது. இது பெரும் தலையிடியாக இருந்து வந்தது. அவ்வாறான நேரங்களில் சுற்றியிருக்கும் ‘தரகர்களின்’ கைகளை நிரப்பி, தமது வேலையை விரைவாக முடித்துக் கொள்வதற்கு அனேகமானோர் முயற்சி செய்தனர். சில சந்தர்ப்பங்களில் அந்த தரகர்கள் விண்ணப்பத்தாரிகளின் அனைத்து விண்ணப்பங்களையும் பெற்றுக் கொண்டு காணாமல் போய்விடுகின்றனர். அவற்றை மீண்டும் தேடிக் கொள்வதற்கு இன்னுமொரு தரகரின் பின்னால் அலைய வேண்டிய நிலை இருந்தது.
இவ்வாறான தொடர் செயற்பாடுகளுக்கு தற்போது முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஒரு நாள் சேவை மற்றும் பொதுமக்களுக்கு விரைவான சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் இவை அனைத்துமே தேவையற்றுப் போயின.
இவ்வாறு மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்திற்கு வரும் பொதுமக்கள் நிம்மதிப் பெருமூச்சை விடும் வகையில் திணைக்களத்தின் சேவைகள் திட்டமிடப்பட்ட போதிலும், கொவிட் தொற்று நோய்க் காலத்தின் பின்னர் இந்நாட்டுக்கு பொருட்களின் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சாரதி அனுமதிப்பத்திரப் பிரச்சினை மற்றுமொரு பக்கம் தீவிரமடைந்தது. அதற்கு காரணம் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான அட்டைகள் இல்லாததேயாகும்.
இதனால் புதிதாக சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், தமது சாரதி அனுமதிப் பத்திரங்கள் காலாவதியானதால் அதனைப் புதுப்பித்துக் கொள்வதற்காக விண்ணப்பித்தவர்கள், சாரதி அனுமதிப் பத்திரங்களில் தகவல்கள் அழிந்து போனதால் புதிதாக சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையுடைய சாரதிகள், தமது சாரதி அனுமதிப் பத்திரங்களில் புதிதாக வாகன வகைகளை இணைத்துக் கொள்வதற்கான தேவையுடைய சாரதிகள் மற்றும் தமது சாரதி அனுமதிப்பத்திரங்கள் காணாமல்போன சாரதிகளும் இதன் காரணமாக அனுபவித்த சிரமங்கள் ஏராளம்.
இந்த நிலைமைக்கான தீர்வைத் தேடுவதற்கு மோட்டார் வாகனத் திணைக்களத்திற்கு முடியாமல் போனது, காரணம் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகள் இல்லாததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
அதுவரைக்கும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இலங்கை இராணுவத்தினராலேயே வழங்கப்பட்டு வந்தன. சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகள் இல்லாமல் அவர்களாலும் இந்தச் சேவையினை வழங்க முடியாமல் போனது.
இதன் காரணமாக, சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்து, எழுத்துப் பரீட்சையில் சித்தியடைந்து, நடைமுறைத் தேர்விலும் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, சாரதி அனுமதிப்பத்திரம் கிடைக்கும் வரைக்கும் செல்லுபடியாகும் ஒரு வருடத்திற்கான ஆவணத்தை, மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் வழங்க வேண்டியிருந்தது.
எனினும் ஒரு வருடம் கடந்தும் முறையாக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்க முடியவில்லை. இதற்கான அட்டைகள் முறையாகக் கிடைக்காமையினால் அத்தியவசியமான சந்தர்ப்பங்கள் தவிர அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு திணைக்களம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. பின்னர், ஒரு வருட காலத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடி காலம் வழங்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. இது சாரதிகளுக்கும், பொலிஸாருக்கும் பெரும் தலையிடியாக மாறியது
இவ்வாறு, ஒட்டுமொத்த சமூகமும் பெரும் சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும் முகங்கொடுக்க வேண்டியிருந்த சந்தர்ப்பத்தில் புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கையையும் தொடர வேண்டியிருந்தது.
இந்தச் செயற்பாடுகள் யாவும் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், நாளுக்கு நாள் சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் பாரியளவில் குவியத் தொடங்கினவே தவிர, அதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
நாளுக்கு நாள் தீவிரமடைந்த இந்தப் பிரச்சினை தொடர்பில் மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க ஆகியோரின் முயற்சியின் கீழ் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஆகியோரின் விசேட கவனத்தின் பின்னர் இப்பிரச்சினைக்கு துரிதமான தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உணரப்பட்டது.
அந்நேரத்தில் வழங்கப்படாதிருந்த சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான 957,268 விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுவதற்காகக் குவிந்திருந்திருந்தது. இது அன்றாடம் புதிதாக கிடைக்கும் விண்ணப்பங்களுக்குப் புறம்பானவையாகும். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட முயற்சி மற்றும் கலந்துரையாடல்களின் பின்னர் ஆறு மாதங்களுக்குள் இந்த சாரதி அனுமதிப்பத்திரங்களை விரைவாக அச்சிட்டு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் அச்சிடுவதற்குத் தேவையான அட்டைகளை இறக்குமதி செய்ததன் பின்னர் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்நேரம் 2022 மார்ச் 01ஆம் திகதியிலிருந்து 2023 நவம்பர் 30ம் திகதி வரையில் அச்சிட வேண்டியிருந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 957,268 ஆகும். இந்த சாரதி அனுமதிப்பத்திரப் பிரச்சினைக்கு இவ்வாறு துரித தீர்வை வழங்குவதற்கு போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லஸந்த அழகியவன்ன, அமைச்சின் செயலாளர் ஆகியோரினது ஆலோசனைக்கு அமைய மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க மற்றும் மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் (சாரதி அனுமதிப்பத்திரம்) வசந்த ஆரியரத்ன மற்றும் மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் (சாரதி அனுமதிப்பத்திர அச்சுப் பிரிவு) சுரங்கி பெரேராவின் உத்தரவில் இந்த சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய இம்மாதம் 08ஆம் திகதிமுதல் 482,904 சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிட்டு அவற்றை சாரதிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இன்னமும் 474,364 சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிட்டு வழங்க வேண்டியுள்ளது. இது ஒக்டோபர் மாதமளவில் முடிக்கப்படும்.
எனினும், இந்தப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க, மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் (சாரதி அனுமதிப்பத்திரம்) வசந்த ஆரியரத்ன, மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் (சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பிரிவு) சுரங்கி பெரேரா ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர். அதற்கு ஏனைய அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கினர்.
அதன்பிரகாரம், சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் துறையின் பணிக்காக மேலதிகமாக 26 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு 24 மணி நேரமும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடும் பணிகள்
முன்னெடுக்கப்பட்டன. இதன் மூலம் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இதுவரை வழங்கப்படாமல் குவிந்து கிடக்கும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் வழங்கி முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது வேறஹெர மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள அலுவலகம் உறங்காத அரச நிறுவனமாக ஆகியிருக்கின்றது. மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்களத்தில் முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக் கொள்ளத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் அனைத்துச் செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ளது. அதேபோன்று அனைத்து மாவட்ட அலுவலகங்களோடு தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு, அனைத்துச் சேவைகளையும் செய்து கொள்ள முடியும். இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு மாவட்ட இலக்கங்கள் மாத்திரம் வேறுபட்டிருக்கும். இதனடிப்படையில் கொழும்பு மாவட்டமாக இருந்தால் 0112 117116, கம்பஹா மாவட்டமாக இருந்தால் 0332 117116, அநுராதபுர மாவட்டமாக இருந்தால் 0252 117116 என்ற அடிப்படையில் இலக்கங்கள் அமையும். அதேபோன்று, வெளிநாடுகளுக்குச் செல்லும் விண்ணப்பதாரர்களுக்கு ஒருநாள் விசேட சேவைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், இராணுவ சேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்களை முன்னுரிமை அடிப்படையின் கீழ் உடனடியாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதேபோன்று, வேரஹெர அலுவலகத்திலிருந்து மாதாந்தம் சுமார் 3,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் (தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் உட்பட) வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுவதோடு, தற்போது கட்டுநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை (அவர்கள் நாட்டில் தங்கியிருக்கும் நாட்களைப் பொறுத்து) வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக குடிவரவுத் திணைக்களத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டு செயற்படுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சரின் ஒத்துழைப்புடன் இப்பணிகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரங்களை வெளிநாடு செல்ல உள்ளவர்களுக்குத் துரிதமாக வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அனுமதிப் பத்திரத்துடன் வெளிநாடு செல்லும் இலங்கையர்கள் அந்த நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறாமல் ஒரு வருடத்திற்கு வெளிநாட்டில் வாகனங்களைச் செலுத்த முடியும். அதனடிப்படைில், வேரஹெர மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தற்போது அனைத்து பணிகளும் உள்ளடக்கும் வகையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கி வருகிறது.