வாழும் கலை பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகர் ஆன்மிக குரு, அமைதித் தூதுவர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி நேற்று சனிக்கிழமை (18) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்த அவரை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உத்தியோகபூர்வமாக வரவேற்றுள்ளனர். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை 9.00 மணிக்கு நுவரெலியா சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் கோயிலில் நடைபெறும் மகா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்துகொள்கிறார். இம்மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் ரவிசங்கர் குருஜி, இன்று (19) கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெறவுள்ள இசை, தியானம் மற்றும் ஞானத்தின் மாலை என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார்.
தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அழைப்புக்கிணங்க நாளை திங்கட்கிழமை (20) முற்பகல் 10.00 மணிக்கு திருகோணமலை உட்துறைமுக வீதியிலுள்ள இந்து கலாசார மண்டபத்துக்கு அவர் விஜயம் செய்யவுள்ளார். அங்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியை கௌரவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஸாதிக் ஷிஹான்