மகாகவி பாரதியார் பன்முக ஆற்றல் கொண்ட பெரும் புலவர். இலக்கியத்தில் ஆன்மிகத்தில் அரசியலில் என்று பல்வேறு துறைகளில் கால் பதித்து பெரும் வெற்றிகண்டவர். பாரதியாரின் படைப்புகள் அவருடைய புகழை மங்கவிடாது வாழ வைத்துக்கொண்டு இருக்கின்றது. அவரது சமூக சிந்தனைகள், கொள்கைகள் வேண்டுதல்கள் பலவாக இருப்பினும், தனக்குப் பின்னால் தனியொரு மனிதன் வறுமையிலும் பட்டினியிலும் வாடக்கூடாது, என்று ஆழ்மன ஈடுபாட்டுடன் இறைவனை வேண்டிப் பாடியதை எண்ணிப் பார்க்கின்றேன்.
பாரதியை எப்படியான ஒரு வறுமை நெருப்பு வாட்டியிருக்கின்றது! இதனைக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்று சொல்வதற்கு வறுமை எனக்குப் புதிய படிப்பினை அல்ல. பள்ளிக்கூடத்திலோ, பல்கலைக்கழகத்திலோ கற்றுக்கொள்ள முடியாத படிப்பினையை, அனுபவத்தை, பசித்த வயிறும் பணமில்லா வாழ்க்கையும் கற்றுத் தருகின்றது என்ற சமூகவியல் ஆய்வாளரின் கருத்தோட்டத்தை பாரதியின் வரலாறு மெய்ப்பித்து நிற்கின்றது. மகாகவி பாரதி இந்த மண்ணிலே நிலைத்துவிட்டார். இதன் காரணம் அவருடைய படைப்புகள். இவை ஒவ்வொரு மனிதரையும் இன்னோர் உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றது. அது புதிய சிந்தனையாளர்களை உருவாக்குகின்றது.
பாரதியாரின் சிந்தனைகள் மண்ணிலே ஆழமாக வேர் ஊன்றிவிட்டன. பிரிவு என்பது இரண்டு வகை. ஒன்று தற்காலிகமானது. இன்னொன்று நிரந்தரமானது. பாரதியினுடைய பிரிவு நிரந்தரமானதாக இருப்பினும் தமிழ் மக்கள் இதயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். அதற்கு இன்னும் ஒரு காரணம் தமிழருவி மணியன் கூறுவதுபோல் பிரிவு என்ற உணர்வை ஆழமாக உணர்ந்து அனுபவிக்கின்ற சமுதாயம் தமிழ் சமுதாயம். இந்த அடிப்படையில்தான் கவியரசர் கண்ணதாசன் “நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?” என்று பாடினார். எத்தனை ஆண்டுகள் மறைந்தாலும் இந்தப் பாடல் தமிழ் இதயங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
என் அடிமனத்தில் மிக ஆழமாக பதிக்கப்பட்ட ஒன்றைத் தரிசனம் செய்த அனுபவத்தை தமிழ் இலக்கிய உறவுகளோடு பகிர்ந்து கொள்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள். கல்கி ரா. கிருஸ்ணமூர்த்திக்கு மகாகவி பாரதியாரை நேரில் பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் மனதிலே குடிகொண்டிருந்தது. பாரதியாரின் மறைவின் பின்னர் தமிழ் அபிமானிகளால் எட்டயபுரத்தில் அவருக்கு ஒரு மணிமண்டபம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்காக, மூதறிஞர் இராஜாஜி அழைக்கப்பட்டார். அவருடன் இணைந்து பயணிக்கவும் செயலாற்றவும் கல்கிக்கு பெரும் வாய்ப்புக் கிடைத்தது. அதனைப் பெரும் பாக்கியமாகக் கொண்டு அவர் எட்டயபுரம் சென்றார். அந்தப் பெருவிழாவில் மூதறிஞரைத் தொடர்ந்து சிற்றுரை ஆற்றினார். அந்த மக்களுடைய அன்பையும் பாராட்டையும் பெற்றார். இந்த அனுபவத்தைப்பற்றி அவர் ஆனந்தவிகடன் சஞ்சிகையில் குறிப்பிடும்போது “எட்டயபுரத்தில் அதிக தூரம் நடந்தேன். இந்தப் பாதையிலே பாரதி எத்தனைமுறை நடந்திருப்பார். அவர் நடந்த பாதையில் நானும் நடந்தால் காலில் ஒட்டிக்கொள்ளும் அதிகமான மண் புழுதியை சென்னைக்கு கொண்டு சென்று பரப்பிவிடலாம் என்ற ஆவலில் அதிக தூரம் நடந்தேன்” என்று பதிவு செய்கின்றார். இந்தப் பதிவினைக் கண்ணுற்ற நாளில் இருந்து என்றாவது ஒருநாள் எட்டயபுரத்துக்கு செல்லவேண்டும். பாரதி பிறந்து வளர்ந்த சூழலை சுவாசிக்கவேண்டும். மணிமண்டபத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் என் உள்ளத்திலே குடிகொண்டுவிட்டது. அந்த ஆவல் இந்த ஆண்டில்தான் நிறைவேறியது.
“எட்டயபுரத்தில் இரட்டைப்பிறவி – ஒன்று பாரதி மற்றது கவிதை” என்றார் ஒரு கவிஞர். அந்தக் கவிஞனும் தமிழ்க் கவிதையும் பிறந்த மண்ணின் தரிசனத்தை சொல்ல முற்படுகின்றேன். எனது இலக்கிய நண்பர் செல்வராஜா எட்டயபுரத்தில் பிறந்து, அங்கே நீண்ட நாட்கள் வாழ்ந்தவர். பின்னர் லண்டனில் பொறியியலாளராய் நீண்டகாலம் பணியாற்றியதோடு, லண்டனில் நடந்த எமது இலக்கிய நிகழ்வுகளில் பெரும் பங்குகொண்டு செயலாற்றியவர். இப்பொழுது அவர் தமிழகம் சென்றுவிட்டார். அவர் துணையுடனேயே எட்டயபுரம் சென்றேன். எட்டயபுரத்தில் கீழஈரால் என்று ஒரு சிறிய கிராமம். அங்கு அவருக்கு இரண்டு அழகான வீடுகள் இருக்கின்றன. நிறைய உறவினர்கள் இருக்கின்றார்கள். அங்கு அவருடன் நான்கு நாட்கள் தங்கியிருந்தேன். அங்கிருந்து சொற்ப தூரத்தில்தான் பாரதி மணிமண்டபமும், அங்கிருந்து பத்து நிமிட நடையில் பாரதியார் பிறந்த வீடும் இருக்கின்றது.ஒருநாள் நான் பாரதி மணிமண்டபத்துக்குச் சென்றேன். மணிமண்டப வாசலில் பாரதியாரின் கம்பீர உருவம் உற்சாக வரவேற்பைத் தந்தது. எனது ஆவலைப் புரிந்துகொண்ட மண்டபப் பொறுப்பாளர் என்னை உள்ளே அழைத்துச் சென்று சகல இடத்திலும் பொறிக்கப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்வையிடச் செய்தார். பாரதி தன் மனைவி செல்லம்மாவுடன் இணைந்து நிற்கின்ற கண்கொள்ளாக் காட்சியுடன் அங்கு பொறிக்கப்பட்ட வரலாற்று பதிவுகளையும் கண்ணுற்றேன். மண்டபத்தின் ஓரமாய் அமர்ந்திருந்து என் நீண்டகால தாகம் அடங்கும்வரையில் அவருடைய கம்பீரத் தோற்றத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். எத்தனையோ புரிதல்கள் என் இதயத்தை உலுக்கியது. இந்த மண்ணிலே நிலைத்துவிட்ட மாந்தர்கள் சமூகத்தில் எப்படியெல்லாம் தங்களை இணைத்துக்கொண்டு மண்ணின் விடிவுக்காக, மக்கள் வாழ்வின் மலர்ச்சிக்காக, மொழியின் வளர்ச்சிக்காக தங்களை உருக்கினார்கள். மீண்டும் அவர் பொன்னான கம்பீரத் தோற்றத்தைப் பார்த்தேன். ஏனோ என் கண்கள் பனித்தன.
“ஐயனே உன் புகழ் வாழ்க!” என்று வாய் முணுமுணுத்தது. அருகிருந்த நூல் நிலையத்தை அடைந்தேன். மிகவும் அரிதான தமிழ் நூல்கள் அங்கு இருந்தன. ‘இருபதாம் நூற்றாண்டு கவிதைத்திரட்டு’ என்ற நூலை எடுத்துப் படித்தேன். “ஏழ்மை என்பது சாபமல்ல, ஏழ்மையை விரட்டுதல் கடினமல்ல, தொடர்ந்துழைத்தால் வெற்றிவெகு தூரமல்ல.” – கவிதை வரிகள் என்னை வெகுவாகக் கவர்ந்தன.
‘பாரதியார் ஒரு சரித்திரம்’ என்ற நூலைப் புரட்டுகிறேன். அதிலே படிப்பறிவு குறைந்த மனைவி செல்லம்மா தன் ஆசைக் கனவுகள் நிராசையாகப் போனபோதும் தொடர்ந்து பாரதிக்கு ஈடு கொடுத்தாள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எங்கும் பாரதியின் விம்பமே! பணியாளர்களுடன் உரையாடி தேநீர் அருந்தி மகிழ்ந்து விடைபெற்றேன்.
மறுநாள் நண்பர் எட்டயபுரம் செல்வராஜாவுடன் பாரதியார் பிறந்த இல்லம் சென்றேன். அந்த இல்லம் ஒரு கோயிலாகவே காட்சியளித்தது. அந்த இல்லத்தை பராமரிக்கும் பணியாளருடைய உதவியுடன், பாரதியார் பிறந்தபோது தாலாட்டிய தொட்டிலைத் தொட்டு முத்தமிட்டேன். பாரதி ஆடிய தொட்டிலை என் கைகளால் தொட்டு அனுபவித்ததை என் பிறவியின் பேறாகவே எண்ணி, எண்ணி மகிழ்கின்றேன். நீண்டநாள் கனவு ஒன்று நிறைவேறியது என்ற மனநிறைவு நெஞ்சை நிறைக்க, நிறைவான தரிசனத்துடன் அங்கிருந்து விடைபெற்றோம்.
எட்டயபுரத்திலுள்ள கீழஈரால் கிராமத்தைப் பற்றி சிறிது சொல்லியாக வேண்டும். அமைதியான அழகான கிராமம். அங்கு பல கோயில்கள். அங்கே ஒரு புகழ்பெற்ற அம்மன் ஆலயம் இருக்கிறது. அதன் பெயர் கீழஈரால் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன். அந்த அம்பிகையை காலை, மாலை தவறாமல் அங்கு சென்று தரிசனம் செய்தேன்.
மூலஸ்தானத்தில் அம்பிகையின் திருவுருவம் கிடையாது. அம்பிகையின் ஒளி வடிவத்தையே வைத்துப் பூசை செய்கிறார்கள். அம்பிகையின் பூசை நேரம் மக்கள் கூடுவார்கள். பூசகர் கையிலே தீப்பந்தத்தை வைத்து துள்ளி துள்ளி சுழற்றிக் காட்டுவார். அந்த நேரம் அடியவர்கள் பக்தியில் மிதப்பார்கள். அது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தந்து வியப்பிலே ஆழ்த்தியது, எப்படியெல்லாம் இந்த மக்கள் பக்தியை வெளிப்படுத்துகிறார்கள். அந்த அம்பிகையின் திருவருளை உள்வாங்கியே இந்தக் கட்டுரையை வரைகின்றேன்.
இந்தக் கிராமத்தின் பிரதான வீதியின் பஸ்தரிப்பு நிலையத்தில் இருந்து திண்டுக்கல் போகும் பஸ்வண்டியில் ஏறினால் ஒன்றரை மணி நேரத்தில் திருச்செந்தூர் முருகன் படைவீட்டை தரிசனம் செய்யலாம். அவ்வாறு நண்பருடன் திருச்செந்தூருக்கு பஸ்சில் பயணித்தபோது, சிறுவயதில் என் தகப்பனாருடன் மானிப்பாய் – தொண்டமானாறு பஸ்சில் ஏறி செல்வச்சந்நிதி ஆலயம் சென்று முருகனைத் தரிசனம் செய்த நினைவு என் மனத்திலே மின்னலாகத் தோன்றி மறைந்தது.
பாரதியின் மண்ணிலே கால் பதித்த நினைவுகளில் தோய்ந்த வண்ணம் திருச்செந்தூர் கடலிலே மூழ்கினேன். இந்தப் பெருவீதியால் அடியவர்கள் நடைபவனியாகவும் திருச்செந்தூருக்கு வருகின்றார்கள். பாரதியும் செந்தூர் முருகனை தரிசனம் செய்ய நடந்திருப்பாரோ? அதனால்தான் “சுற்றி நில்லாது போ பகையே! துள்ளி வருகுது வேல்” என்று பகையை விரட்டினாரோ? என எண்ண வைத்தது. எட்டயபுரம் கீழஈரால் கிராமத்திலிருந்து விடைபெறுகின்றேன். நன்றி என்னும் உணர்வு நீராகி கண்ணை மறைக்கிறது. ஒவ்வொரு நாட்களும் கிடைத்த விருந்துபசாரத்தை நினைக்கும்போது கையில் நெய் வாசம் வீசுகின்றது. என்னை உபசரித்த இதயங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளைத் தேடுகின்றேன். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா, இறைவா, இறைவா என்று பாரதி இறைவனைப் பலமுறை அழைத்து வியந்து பாடினான். அவர்மீது கொண்ட காதலால் எனக்கு இத்தனையும் கைகூடியது. எண்ணிப்பார்த்தால் பாரதியின் சிந்தனையில் எழுந்த கோடியின்பத்தில் இதுவும் ஒரு துளியே! என் கனவு பலித்தது என்பதில் பெரும் திருப்தி!