அண்ணா……. அண்ணா….அக்கா…அக்கா இந்தப் பூங்கொத்துகளை வாங்குங்கள் இதை விற்றுத்தான் நாங்கள் சாப்பிடவேண்டும்’
என கம்பளை- நுவரெலியா வீதியோரங்களில் நின்று சிறுவர்கள், இளைஞர்கள் பூங்கொத்துக்களை விற்பனை செய்வதை பலரும் கண்டிருக்கக்கூடும். எனினும் இவர்களின் அந்தக் கோரிக்கையை எவரும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
பூக்கள் என்றால் அழகு, கவர்ச்சி என பல்வேறு விதத்தில் அதை ரசித்தாலும் இதை ஏன் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்று நம் நாட்டவர்கள் பலர் அலட்சியம் காட்டுவார்கள்.
இது இவ்வாறிக்க இலங்கையில் பூங்கொத்துக்களை விற்கும் இளைஞர் ஒருவரின் காணொளி சீனாவில் 140 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்து சாதனை படைத்துள்ளது.
அந்த இளைஞன் தான் கம்பளை – நுவரெலியா வீதியில் பூங்கொத்துக்களை விற்கும் வியாபாரியான திலிப் மதுசங்க. இவர் கண்டி- நுவரெலியா வீதியில் பலகொல்ல லபுக்கலை என்ற இடத்தைச் சேர்ந்தவர்.
அன்று வழமைபோல் பொழுது புலர்ந்தது. அதிகாலையில் செய்யவேண்டிய வேலைகள் நிறைய எஞ்சியிருந்தமையால், அவசர அவசரமாக ரொட்டியும் சம்பலும் சேர்த்து சாப்பிட்டு விட்டு, ஒரு கோப்பை தேநீரும் பருகிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினார் மதுசங்க.
அதன்பின்னர்தான் வழமையாக பூக்களை பெற்றுக்கொள்ளும் இரண்டு வீடுகளுக்கு சென்று பணத்தை கொடுத்து பூக்களை எடுத்துகொண்டு. நண்பர்களுடன் லபுக்கலையிலுள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.
அங்கிருந்த வித்தியாசமான இலைகள், தண்டுகள் என்பவற்றை எடுத்துவந்து அவற்றை கொண்டு பூங்கொத்துகளை வடிவமைப்பார்கள். இது இவர்களின் பிரதான ஜீவனோபாயமாக இருந்தது. ஒருநாளைக்கு சுமார் ஆயிரம் பூக்களை கொள்வனவு செய்யும் இவர்கள், ஒற்றைப் பூக்களால் செய்யப்பட்ட சிறிய பூங்கொத்துகள், பெரிய பூங்கொத்துக்கள் என வடிவமைப்பார்கள். பின்னர் அவற்றை சுமந்துகொண்டு ஆயிரம் எதிர்பார்ப்புகளுடன் நுவரெலியா- கண்டி வீதிக்குச் செல்வார்கள்.
அன்றும் மதுசங்க வழக்கம் போல் பூங்கொத்து விற்றுக் கொண்டிருந்தார். அப்போது வளைவான வீதிகளில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் தூரத்தில் தெரிந்தது. உடனே தயாரான மதுசங்க, தனது வழக்கமான சிநேகப் புன்னகையுடன் பஸ்ஸை நோக்கி பூங்கொத்தை நீட்டினார். எனினும் பஸ் அவரை கடந்து சென்றது. எனவே பஸ்ஸின் பின்னால் ஓடி சென்று பூங்கொத்துகளை காட்டி அவற்றை வாங்குமாறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சைகை செய்தார்.
எனினும் அவரது முயற்சி கைகூடவில்லை. ஆனால் முயற்சியை கைவிடவில்லை. இந்தப் பஸ்ஸில் எல்லா பூக்களையும் விற்க முடியும் என்ற நம்பிக்கையில் ஓட்டத்தின் வேகத்தை அதிகரித்துக்கொண்டு மலைமீது ஏறி பஸ் அடுத்த சுற்றுப்பாதையில் வரும்போது அங்கிருந்து இறங்கி பூக்களை வாங்குமாறு மீண்டும் கைகாட்டினார். அப்போதும்.பஸ் அவரைக் கடந்து சென்றது.
ஆனால் அந்த நேரத்தில் பஸ்ஸுக்குள் இருந்த அனைவரின் கவனமும் இந்த இளைஞன் மீது குவிந்திருந்தது.
நம்பிக்கையைக் கைவிடாமல் மலையேறி இறங்கி ஒடிவந்த அந்த இளைஞனின் முயற்சியை கண்டு அவன் மீது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுதாபம் ஏற்பட்டது.
உடனடியாக டிரைவர் வாகனத்தை நிறுத்துங்கள். இது டிக்டாக்கிலிருந்த இலங்கையில் ‘Flower Boy ‘ தானே என்று சுற்றுலாப் பயணியொருவர் கூறினார். உடனே சாரதி சாலையோரமாக பஸ்ஸை நிறுத்தினார்.
பஸ்ஸின் பிரதான கதவு திறக்கப்பட்டது. வியர்வையில் நனைத்து பிரகாசமான கண்களுடன் புன்னகைத்த மதுசங்கவின் விடாமுயற்சி மற்றும் தைரியத்துக்காக அவர்களுக்கு அவன் மீது அனுதாபம் ஏற்பட்டது. மதுஷங்கவை மிகவும் அன்புடன் வரவேற்றனர். அதுமட்டுமின்றி அவனிடமிருந்த அனைத்து பூக்களையும் சுற்றுலாப் பயணிகள் வாங்கினர்.
அவனது கையில் 7000 ரூபாவுக்கு மேல் பணம் கிடைத்தது. பஸ்ஸிலிருந்து இறங்கிய மதுசங்க, அனைவரிடமிருந்து புன்னகையுடன் விடைபெற்றார்.
அப்போது, அங்கு தங்கியிருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவர், இந்த தொடர் நிகழ்வுகளை, மொபைல் போனில் வீடியோ செய்து கொண்டிருந்தார். பின்னர் அதனை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். “வளைவுகள் நிறைந்த சாலையில், ஒரு இளைஞன் பூ விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். அவரைக் கடந்து எங்கள் பஸ் சென்றது. ஆனால் அவர் எங்கள் பஸ்ஸை பூக்களுடன் துரத்தினார். அது மட்டுமல்ல சிரித்த முகத்துடன் எங்களை நோக்கி கை அசைத்தார். அவ்வப்போது மறைந்தாலும் தன் முயற்சியைக் கைவிடாமல் ஒரு மாயாஜாலக்காரனைப் போல நம் முன் தோன்றினார். எங்களால் அவரைத் தவறவிட முடியவில்லை
பஸ்ஸிலிருந்த சிலர் அவரது பழைய வீடியோக்களை பார்த்துள்ளனர். இவர்தான் இலங்கையில் மிகவும் பிரபல்யமான Flower boy என்று கூறினார்கள். சாலையோரம் பூ விற்கும் இளைஞர்கள் அதிகம். ஆனால் அவர் மட்டும் ஆவலுடன் எங்களிடம் வந்தார். கடைசியாக அவரிடமிருந்து பூக்களை பெறுவதற்காக அனைவரும் பஸ்ஸை நிறுத்துமாறு கூச்சலிட்டனர்.
‘முன்னேறுவதற்கு வறுமை ஒரு தடையல்ல’ என்பதை அவர் எனக்குக் காட்டினார். அவர் கண்கள் ஒரு அரச இளவரசனின் கண்களைப் போல் பிரகாசித்தன. அழகான, உண்மையான புன்னகையுடன் கடின உழைப்பாளியான அவரது முகம் இன்னும் நம் இதயங்களுக்கு நெருக்கமாக உள்ளது’ என அவர் பதிவிட்டிருந்தார்.
அதன்பிறகு, இந்த வீடியோ ‘டிக்டாக்’ சமூக ஊடகங்களில் மிக வேகமாகப் பரவத் தொடங்கியது. அதுவும் சீன டிக்டாக் நண்பர்களிடையே காட்டுத்தீ போல் இது பரவியது.
கிட்டத்தட்ட 14 கோடி பேர் மக்கள் இதனைப் பார்த்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்தவர்கள் பல்வேறு கருத்துக்களையும் அதன் கீழ் பதிவிட்டிருந்தனர்.
‘அவரது முயற்சிகளும் அர்ப்பணிப்பும் எங்களை ஊக்குவிக்கிறது’ என ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு நபர், “இந்த வீடியோவைப் பார்த்த பிறகு உழைப்பும் முயற்சியும் வெற்றிக்கான பாதை என்ற மிகப்பெரிய உணர்வு ஏற்பட்டது என பதிவிட்டிருந்தார்.
‘இலங்கைக்கு செல்லவேண்டுமென்று நான் நினைக்கவே இல்லை. ஆனால், அவருக்காக இலங்கை செல்ல விரும்பினேன். அது வேறு எதனாலும் அல்ல; ஏனெனில் அவரது ஒளிரும் கண்கள், ரொம்ப ஒல்லியானவர்.
ஆனால் அவர் மிகவும் கடினமாக உழைக்கும் மற்றும் வாழ்க்கையை நேசிக்கும் ஒரு அழகான மனிதர். நான் ஒரு நாள் இலங்கை சென்றால், அவரை சந்திக்க விரும்புகிறேன். என் நண்பர்களும் அவரைப் பற்றி அறிந்து கொள்வார்கள், இப்போது எனக்கு 36 வயதாகிறது, அந்த மலர்கள் உண்மையில் என் கைகளில் இல்லை, ஆனால் அந்த மலர்களின் நறுமணம் என் உலர்ந்த இதயத்தில் நிறைந்துள்ளதாக இன்னுமொருவர் பதிவிட்டுள்ளார்.
இவ்வாறு சீனர்களின் அன்பை வென்ற இளவரசராக மதுசங்க தற்போது பல வெளிநாட்டவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
சீனாவின் தலைசிறந்த ஓவியர்களும் இவரது உருவப்படத்தை வரைந்திருப்பதும் சிறப்பு.
அதுமட்டுமின்றி பணக்கார சீன இளைஞனொருவர் மொழிபெயர்ப்பாளருடன் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். மதுசங்க வைத்திருந்த பூக்களை எல்லாம் வாங்கி மதுசங்கவுக்கு ஒரு சட்டையை பரிசாக கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி மதுசங்கவின் வீட்டிற்குச் சென்று அவனது பெற்றோரைச் சந்தித்து கதைத்துள்ளார். வீட்டிற்கு வந்ததும் மதுசங்கவின் படுக்கையறை, சமையலறை, கழிப்பறை போன்றவற்றை அவதானித்துள்ளார். அப்போது, மிகவும் உணர்ச்சிவசப்பட்ட இந்த சீன பணக்கார இளைஞன், இவ்வளவு துணிச்சலான இளைஞன் எப்படி வாழ்கின்றார் என்பதை பார்க்கும் போது மிகுந்த வேதனை அடைந்ததாக கூறியுள்ளதுடன் அவருக்கு உதவ விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
இவ்வாறு வெளிநாட்டவர்கள் அவ்வப்போது அவரைத் தேடி வரத் தொடங்கினர், அவ்வழியாக வந்த சீனர்கள் குழு அவரைப் பற்றிய ஆவணப் படத்தையும் தயாரித்துள்ளது. அதற்கு பண வெகுமதியையும் கொடுத்துள்ளார். மதுசங்கவை வைத்து ஒரு திரைப்படமும் உருவாகி வருவதாக தெரியவருகின்றது. சீனாவுக்கு வருமாறும் அவருக்கு அழைப்பு வந்ததாகவும் அதை மதுசங்க பணிவுடன் நிராகரித்ததாகவும் தெரியவருகின்றது. அவர் தனது நண்பர்களுடன் செல்ல வாய்ப்பு இருந்தால் மட்டுமே சீனா செல்ல முடியும் என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ‘ஒரு கோடி தருவதாக சொன்னாலும் இந்த பூ வியாபாரத்தை நிறுத்த மாட்டேன். நான் என் தாத்தா, பாட்டி, இரண்டு சகோதரிகள், என் நண்பர்கள் யாரையும் விட்டுவிட்டு எங்கும் போக மாட்டேன். எனக்கு இந்த வேலை பிடித்திருக்கிறது எனவும் மதுசங்க தெரிவித்துள்ளார்.
வீட்டிலுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மதுஷங்க தரம் 8 வரை கல்விகற்றுவிட்டு இந்த தொழிலை தொடங்கியதாக தெரியவருகின்றது. சுமார் 8 வருடங்களாக தொழில் செய்துவருகின்றார். பூக்களைக் கொய்ய தினமும் 15 முதல் 20 கிலோமீற்றர் வரை அவர் பயணம் செய்வதாக தெரியவருகின்றது. கொத்மலையை சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தின் மூன்றாவது பிள்ளையான இவர், 8 வருடங்களாக நாள்தோறும் 15 கிலோ மீட்டர் வரை பூங்கொத்துக்களை கையிலேந்தியபடி, வெளிநாட்டு பயணிகளை ஏற்றிச்செல்லும் வாகனத்துடன் தன் ஓட்டத்தை ஈடுசெய்து, பயணிகளிடம் அப்பூங்கொத்துக்களை விற்றுக் கிடைக்கும் பணத்தில் தன் குடும்பத்தின் அன்றாட செலவுகளை கவனித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் இலங்கை வந்திருந்த சீன பெண்ணிற்கு பூங்கொத்துக்களை விற்பனை செய்த போது அப்பெண்ணின் கமராவில் பதிவான காட்சிகள் இப்பொது பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
மேலும், இவர் பூங்கொத்துக்களை சுமந்து கொண்டு செல்லும் கார்ட்டூன் சித்திரங்களும் சீனர்களுக்கு மத்தியில் பகிரப்பட்டு பிரபமாகி வருகின்றது.
வசந்தா அருள்ரட்ணம்