சில வாரங்களுக்கு முன்பு மன்னார் சென்றிருந்தபோது ஆதாமின் பாலம் எனப்படும் மணற்பாங்கான பகுதியைச் சென்று பார்க்க முடிந்தது. ஆழமற்ற கடலில் மூழ்கியிருக்கும் இந்த மணற்பரப்பு கடந்த காலத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நிலத் தொடர்பின் எச்சம் என்று சிலர் கருதுவதோடு, இன்றும் சிலர் இதனைப் பார்ப்பது கடலின் உட்பகுதியில் நடந்த புவியியல் நிகழ்வின் விளைவு என்றாகும்.
எனினும் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணம் எனும் வீர காவியத்தின் பிரகாரம், இந்த மணல் வாயுவின் மகனான அனுமானால் பெரிய கற்களை உருட்டிக் கட்டிய பாலத்தின் எச்சங்களாகும். அனுமானால் இந்தப் பாலம் கட்டப்பட்டது இராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையை மீட்பதற்காக ராமனும் மற்றவர்களும் இலங்கைக்கு வருவதற்கேயாகும். அந்தக் கதை எப்படியிருந்தாலும், செயற்கைக்கோள் படங்கள் மூலம் செயலாக்கப்பட்ட இந்த மணல் திட்டுகளின் புகைப்படங்களைப் பார்க்கும் போதெல்லாம், கையை நீட்டி தனது பிள்ளையைப் பிடித்துக் கொண்டிருக்கும் தாயின் உருவமே என் மனதில் காட்சி தருகின்றது. உண்மையில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பு அந்தளவுக்கு மிகவும் நெருக்கமானது. கடந்த பொருளாதார நெருக்கடியின்போது, எரிபொருள், உணவு மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை இலங்கையர்களுக்காக இந்தியா வழங்கி காட்டிய மனிதாபிமான ஒத்துழைப்பு இதற்குச் சிறந்த உதாரணமாகும்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இலங்கை இந்தியாவிலிருந்து பௌதீக ரீதியாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் அற்புதமான உறவு நீடித்து வருகின்றது. இராமாயணமும் மகாவம்சத்தில் விஜய மன்னன் வருகை பற்றிய செய்திகளும் இந்த உறவுக்கு இலக்கிய ஆதாரங்களை வழங்குகின்றன. பௌத்தம் மற்றும் சங்காமித்தையின் வருகையின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பெரிய சமூக மற்றும் மத இணைப்பு உருவாகியது. அந்த உறவுகளின் சமீபத்திய நீட்சிதான் இந்த நாட்டிற்கு பயிர்ச்செய்கைக்காக வந்த இந்திய மக்கள் உருவாக்கிய “மனிதப் பாலம்” ஆகும். இதனடிப்படையில் இந்தியாவும் இலங்கையும் சமய, கலாசார, சமூக மற்றும் மனித உறவுகளால் வலுவாக பிணைக்கப்பட்ட இரண்டு நாடுகள் என்பதற்கு வரலாற்றில் இருந்து இன்றுவரை ஏராளமான சான்றுகள் உள்ளன.
ஒரு காலத்தில் நம்மைப் போலவே பிரித்தானிய மகுடத்திற்குச் சொந்தமாக இருந்த இந்தியா, அதிலிருந்து விடுபட்டு விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஒரு நாடாக இந்தியா தனது பொருளாதாரத்தை உயர்த்தும் போது, அதன்மாநிலங்களும் விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகின்றன. இதற்குச் சிறந்த உதாரணம், தற்போது தமிழ்நாடு மாநிலம் அடைந்து வரும் பொருளாதார வளர்ச்சியைக் குறிப்பிட முடியும். இன்று இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் இருக்கும் தமிழ்நாடு, 2032இல் அதன் பொருளாதாரத்தை 1,000 பில்லியன் டொலர் வரைக்கும் கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வளவு பெரிய பொருளாதாரத்தின் வளர்ச்சியால், அதன் நேரடி முடிவுகளை ஆந்திரா, தெலுங்கானா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களைப் போன்று இலங்கையிலும் பெற்றுக் கொள்ள முடியும். எனினும் அதற்கு முதிர்ச்சியடைந்த அரசியல் தலைமை அவசியமாகும். துரதிர்ஷ்டவசமாக, நடைமுறைக்கு மாறான, இனவாத முழக்கங்களை முன்வைத்து அரசியல் செய்கையில் அத்தகைய முதிர்ந்த தலைமைத்துவத்தை வெளிக் கொண்டுவருவது எளிதல்ல.
இந்தியாவுடன் இணைந்து இலங்கை எழுச்சி பெற வேண்டுமானால் அதற்காக சிறந்த நுழைவாயிலாக இருப்பது கொழும்போ அல்லது யாழ்ப்பாணமோ அல்ல, தலைமன்னார் ஆகும். எனினும் இலங்கை அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மட்டுமே இந்த கதவைத்’ கதவைத் திறப்பது பற்றிய புரிதல் உள்ளது. அதிக வாக்காளர்கள் இல்லாத சிறிய மாவட்டமான மன்னாரை மையாகக் கொண்டு இந்தியாவுக்கான கதவைத் திறப்பதற்கு பதிலாக, போலியான இந்திய எதிர்ப்பிற்காக முன்னிற்பது தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல்வாதிக்கு சாதகமானதாக அமையும். எனினும் எதிர்கால சந்ததியினரின் பொருளாதார விடுதலையில் அக்கறை கொண்ட அரசியல்வாதியல்லாத ஒரு இராஜதந்திரிக்கு இந்தக் கதவைத் திறப்பது தவறவிட முடியாத ஒரு பொன்னான வாய்ப்பாகும். தற்போதைய ஜனாதிபதி அந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிகிறது.
இந்தியாவின் பொருளாதாரம் மிகக் குறைந்த மட்டத்தில் இருந்த 1890ஆம் ஆண்டு என்ற நீண்ட காலத்திற்கு முன்னரும் கூட, இலங்கையையும் இந்தியாவையும் இணைத்து தனிப் பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதன் நன்மையை ஆங்கிலேயர்கள் புரிந்து கொண்டனர். 1906ஆம் ஆண்டு, மக்கள் நடமாட்டமின்றி அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருந்த தலைமன்னார் தீவுக்கு ஜோர்ஜ் ஸ்கொட் என்ற உதவி முகவர் நியமிக்கப்பட்டு, அங்கு வைத்தியசாலை, பொலிஸ் நிலையம் உள்ளிட்ட அரச கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டன. இதன் நோக்கம் மன்னாரை வணிக நகரமாக மாற்றுவதாகும். 1909இல் தலைமன்னாரை நோக்கி புகையிரத சேவையை ஆரம்பித்த ஆங்கிலேய ஆட்சியாளர்கள் 1914இல் கொழும்பையும் தலைமன்னாரையும் ரயில் மூலம் இணைத்து அங்கிருந்து இந்தியாவிற்கு கப்பல் சேவையை ஆரம்பித்து இந்தியாவையும் இலங்கையையும் ஒரே பாதை வரைபடத்தில் நிலைநிறுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். அன்று, இலங்கையில் உள்ள எந்த இடத்திலிருந்தும் இந்தியாவில் உள்ள புகையிரத நிலையத்திற்கு டிக்கெட் பெறும் வசதி இலங்கையர்களுக்கு இருந்தது.
1980களின் ஆரம்பம் வரை நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த இந்திய-இலங்கை புகையிரத சேவை இன்று செயற்படவில்லை. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் புதிய பாதையை அமைப்பதற்காக அல்லாமல் தற்போதுள்ள பாதையை புதிய வசதிகளுடன் மீண்டும் திறப்பதற்காகவே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய- இலங்கை குடிமக்கள் அனுபவித்து வந்த வசதியை மீண்டும் நிறுவுதற்குமாகும். இதன் மூலம் இந்திய பொருளாதாரத்தின் பலன்களை இலங்கை பெறும். இது முற்றிலும் பரிந்துரைக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கையாகும். எனினும் கட்சி பேதம் பார்ப்பவர்களுக்கு இது இலங்கையை இந்தியாவுக்குக் காட்டிக் கொடுப்பதாகும். தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்துவதாகும்.
ஏறக்குறைய எட்டு தசாப்தங்களாக, இலங்கையும் இந்தியாவும் இவ்வாறு புகையிரத -கடல் பாதைகளோடு ஒன்றாக இணைந்திருந்தன. எனினும் அதன் காரணமாக இலங்கையின் இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் ஏற்பட்ட ஒரே விடயம், இலங்கைப் பொருட்கள் இந்தியாவிலும், இந்தியாவின் பொருட்கள் இலங்கையிலும் இலகுவாகக் கிடைத்ததேயாகும். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக வலையமைப்பு கிடைத்தது. எனினும் அன்று போல் அல்லாமல் இன்று இந்தியா மிகவும் முன்னேறியுள்ளது. உலகின் மிக சக்திவாய்ந்த பொருளாதாரம் அவர்களிடம் உள்ளது. அதிலிருந்து இலங்கை பெற்றுக் கொள்ளக் கூடிய நன்மைகள் ஏராளம் உள்ளன. இந்தியாவை இலக்காக கொண்டு, இலங்கையின் சிறந்த துறைமுக நகரமாக மன்னாரை மாற்ற முயற்சிக்க வேண்டும். அதற்காக இலங்கையின் அடுத்த தசாப்தத்தை உலகம் அங்கீகரிக்கப்பட்ட எதிர்கால தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு தலைவரிடம் ஒப்படைப்பதே இலங்கையின் தரப்பில் இருந்து செய்ய வேண்டிய சிறந்த காரியமாகும்.
மனுஷ நாணயக்கார