பாராளுமன்றம் நாளை (13) திங்கட்கிழமை, நாளை மறுதினம் (14) செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களிலும் கூடவுள்ளதாக, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வியாழக்கிழமை (09) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய நாளை காலை 9.30 மணிக்குபாராளுமன்றம் கூடவுள்ளதுடன், காலை 9.30 மணி முதல் மு.ப 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள், மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான அறிவித்தல், பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், நிதிச் சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள், அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழான நான்கு ஒழுங்குவிதிகள், ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஆறு தீர்மானங்கள், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளை, சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் என்பன விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்படவுள்ளதுடன், ஜெயா கென்டெய்னர் டேர்மினல்ஸ் லிமிடட் நிறுவனத்தின் (2022)ஆம் ஆண்டின் வருடாந்த அறிக்கை விவாதமின்றி நிறைவேற்ற சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பவித்ரா வன்னியாரச்சி சகுர்த மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம், சர்வதேச தேரவாத நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம், சவீர மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம், களனி பௌத்த பெண்கள் அறக்கட்டளை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் என்பன பரிசீலனைக்காக ஆற்றுப்படுத்தப்படவுள்ளன.
மாலை 5.00 மணி முதல் 5.30 மணிவரை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்காக (அரசாங்கம்) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் காலை 9.30 மணி முதல் மு.ப 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை எதிர்க்கட்சியால் கொண்டு வரப்படும் பலஸ்தீன விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.