ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த டயனா கமகேயை பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தது சட்டபூர்வமானதல்ல என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதையடுத்து டயனா கமகேயால் ஸ்தாபிக்கப்பட்ட கட்சியிலிருந்து போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமையும் கேள்விக்குறியாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களும் சட்ட வல்லுனர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
டயனா கமகேயின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டதன் பின்னர் அது தொடர்பில் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவும் கடந்த 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் சில கருத்துகளை முன்வைத்து பேசினார். டயனா கமகே பதவி நீக்கப்பட்டதன் காரணமாக அவர் ஸ்தாபித்த கட்சியின் சட்டபூர்வமான தன்மை தொடர்பில் சிக்கல் இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
டயனா கமகே தலைமையிலான கட்சியின் தொலைபேசி சின்னத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, தேர்தல் நோக்கத்துக்காக பயன்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 54 உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்தது.
டயனா கமகேயின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்பட்டதன் மூலம் எஞ்சியுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளும் கட்சியின் சட்டபூர்வ தன்மையிலேயே தங்கியுள்ளது.
கட்சியின் உரிமையாளருக்கு இலங்கை குடியுரிமை இல்லாததால் அக்கட்சியிலிருந்து பாராளுமன்றத்துக்கு வந்த எம்.பி.க்கள் தகுதி பெற மாட்டார்களெனவும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.