- தமிழ் இளைஞர்களுக்கும் பொலிஸில் சேர வாய்ப்பு
- நாட்டை கட்டியெழுப்பும் பணிகளில் முன்னேற்றம்
- வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற பேதமின்றி தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களிப்பு
- யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுர குமார திட்டவட்டம்
தெற்கில் இனவாதத்தைத் தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிப்பதாகவும் இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படாதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். யாழ். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய அவர்: இனவாதிகளுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும். நாட்டின் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப எமது அரசாங்கம் முழு மூச்சாக செயற்படுகிறது.
வடக்கு மக்கள் கடந்த இரண்டு பிரதான தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர்.அரசாங்கத்தை மாத்திரம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட வாக்குகள் இல்லை இவை. நாட்டு மக்கள் சகலரையும் ஒன்றிணைப்பதற்கு வழங்கப்பட்ட வாக்குகளே இவை.
நாட்டில்,முதற் தடவையாக வடக்கு, கிழக்கு தெற்கு, மேற்கு, மலையகம் என்ற பேதமின்றி சகல மக்களின் ஆதரவுடன் அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக மக்களை வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் என பிளவுபடுத்தியே கடந்த ஆட்சியாளர்கள் நாட்டை நிர்வகித்தனர். ஆனால், மக்களை பிளவுபடுத்தும் அரசியலுக்குப் பதிலாக அவர்களை ஒன்றிணைக்கும் அரசாங்கத்தை நாம் உருவாக்கியுள்ளோம்.
இதற்கு முன்னர், மேல் மட்டத்திலிருந்த ஒரு சில குடும்பங்களிடமே அதிகாரங்கள் இருந்தன. ஆனால், ஜனாதிபதித் தேர்தலின்போது மக்கள் தீர்க்கமான முடிவை எடுத்திருந்தனர். உயர் மட்டத்திலிருந்து சாதாரண மக்களிடத்தில் அதிகாரத்தை கைமாற்றினர். எனவே, இந்த மக்களுடனேயே எமக்கு பிணைப்பு உள்ளது. கட்டம் கட்டமாக நாட்டை மீட்டெடுப்போம்.
அஸ்வெசும கொடுப்பனவை அதிகரித்துள்ளோம். வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கியுள்ளோம்.
அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்துக்குள் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.காங்கேசன்துறை, பரந்தன், மாங்குளம் ஆகிய பிரதேசங்களில் புதிய கைத்தொழிற் பேட்டைகளை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளோம். புலம்பெயர், இலங்கையர்களுக்கு இங்கு முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கிறோம். தொழில்வாய்ப்பு இல்லாதுள்ள இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்போம். அரச திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். பொலிஸ் திணைக்களங்களில் தமிழ் பேசும் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. இரண்டாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் இணைக்கப்படவுள்ளனர். தமிழ் பேசும் இளைஞர்களையும் இதில் இணைந்து கொள்ளலாம். இந்தப் பகுதிகளில் போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்துள்ளன. இதனைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பொதுத் தேர்தலின் பின்னர் வட பகுதிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு அங்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிலையில், வல்வெட்டித்துறையில் நடந்த தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஜனாதிபதியை, தாயொருவர் கட்டியணைத்தார். இப்புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இக்கூட்டததில் கலந்து கொண்ட ஜனாதிபதி, மறுமலர்ச்சிப் பயணத்திற்கு வலுச்சேர்க்க அணிதிரண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
யாழில் விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்
திறக்க ஜனாதிபதி அனுமதி வழங்கல்
யாழ். மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்தைத் திறப்பதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வழங்கியுள்ளார்.
நாட்டில், இரண்டு வாரமாக தடைப்பட்டிருந்த கடவுச்சீட்டு விநியோகச் செயற்பாடுகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த ஜனாதிபதி, மேலும் யாழ். மாவட்டத்திலும் கடவுச்சீட்டு அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்தைத் திறப்பதற்கு வழிவகைகள் ஏதும் உள்ளதா என, யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபனிடம், ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த மாவட்ட பதில் அரசாங்க அதிபர் பிரதீபன், எமது மாவட்ட செயலகத்தில் இடப்பற்றாக்குறை உள்ளது. இருப்பினும் கடவுச்சீட்டு அலுவலகம் வடபகுதி மக்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது.
இதனால், இதற்கான இடத்தை ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கலாம் எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் ஸ்ரீதரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், இளங்குமரன், இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், திணைக்களத் தலைவர்கள், பணிப்பாளர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.