நேட்டோ உறுப்பு நாடுகள் தங்கள் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்குமாறு டிரம்ப் கூறி வருகிறார். வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) டிரம்பின் வெறுப்புக்குரிய பொருளாதார விடயங்களில் ஒன்றாகும். அதிபராக தனது முதல் பதவிக் காலத்தின் போது, மற்றைய நேட்டோ உறுப்பு நாடுகள் ‘தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிட வேண்டும்’ என்று ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்கை அடையத் தவறினால், நேட்டோவிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வதாக அவர் அப்போது அச்சுறுத்தினார்.
டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாயை கையகப்படுத்தும் நோக்கங்களை அறிவித்துள்ளமைக்கு எதிராக சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் இரண்டாம் முறை பதவியேற்ற பின், ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் ஆற்றிய உரை மேலும் பல பரபரப்புகளையும், விவாதங்களையும் எழுப்பியுள்ளது.
அமெரிக்கவின் 51ஆவது மாநிலமாக கனடா என்ற அறிவிப்பும், நேட்டோ நாடுகளுடன் முண்படும் டிரம்ப் தலைமையிலான அரசின் நடவடிக்கைகளாலும் ஐரோப்பிய நாடுகள் பல, கடுமையாக விசனமடைந்துள்ளன.
78 வயதான குடியரசு கட்சியின் தலைவரான டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக கடந்த திங்கட்கிழமை பதவியேற்றார். அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கி விட்டது. இன்று முதல், அமெரிக்க நாடு மீண்டும் செழித்து உலகம் முழுதும் மதிக்கப்படும் என்றும் சூளுரைத்தார்.
அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக உருவாக்கவே, துப்பாக்கிச் சூட்டில் இருந்து கடவுளால் காப்பாற்றப்பட்டேன் எனவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறிய புதிய உத்தரவுகள் அதிர்ச்சியூட்டும் அதிரடியாக வெளிவந்துள்ளது.
குறிப்பாக அமெரிக்க – மெக்சிக்கோ எல்லையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, சட்ட விரோத அகதிகளின் ஊடுருவல் தடுத்து நிறுத்தப்படும்.
பனாமா கால்வாயில், அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இதனால், அந்த கால்வாய் அமெரிக்காவோடு மீண்டும் இணைக்கப்படும். அதை சீனா நிர்வகிக்க தேவையில்லை.
மின் வாகனம் கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ் பெறப்பட்டதுடன் விரும்பிய வாகனங்களை பயன்படுத்தலாம். அமெரிக்காவில் ஆண் – பெண் என்ற இரு பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும்.
மத்திய கிழக்குக்குள் இஸ்ரேல்–ஹமாஸ் போர் நிறுத்தம் உறுதி செய்யப்படும். மேலும் அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு கட்டப்படும்.
செவ்வாய்க் கிரகத்தில் அமெரிக்க கொடி பறக்கும். மெக்சிகோ வளைகுடா இனி, அமெரிக்க வளைகுடா என அழைக்கப்படும். அமெரிக்க குடிமக்களை வளப்படுத்த வெளிநாடுகளுக்கு வரி விதிக்கப்படும்.
அமெரிக்காவில் பேச்சுரிமைக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன.சட்டத்துக்கு கட்டுப்படாத குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வளர்ந்து வரும் நாடாகவே அமெரிக்காவை கருதுகிறோம், அத்துடன் எல்லைகளை விரிவாக்குவோம் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் அரசின் தவறான நிர்வாகத்தால் எரிசக்தி விலை கடுமையாக உயர்ந்தது. எனவே கொள்கைகளால் எரிசக்தி அவசரநிலை அறிவிக்கப்படுகிறது.
இயற்கை பேரிடர்களை தடுப்பதிலும், எல்லைப் பாதுகாப்பு பிரச்சினைகளை தீர்ப்பதிலும் ஜோ பைடன் அரசு தோல்வி அடைந்து விட்டது.
கொரோனா தடுப்பூசி போட மறுத்ததற்காக இராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களை, ஊதியத்துடன் மீண்டும் பணியில் அமர்த்துவேன் என அமெரிக்க ஜனாதிபதி பேசினார்.
உலக சுகாதார அமைப்பில் விலகல்:
மேலும் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
முக்கியமாக உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது. கொவிட் தொற்று உள்ளிட்ட பல தொற்று நோய்கள் பரவிய போது, உலக சுகாதார அமைப்பு தனது கடமையை செய்யவில்லை.
அமெரிக்க பாராளுமன்ற வரலாற்றின் கறைபடிந்த 2021 ஜனவரி 6 கலவர வழக்கில், தொடர்புடைய 1,500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் ட்ரம்ப் ஆதரவாளர்கள்.
கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் பயன்படுத்தும் தகவல் தொடர்புத் தளத்தை திடீரென நிறுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் டிக் டாக் செயலி மீதான தடையை 75 நாட்களுக்கு தாமதப்படுத்தும் நிர்வாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேட்டோவுடன் முரண்படும் ட்ரம்ப்:
நேட்டோ உறுப்பு நாடுகள் தங்கள் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று டிரம்ப் நீண்டகாலமாக கூறி வருகிறார்.அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உட்பட 32 நாடுகளை உள்ளடக்கிய வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) டிரம்பின் வெறுப்புக்குரிய விஷயங்களில் ஒன்றாகும்.
ஜனாதிபதியாக தனது முதல் பதவிக் காலத்தின் போது, மற்ற உறுப்பு நாடுகள் ‘தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிட வேண்டும்’ என்ற ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்கை அடையத் தவறினால், நேட்டோவிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வதாக அவர் அப்போது அச்சுறுத்தினார்.
தனது பங்கை செலுத்தாத ஒரு உறுப்பு நாடு தாக்கப்பட்டால், அமெரிக்கா அதை பாதுகாக்காது என்றும் டிரம்ப் கூறியதை ஐரோப்பிய நாடுகள் கடுமையாக எதிர்த்தன.
ஜனவரியின் 2025 தொடக்கத்தில், நேட்டோவின் ஐரோப்பிய உறுப்பு நாடுகள் தங்கள் தேசிய வருமானத்தில் 5% (முந்தைய இலக்கை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாக) இதற்காக செலவழிக்க வேண்டும் என்று ட்ரம்ப் தற்போது அழைப்பு விடுத்துள்ளார்.
நேட்டோவின் நோக்கம் மற்றும் பணியை ‘அடிப்படையில் இருந்தே மறு மதிப்பீடு செய்வது’ தான் டிரம்பின் குறிக்கோள் என்று அவரது அரசியல் பிரசார வலைத்தளம் விபரிக்கிறது.நேட்டோ கூட்டணியில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து கருத்து வேறுபாடு அமெரிக்கவில் பாரியளவில் நிலவுகிறது.
ஆனால் வெளியேறாமல் கூட, இந்தக் கூட்டணியை பலவீனப்படுத்த அவருக்கு இன்னும் வழிகள் உள்ளன என்றும் இராணுவ – அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் அதனை அவரால் சாதிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
ஐங்கரன் விக்கினேஸ்வரா