காஸாவில் 15 மாதங்களாக நீடித்த யுத்தம் கடந்த 19 ஆம் திகதி (2025 ஜனவரி) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதாவது 470 நாட்கள் தொடர்ந்த இப்போர் இஸ்ரேலுக்கும் ஹமாஸுககும் இடையில் சர்வதேச மத்தியஸ்தத்துடன் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தையின் ஊடாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
ஆனால் பணயக்கைதிகள் மற்றும் யுத்தநிறுத்தத்திற்கு கடந்த 15 ஆம் திகதியே இரு தரப்பினரும் இணக்கம் கண்ட போதிலும், 19 ஆம் திகதி விடுவிக்கப்படும் கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளியிடும் வரை இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்தது. அக்காலப்பகுதியில் மாத்திரம் காஸாவில் 120 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதோடு, 220 மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
யுத்தநிறுத்த உடன்பாட்டுக்கு அமைய முதன் முறையாக மூன்று பெண் பணயக்கைதிகளை ஹமாஸ் ஞாயிறன்று விடுவித்தது. வடக்கு இஸ்ரேலைச் சேர்ந்த ரொமி கொனன் (வயது 24), பிரித்தானிய தாய்க்கும் இஸ்ரேலிய தந்தைக்கும் பிறந்த எமிலி டமரி (வயது 28), மிருகவைத்திய தாதி டொரோன் ஸ்டெய்ன்பிரசர் (31 வயது) ஆகியோரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளவர்களாவர்.
இவர்களது விடுவிப்பின் ஊடாக இஸ்ரேல் -ஹமாஸ் யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
ஹமாஸ் இம்மூன்று பணயக்கைதிகளையும் மத்திய காஸாவில் உள்ள சரயா சதுக்கத்தில் வைத்து மாலை 6.00 மணியளவில் சர்வதேச செஞ்சிலுவைப் பிரதிநிதிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தது. இவர்களைக் கையளிக்கும் நிகழ்வை உலக மக்களைப் போன்று இஸ்ரேலியர்களும் நேரலையில் பார்த்தனர். இஸ்ரேலின் தீவிர தாக்குதலுக்கு மத்தியிலும், பணயக் கைதிகள் இதுவரை உயிருடன் இருந்த அந்நிகழ்வு முழு உலகையும் அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கியது.
இது மாபெரும் வியப்பு என்பதே பாதுகாப்பு ஆய்வாளர்களின் கருத்தாகும்.
அதேநேரம் இப்பணயக் கைதிகளை விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒழுங்கு, அங்கு கூடிய மக்கள் வெள்ளம், ஹமாஸ் போராளிகளின் எண்ணிக்கை, அவர்கள் கைதிகளை அழைத்து வரப் பயன்படுத்திய புதிய வாகனங்கள், கைதிகள் எவ்வித சஞ்சலமோ, தயக்கமோ இன்றி ஹமாஸின் வாகனங்களில் வருகை தந்தமை, அவர்கள் செஞ்சிலுவை சங்க வாகனங்களில் ஏறியமை, ஹமாஸ் வழங்கிய பரிசுப் பொருட்களை இப்பணயக் கைதிகள் சிரித்த முகத்துடன் பெற்றுக்கொண்டமை, அவர்களை பொறுப்பெடுத்த சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அழைத்து சென்று இஸ்ரேலின் ரமீம் தளத்தில் ஒப்படைத்தமை, அவர்களை இஸ்ரேல் அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, அதேதினம் உறவினர்களிடம் ஒப்படைத்தமை, உறவினர்கள் மகிழ்ச்சி ததும்ப ஆரத் தழுவி அவர்களை வரவேற்றமை என எல்லாமே இப்பணயக் கைதிகளின் விடுவிப்பின் போது மக்கள் அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாக வழிவகுத்த காரணங்களாக அமைந்திருந்தன.
கடந்த 15 மாதங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் காஸாவில் 47 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 17 ஆயிரத்து 841 பேர் சிறுவர்களாவர். 12 ஆயிரத்து 298 பேர் பெண்கள், 1,068 மருத்துவர்களும் 202 ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒரு இலட்சத்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 1600 குடும்பங்கள் குடியுரிமை பதிவில் இருந்து முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ளன. 35 ஆயிரத்து 74 பிள்ளைகள் பெற்றோரை இழந்துள்ளனர். இருப்பிடங்களை இழந்து கூடாரங்களிலும் முகாம்களிலும் 90 சதவீதமானவர்கள் தங்கியுள்ளனர். 34 வைத்தியசாலைகள் செயழிலந்துள்ளன. காஸாவின் முழு உட்கட்டமைப்பு வசதிகளையுமே இப்போர் அழித்துள்ளது.
இவ்வாறு மாபெரும் அழிவுகளுக்கும் இழப்புக்களுக்கும் முகம் கொடுத்துள்ள காஸா மக்கள் யுத்தநிறுத்த இணக்க தினத்தை பெரிதும் கொண்டாடினர். அதிலும் பணயக் கைதிகள் கையளிப்பு நிகழ்வை அவர்கள் பெருநாளாகவே கருதினர் எனலாம். கைதிகள் கையளிக்கப்படுவதை பார்ப்பதற்காக அவர்கள் சரயா சதுக்கத்தில் அலைமோதினர். ஹமாஸ் படையினர் அவர்களை ஒழுங்குபடுத்துவதில் கடும் சிரமங்களையும் எதிர்கொண்டனர்.
அந்த மக்கள் இழப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்த போதிலும் இத்தகைய மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும் செயற்படுவதற்கு அவர்களது மனபலமே அடிப்படைக் காரணம். குறிப்பாக இஸ்லாத்தில் பலஸ்தீனும் அல் அக்ஸாவும் முக்கியத்துவம் பெற்றவையாக விளங்குகிறது. அதனால் இழப்புக்களுக்கும் அழிவுகளுக்கும் முன்பாக அவர்களது இறைநம்பிக்கை அவர்களை துணிந்து எழுந்து நிற்க வைத்திருக்கிறது.
அதேநேரம் காஸா மீது தொடராக தாக்குதல்களை முன்னெடுத்து ஹமாஸை முற்றிலும் பலமிழக்கச் செய்து அழித்துவிட்டதாக கூறிவந்த இஸ்ரேலுக்கு சரயா சதுக்கத்தில் கூடியிருந்த ஹமாஸ் போராளிகள் எண்ணிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என்ற கருத்தும் பரவலாக நிலவுகிறது.
குறிப்பாக இஸ்ரேல் முன்னெடுத்துவந்த தாக்குதல்களின்படி, எந்தவொரு பணயக்கைதியும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் நிலவியது. ஆனால் ஹமாஸ் முதற்கட்டமாக 3 கைதிகளை விடுவித்தமை மற்றொரு அதிர்ச்சியாக அமைந்திருக்கலாம். அதிலும் அக்கைதிகள் உணவு, தண்ணீர் இன்றி கஷ்டப்பட்டவர்கள் போன்ற தோற்றத்தை அளிக்காததும் மற்றொரு ஆச்சரியமாக அமைந்திருக்கலாம். அவர்கள் சாதாரண தேகாரோக்கியம் கொண்டவர்களாக இருப்பதை மருத்துவ பரிசோதனைகளும் கூட உறுதிப்படுத்தின.
இவ்வாறான நிலையில் இம்மூன்று பணயக் கைதிகளுக்கு ஈடாக சிறைகளில் இருந்த 90 பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் முதற்கட்டமாக விடுவித்தது. இவற்றின் ஊடாக இருதரப்பு யுத்தநிறுத்தத்தை இஸ்ரேலும் நடைமுறைக்கு கொண்டு வந்தது.
அதற்கேற்ப காஸாவில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கள் இருப்பிடங்களுககு செல்ல இடமளிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள திண்மக் கழிவுப் பொருட்களையும் இடிபாடுகளையும் அகற்றும் பணிகளில் பல நாடுகளும் ஈடுபட்டுள்ளன. முதல் நாளே 630 இற்கும் மேற்பட்ட மனிதாபிமான உணவுப் பொருள் ட்ரக்குகள் காஸாவுக்குள் சென்றுள்ளன.
ஆனால் இப்போர் ஆரம்பித்ததில் இருந்து 2025 ஜனவரி 10 வரையும் காஸாவில் 70 ஆயிரம் தொன் வெடிபொருட்கள் குண்டுகளாக வீசப்பட்டுள்ளன. அவற்றில் 10 சதவீதமானவை அதாவது 07 ஆயிரம் தொன் வெடிப்பொருட்கள் வெடிக்காத நிலையில் காஸாவில் காணப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று இஸ்ரேலிய ஊடகமான செனல் 12 தெரிவித்துள்ளது.
மேலும் காஸாவில் ஒவ்வொரு சதுர மீற்றருக்கும், 107 கிலோவுக்கும் அதிகமான குப்பைகள் காணப்படுகின்றன. அவற்றில் வெடிக்காத வெடிமருந்துகள், அபாயகரமான பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றில் மனித எச்சங்களும் இருக்க முடியும்.
இந்த வெடிக்காத வெடிபொருட்கள் யுத்தநிறுத்தம் ஏற்பட்ட பின்னரும் கூட அங்குள்ள மக்களுக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும். குறிப்பாக அவ்வெடிபொருட்கள் காயங்களையும் உயிராபத்துக்களையும் கூட ஏற்படுத்தலாம் என்றுள்ள ஐ.நா. மனிதாபிமான நிறுவனங்கள், இப்போரினால் காஸாவில் 50.8 மில்லியன் தொன் திண்மக்கழிவு இடிபாடுகள் காணப்படுவதாகவும் அவற்றை முறையாக அப்புறப்படுத்த 14 வருடஙகள் செல்லும். இதற்கென 970,945,431 அமெரிக்க டொலர்கள் செலவாகுமென என மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கு சேர்ந்துள்ள இடிபாடுகள் உக்ரைனில் நடந்த போரின் இடிபாடுகளை விடவும் குறிப்பாக 2008 முதல் நடந்த அனைத்து போர்களின் மொத்த இடிபாடுகளை விட 17 மடங்கு அதிகமாகும். இங்கு அழிக்கப்பட்டுள்ள குடியிருப்புக்களை முழுமையாகக் கட்டியெழுப்ப 2040 வரை செல்ல முடியும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. காஸாவை கட்டியெழுப்ப 80 பில்லியன் டொலர் தேவை எனவும் கணிப்பிடப்பட்டிருக்கிறது.
உலக வங்கி மற்றும் ஐ.நா.வின் கூட்டு மதிப்பீட்டின் படி, காஸாவின் முதன்மை வீதிகளில் 92 சதவீதம் சேதமடைந்தும் அழிவுற்றுள்ளன. சுமார் 75 சதவீத தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு சேதமடைந்தும் அழிக்கப்பட்டும் உள்ளன.
இப்போரினால் இடிந்து விழுந்துள்ள காஸாவை மீண்டும் கட்டியெழுப்புவது நவீன வரலாற்றில் மிகவும் வலிமையான மறுகட்டமைப்பு முயற்சிகளில் ஒன்றாகவே இருக்கும். இரண்டாம் உலகப் போரில் டிரெஸ்டன் மீதான குண்டுவீச்சு அல்லது ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் அணுகுண்டுத் தாக்குதல்கள் போன்ற உலகின் மிகவும் அழிவுகரமான போர்க்கால நிகழ்வுகளை நினைவூட்டும் அழிவை 365 சதுர கிலோமீற்றரை உள்ளடக்கிய காஸா சந்தித்துள்ளது.
இரண்டாம் கட்டமாக நான்கு பணயக்கைதிகளை ஹமாஸும் ஒரு தொகை பலஸ்தீன சிறைக்கைதிகளை இஸ்ரேலும் நேற்று சனிக்கிழமையும் விடுவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மர்லின் மரிக்கார்