- மாற்று அரசியலை, மாற்றத்துக்கான அரசியலை, புத்தாக்கத்திறனுள்ள நடவடிக்கைகளை, மாதிரிகளை இந்தக் கட்சிகள் எவையும் காண்பிக்கத் தவறுகின்றன.
- தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பலவீனங்களைத் தேடுவதிலேயே – அது தோல்வியைத் தழுவ வேண்டும் என்பதிலேயே தமது முழுச் சக்தியையும் செலவழிப்பதாகத் தெரிகிறது.
- ஆனால், தேசிய மக்கள் சக்தியின் புதிய எழுச்சியானது இனவாத அரசியலின் பிடரியில் அடியைப் போட்டுள்ளது.
- தமிழ்த்தேசியக் கட்சிகள், தமக்கிடையில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்காகப் பாடாய்ப்படுகின்றன. ஆனால், அதற்கு மாறாகவே அவற்றின் செயற்பாடுகளும் சிந்தனையும் உள்ளது.
ள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை எதிர்கொள்வதற்கேற்ற விதமாக அரசியல் வியூகங்களை வகுக்கும் நடவடிக்கைகளைப் பல தரப்பும் தீவிரமாக முன்னெடுப்பதாகத் தெரிகிறது. அப்படியொரு வியூகம் வகுக்கப்படவில்லை என்றால், அது தேசிய மக்கள் சக்திக்கே அதிக வாய்ப்புகளைக் கொடுக்கும் என எதிர்த்தரப்புகள் கருதுகின்றன. ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் இரண்டிலும் வெற்றியைப் பெற்றிருக்கும் தேசிய மக்கள் சக்தியே உள்ளூராட்சி மன்றங்களிலும் வெற்றியைப் பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகமுண்டு என்ற அபிப்பிராயமும் மதிப்பீடும் பொதுவாகவே உண்டு. ஆனால், இதில் சில மாற்றங்களுக்கும் இடமுண்டு எனச் சில அவதானிகள் சொல்கின்றனர்.
எதுவாக இருந்தாலும் எதிர்த்தரப்பு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்கொண்டே ஆகவேண்டும். அவற்றைப் பொறுத்தவரையில் முடிந்தளவுக்கும் அதை தமக்குச் சாதமாக்கவே முயற்சிக்கும். இல்லையென்றால், எதிர்த்தரப்பின் அரசியல் மேலும் மோசமடையும். குறிப்பாக தெற்கிலே ஐக்கிய தேசியக் கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவும் மலையகத்தில் இ.தொ.க மற்றும் முற்போக்குக் கூட்டணியும் முஸ்லிம் கட்சிகளும் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளன. அவ்வாறே, வடக்குக் கிழக்கில் தமிழ்த்தேசியக் குழாத்தினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, சமத்துவக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளும் இந்த நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளன. இதை விட வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கிளிநொச்சி போன்ற இடங்களில் மருத்துவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அருச்சுனாவும் சுயேட்சைக் குழுக்களை நிறுத்தி தலையிடியைக் கொடுக்கும் சூழல் உண்டு.
தற்போதுள்ள சூழலில் – மக்களின் மனநிலையில் ஒரு குழப்பமான தன்மையே காணப்படுகிறது. பெரிய, பாரம்பரியக் கட்சிகளில் நம்பிக்கை கொள்ள முடியுமா? என்ற கேள்வி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையக தரப்புகள் அனைத்திலும் பொதுவாகக் காணப்படுகின்ற ஒரு யதார்த்த நிலையாகும். மாற்று அரசியலை, மாற்றத்துக்கான அரசியலை, புத்தாக்கத்திறனுள்ள நடவடிக்கைகளை, மாதிரிகளை இந்தக் கட்சிகள் எவையும் காண்பிக்கத் தவறுகின்றன.
அதிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்ததற்குப் பிறகு, அதை எதிர்கொள்வதற்கு அல்லது அதற்கு மாற்று நிலையில் முன்னெடுப்பதற்குரிய அரசியல் உணர்திறனை இவை எதிலும் காணமுடியவில்லை. பதிலாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பலவீனங்களைத் தேடுவதிலேயே – அது தோல்வியைத் தழுவ வேண்டும் என்பதிலேயே தமது முழுச் சக்தியையும் செலவழிப்பதாகத் தெரிகிறது.
இது பயனற்றதாகும். இதனால் இந்தக் கட்சிகளுக்கும் பயனில்லை. இவை பிரதிபலிக்கின்ற மக்களுக்கும் (சமூகத்துக்கும்) நன்மைகள் ஏற்படப்போவதில்லை. நாட்டுக்கும் எதுவும் கிடைக்கப்போவதில்லை. ஏனெனில் இது பெறுமானமற்ற அரசியல் முன்னெடுப்பாகவே இருக்கிறது. இதைத் தவிர்த்து, புதிய, மாற்று அரசியலொன்றை முன்னெடுத்தால், அது சம நேரத்தில் தேசிய மக்கள் சக்திக்கும் பயனுடையதாக இருக்கும். மக்களுக்கும் (நாட்டுக்கும்) பயனைத் தரும். இந்தக் கட்சிகளுக்கும் உபயோகப்படும்.
எவ்வாறெனில், மெய்யாகவே ஒரு மாற்று அரசியலை ஒவ்வொரு தரப்பும் முன்னெடுக்கும்போது, அதனுடைய புத்தாக்கத்திறனால், அது மக்களிடம் வரவேற்பைப் பெறக் கூடிய சாத்தியங்களை உண்டாக்கும். அப்படியான ஒரு நிலை ஏற்படும்போது, அதை எதிர்கொள்வதற்காக தேசிய மக்கள் சக்தியும் தன்னை மேலும் புதுப்பித்தும் சரிப்படுத்திக் கொள்ளவும் முயற்சிக்கும். இவை இரண்டினது புத்தாக்கத் திறனால் மக்களுக்கும் நாட்டுக்கும் பெரும் முன்னேற்றமும் நன்மையுமே ஏற்படும். இலங்கையின் அரசியலில் நீடித்த தேக்கமே உண்டு. இனவாதத்திலும் (அடிப்படைவாதத்திலும்) அதை முன்னெடுப்பதற்கான முரண்பாட்டு உருவாக்கத்திலும் மட்டுமே தமது அரசியலை மையப்படுத்தியுள்ளன பெரும்பாலான கட்சிகள். மலையக் கட்சிகள் இதிலிருந்து விலக்கு. அவற்றின் பிரச்சினை வேறாக இருப்பதால், அவை இந்தப் போக்குக்குச் சற்றுத் தள்ளியே நிற்கின்றன. ஏனைய தமிழ், முஸ்லிம், சிங்களக் கட்சிகளில் மிகச் சிலவற்றைத் தவிர, ஏனைய அனைத்தும் முரண்பாட்டு அரசியலையும் அதற்குத் தோதான இனவாத அரசியலையுமே பேரார்வத்தோடு முன்னெடுத்து வருகின்றன. இதற்கு வெளியே நிற்கும் சக்திகளுக்கு (கட்சிகளுக்கு) மக்களிடத்திலே செல்வாக்குக் குறைவு. காரணம், மக்களும் இந்த இனவாத அரசியலுக்குப் பழக்கப்பட்டிருப்பதேயாகும்.
ஆனால், தேசிய மக்கள் சக்தியின் புதிய எழுச்சியானது இந்த இனவாத அரசியலின் பிடரியில் அடியைப் போட்டுள்ளது. அதற்காக முற்று முழுதாக தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இனவாதம் ஒழிக்கப்படும் என்று இந்தக் கட்டுரை வாதிடவில்லை. ஆனாலும் அரசாங்கம் அப்படித்தான் சொல்கிறது.
இந்தப் பின்னணியில்தான் வரவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர் கொள்வதற்கு எதிர்த்தரப்புகள் தங்களைத் தயார்ப்படுத்த வேண்டும். இந்தத் தயார்ப்படுத்தல் என்பது, இனவாதத்துக்கு அப்பால், புதிய அரசியல் உள்ளடக்கத்தோடு சிந்திக்க வேண்டும். ஆனால், அப்படியான சமிக்ஞைகள் எதையும் காண முடியவில்லை. இப்போது நடந்து கொண்டிருப்பது, வழமையைப்போல கட்சிகளுக்கிடையிலான கூட்டுகளாகும். அதாவது எந்த உள்ளடக்க மாற்றத்தையும் நிகழ்த்தாமல், அப்படியே கட்சிகள் தமக்கிடையில் கூட்டுச் சேர்ந்து கொள்வது. இது ஆசனப் பகிர்வு – வெற்றி என்ற அடிப்படையை மட்டுமே கொண்டது. இந்த அடிப்படையில்தான் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இதற்கான பேச்சுகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளன. முதற்கட்டமாக கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையிலான சந்திப்புகள் நடந்துள்ளன. இதில் முன்னேற்றம் ஏற்படுமாக இருந்தால், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் அளவுக்கு இது மாறலாம். அது மாகாணசபைத் தேர்தலுக்கும் செல்லலாம்.
இதேபோலவே முஸ்லிம் கட்சிகளும் மலையகக் கட்சிகளும் தனியாகவும் கூட்டாகவும் எதிர்கொள்வதற்குத் தம்மைத் தயார்ப்படுத்துகின்றன.
இதேவேளை இதில் பிளவுகள் நிகழக் கூடிய வாய்ப்புகளும் உண்டு. குறிப்பாக இடஒதுக்கீட்டில் சர்ச்சைகள் உருவாகும். விட்டுக் கொடுப்புகள் இல்லை என்றால், பிளவு ஏற்படும். இந்தச் சூழலே தமிழ்த்தரப்பிலும் காணப்படுகிறது. தமிழ்த்தேசியக் கட்சிகள், தமக்கிடையில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்காகப் பாடாய்ப்படுகின்றன. ஆனால், அதற்கு மாறாகவே அவற்றின் செயற்பாடுகளும் சிந்தனையும் உள்ளது.
இவர்கள் ஒற்றுமை, ஐக்கியம் என்று சொல்லும்போதெல்லாம் அதற்குத் தமிழ் மக்களிடத்திலே துளி மதிப்பும், சிறு நம்பிக்கையும் இல்லாது போய் விட்டது. ஒற்றுமை, ஐக்கியம் என்று யாராவது சொன்னால், அதைப் பகடியாகவும் சந்தேகத்தோடும் பார்ப்போரே அதிகம். இதற்குக் காரணம், ஐக்கியம், ஒற்றுமை என்று சொல்லப்படும்போதெல்லாம் மேலும் விரிசல்களும் உடைவுகளும் பிளவுகளும் பிரிவுகளுமே நிகழ்ந்திருக்கின்றன.
2009 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரின் கீழ் இணைந்திருந்த தரப்புகள் கூட ஒவ்வொன்றாகப் பிரிந்து, பிளவு பட்டு இப்பொழுது பத்துக்கு மேற்பட்ட குழுக்களாக மாறி விட்டன.
ஒவ்வொரு சிறு குழுவும் பத்துப் பன்னிரண்டு பேரைக்கொண்டவையாகவே உள்ளன. சிலவற்றுக்கு அது கூட இல்லை.
இந்தச் சூழலில்தான் தமிழ்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கும் தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்துவதற்கும் தமிழ் மக்களைத் தேசமாகத் திரட்டுவதற்கும் பல முன்னெடுப்புகள் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. இப்போதும் நடக்கின்றன.
2009 க்குப் பிறகு – தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசியப் பேரவை, தமிழ்மக்கள் பொதுச்சபை (Tamil people’s Assembly) தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு எனப் பல அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. இடையில் P to P என பருத்தித்துறை தொடக்கம் பொத்துவில் வரை என்ற அமைப்பொன்று. இதற்கெல்லாம் சிகரம் வைப்பதைப்போல, தமிழ்ப்பொது வேட்பாளர் கூட கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது நிறுத்தப்பட்டார்.
இப்படியெல்லாம் முயற்சி எடுக்கப்பட்டபோதும் ஐக்கியத்துக்கு மாறாகவே நிலைமை வளர்ச்சியடைந்துள்ளது. ஏன், இப்பொழுது இலங்கைத் தமிழரசுக் கட்சியே உடைந்து சிதறும் நிலையிலேயே உள்ளது. அதனுடைய உள் வீட்டு மோதல்கள் கட்சியை நீதிமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் நீதியைக் கேட்கும் அளவுக்கும் முறைப்பாடுகளைச் செய்கின்ற அளவுக்கும் கொண்டுபோய் நிறுத்தியுள்ளன.
தமிழரசுக் கட்சி இப்படியான நிலையில் இருக்கும்போது, அதனோடு கூட்டுச் சேர்ந்துகொள்ளலாம் என்று முயற்சிக்கின்றன ரெலோவும் புளொட்டும்.
மறுவளமாக ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனித்து நிற்பதா, தம்மோடு இணையக் கூடிய சக்திகளோடு இணைந்து நிற்பதா எனச் சிந்திப்பதாகத் தெரிகிறது.
எதுவாக இருந்தாலும் அடுத்த ஒரு மாதத்துக்குள் அதைச் செய்து விட வேண்டும். இல்லையென்றால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலைக் கோட்டை விட வேண்டியதுதான்.
இப்போதுள்ள சூழலில் தமிழ்க்கட்சிகளுக்கிடையே பெரிய இணக்கப்பாடோ, ஐக்கியமோ வருவதற்கான சூழல் இல்லை.
இந்தக் கட்சிகளின் பலவீனத்தை – இந்தச் சிதறலை மதிப்பிட்டபடியால்தான் அரசாங்கம் இத்தனை வேகமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துகிறதா? அல்லது, நடத்தப்படாலே இந்தத் தேர்தல்களை நடத்துவதற்கு அது முயற்சிக்கிறதா?