Home » டிஜிட்டல் அடையாள அட்டையை வைத்து பரப்பப்படும் கட்டுக்கதை!

டிஜிட்டல் அடையாள அட்டையை வைத்து பரப்பப்படும் கட்டுக்கதை!

'குறுகிய அரசியல் இலாபங்களுக்காக மக்களை ஏமாற்றி, பயமுறுத்த முயற்சிக்கின்றனர்' என்கிறார் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன

by Damith Pushpika
January 26, 2025 6:04 am 0 comment

டிஜிட்டல் அடையாள அட்டை மூலம் தகவல்கள் மூன்றாம் தரப்பினருக்குச் செல்லும் என்பது அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் கட்டுக்கதை. அவ்வாறு எந்தத் தகவல்களும் வெளிச்செல்லாது என்று டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். எமக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே பிரதியமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

கே: தேசிய அடையாள அட்டையொன்று ஏற்கனவே இருக்கும்போது டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கும் திட்டமொன்றுக்கு அரசாங்கம் ஏன் தயாராகின்றது?

பதில்: இது இன்று, நேற்று தொடங்கிய முயற்சி அல்ல. 2012ஆம் ஆண்டிலேயே டிஜிட்டல் அடையாள அட்டைக்கான தேவை அடையாளம் காணப்பட்டது. இது குறித்து நாட்டில் பல்வேறு விவாதங்கள் நடந்தன. ஆனால் இதுவரை, முந்திய நிர்வாகத்தால் இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. இந்தப் பின்னணியில்தான் இதனை யதார்த்தம் ஆக்குவதற்கு நாங்கள் முயற்சியெடுத்துள்ளோம்.

கே: டிஜிட்டல் அடையாள அட்டையை வைத்திருப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் எவை?

பதில்: ஒரு நபரின் அடையாளத்தை நிரூபிப்பதில் தேசிய அடையாள அட்டை ஒரு அத்தியாவசிய சாதனமாக மாறியுள்ளது. ஆனால் சில சந்தர்ப்பங்களில், மக்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க முயற்சிக்கும்போது, பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், இச்சிரமங்களைச் சமாளித்து, இந்த அட்டையின் மூலம் மக்கள் தங்கள் செயற்பாடுகளை எளிதாக்க முடியும் என நம்புகின்றோம்.

நாம் ஒரு வங்கியில் கணக்குத் தொடங்கச் சென்றாலும் சரி, அல்லது வேறொருவரின் பெயருக்குப் பத்திரத்தை மாற்றச் சென்றாலும் சரி, நம் அடையாளத்தை நிரூபிக்க பல்வேறு ஆவணங்களை முன்வைக்க வேண்டும். உதாரணமாக, அடையாள அட்டை, கைரேகைகள், கையொப்பம் போன்ற பல்வேறு விடயங்களை நாம் செய்ய வேண்டும். இங்கு என்ன நடக்கிறது என்றால், ஒவ்வொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்காமல் டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் அடையாள சரிபார்ப்பு செய்யப்படுகிறது. நவீன உலகில் உங்கள் அடையாளத்தை நிரூபிக்க சிறந்த வழியாக டிஜிட்டல் அடையாள அட்டையைப் பயன்படுத்த முடியும்.

கே: டிஜிட்டல் முறையில் அடையாளங்கள் எவ்வாறு உறுதிப்படுத்தப்படுகின்றன?

பதில்: அடையாளத்தை நிரூபிக்கும் இந்தச் செயல்பாட்டில் மூன்று முறைகளை நாங்கள் முன்மொழிகிறோம். அதாவது, அவரது கைரேகை, முக அம்சங்கள் மற்றும் கண் நிழல். எதிர்காலத்தில் எந்தவொரு இலங்கை குடிமகனின் அடையாளத்தையும் நிரூபிக்க இவற்றை நாம் பயன்படுத்தவிருக்கின்றோம். இது ஆள்மாறாட்டம் செய்வதைத் தடுக்கின்றது. இதன் மூலம் மோசடி, ஊழல், முறைகேடுகள் மட்டுமன்றி, குற்றங்களையும் தடுக்க முடியும்.

கே: இந்த டிஜிட்டல் அடையாள அட்டையை உருவாக்குவதற்கான மென்பொருளுக்கான செலவுகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

பதில்: இதற்கு சுமார் 20 பில்லியன் ரூபா செலவாகும். இந்தப் பணம் மென்பொருளை உருவாக்குவதற்கு மட்டும் செலவிடப்படவில்லை. இதற்கு அதிக எண்ணிக்கையிலான தொழில்நுட்பக் கருவிகள் தேவைப்படுகின்றன. கைரேகைகள், முகங்கள் மற்றும் கண் வட்டங்களை மிகத் துல்லியமாகப் படம்பிடிக்கக் கூடிய உயர்தொழில்நுட்ப கமராக்கள் மற்றும் ஸ்கானர்கள் தேவை. மேலும் ஒரு வைரஸ் ஸ்கானர் தேவை. அதனால்தான், பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து இதற்கான பெரிய செலவுகளை வசூலிப்பதற்குப் பதிலாக, செலவுகளைச் சமாளிக்கக்கூடிய ஒரு வெளிப்புறத் தரப்பினரை ஈடுபடுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். இதற்கான செலவில் கணிசமான பகுதி இந்திய உதவி மூலம் ஈடுசெய்யப்படுகிறது.

கே: இந்த டிஜிட்டல் அடையாள அட்டை உயிர் மரபணுவியல் தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. இந்த அமைப்பை உருவாக்கும் தரப்பினர் இதற்குள் பிரவேசிப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளதா? இதற்கான கட்டமைப்பு எப்படி நடக்கிறது?

பதில்: இந்த டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரணில் விக்கிரமசிங்க காலத்தில் முன்மொழியப்பட்டது. ஆனால் நாங்கள் வந்த பிறகு, அது முற்றிலும் மாறிவிட்டது. இந்த அமைப்பை இலங்கை அரசாங்கம் மட்டுமே அணுக வேண்டும் என்று நாங்கள் கூறினோம். இங்கு, இலங்கைக்கு ஏற்ற வகையில் இந்திய நிறுவனங்கள் டிஜிட்டல் அடையாள அட்டை தரவு அமைப்பை வடிவமைக்க வேண்டும் என்று மட்டுமே இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. டிஜிட்டல் அடையாள அட்டை தரவுத்தளத்தை அணுகுவதற்கு தொடர்புடைய இந்திய நிறுவனங்களுக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. பெறப்படும் தகவல்கள் எம்மிடமே இருக்கும்.

கே: ஆனால் இது தேசிய பாதுகாப்புக்கு ஒரு பிரச்சினையை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் உள்ளனவே?

பதில்: இந்த மென்பொருள் அமைப்பு மிகச்சிறந்த பாதுகாப்பு அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், வெளிநாட்டு நிறுவனங்களோ அல்லது வேறு எந்தத் தரப்பினரோ இந்தத் தரவை அணுக முடியாது. மேலும் இது தேசிய பாதுகாப்புக்கு ஒரு பிரச்சினையை ஏற்படுத்துகிறது என்று சொல்வது ஒரு கட்டுக்கதை. இது குறுகிய அரசியல் இலாபங்களுக்காக மக்களை ஏமாற்றும் செயலாகும். சிலர் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி மக்களைப் பயமுறுத்த முயற்சிக்கின்றனர். அவர்களிடையே தொழில்நுட்ப அறிவு இல்லாததை நான் காண்கிறேன். இல்லையென்றால், அவர்கள் மக்களுக்கு இதுபோன்ற பொய்களைச் சொல்லியிருக்க மாட்டார்கள்.

கே: இதில் வேறு ஏதேனும் தரவுப் பதிவு உள்ளதா?

பதில்: ஒரு நபரின் அடையாளத்தை நிரூபிக்க கைரேகைகள், முகம் மற்றும் கருவிழி என்பன போதுமானவை. ஒருவரின் அடையாளத்தை நிரூபிக்கும் விடயங்களைத் தவிர, தனிப்பட்ட நோய்கள் மற்றும் வங்கி விபரங்கள் போன்றவை இங்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. மேலும், வங்கிகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களின் செயல்பாடுகள் இந்த அமைப்பில் சேர்க்கப்படவில்லை.

கே: இந்த அடையாள அட்டை மூலம் ஒருவர் ஏதாவது ஓர் இடத்திற்குச் சென்றால் அது பற்றிய விபரங்களும் பதிவாகும் எனச் சிலர் கூறுகின்றனர் அல்லவா?

பதில்: அது ஒரு அப்பட்டமான பொய், ஒரு கட்டுக்கதை.

கே: புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை பூர்த்தி செய்ய எவ்வளவு காலம் எடுக்கும்?

பதில்: இந்தியாவுடன் நாம் எட்டியுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. இது சுமார் இரண்டு மாதங்களில் முடிந்துவிடும். அதனைத் தொடர்ந்து மென்பொருளை உருவாக்க சுமார் 18 மாதங்கள் எடுக்கும். எங்கள் நாட்டில் உருவாக்கப்பட்ட மென்பொருளைக் கொண்டு இந்தப் பணியைத் தொடங்குகிறோம். அதன்படி, அடுத்த மாதத் தொடக்கத்தில் இருந்து, அனைத்து புதிய அடையாள அட்டைகளும் டிஜிட்டல் அடையாள அட்டைகளாக வழங்கப்படும். மேலும், தற்போதுள்ள அனைத்து அடையாள அட்டைகளையும் 6 மாதங்களுக்குள் டிஜிட்டல் மயமாக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த முடியுமென்றும் நாங்கள் நம்புகின்றோம்.

கே: அவ்வாறாயின் தேசிய அடையாள அட்டையின் எண்ணில் மாற்றம் ஏற்படுமா?

பதில்: தற்போதைய அடையாள அட்டை எண்ணில் எந்த மாற்றமும் இருக்காது. உங்களிடம் இப்போது உள்ள அதே எண்ணை நீங்கள் அடிக்கடி பயன்படுத்தலாம். ஆனால் புதிதாக வழங்கப்படும் அடையாள அட்டைகள் புதிய எண் அமைப்பைக் கொண்டிருக்கும். பின்னர், ஏற்கனவே உள்ள ஒரு எண் புதிய எண்ணாக மாற்றப்பட்டு, ஒரு மாற்று எண்ணும் உருவாக்கப்படுகிறது. ஆனால் தற்போதைய எண் அதே வழியில் பயன்படுத்தப்படும்.

கே: டிஜிட்டல் அடையாள அட்டையில் என்ன வகையான தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கும்?

பதில்: பழைய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களும் இதில் அடங்கும். கைரேகைகள், முக அம்சங்கள் மற்றும் கருவிழிகள் போன்ற உயிர் மரபணுவியல் தரவுகள் கூடுதலாக சேகரிக்கப்படுகின்றன. பின்னர் யார் வேண்டுமானாலும் தங்கள் கைரேகையைக் கொடுத்து தங்கள் அடையாளத்தை நிரூபிக்க முடியும். இப்போது இருப்பது போல் அடையாள அட்டையைக் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கியூ.ஆர் குறியீடு அல்லது கைரேகையை வழங்கியதும் உங்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்படும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division