நூல்:- வேறாகா வேர்கள்
நூலாசிரியர் :– என் நஜ்முல் ஹுசைன்,
வெளியீடு:- ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றம்,
விலை:- ரூபா650/-
தன்னகத்தே 23 சிறுகதைகளைக் கொண்டு, 87 பக்கங்களில் மலர்ந்திருக்கின்ற “வேறாகா வேர்கள்” நூல் வகவம் என்ற இலக்கிய அமைப்பின் தலைவராகச் செயற்பட்டு வருகின்ற, கவிமணி என்.நஜ்முல் ஹுசைன் வழங்கியிருக்கின்ற நூல் அது.
நீண்ட உரையாடல்களையும்,சொல்லடுக்குகளையும் தவிர்த்து, வாசகர்கள் சலிப்படையாதவாறு எளிய நடையில் கதையை நகர்த்திச் செல்கிறார் கதைஞர். நூலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகள் நான்கு பக்கங்களுக்கு மேற்படாதவை.
“உதாசீனம்” என்று ஒரு கதை. ஒரு பக்கக் கதை அது. கல்லூரி வாசல் தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றது. பழைய மாணவர் ஒருவரை வரவேற்று “எங்கள் மாணவன்” என்று பாராட்டிப் பெருமைப்பட்டுக் கொள்கிறது கல்லூரி.
“மேன்மை தங்கிய நீதிபதி அவர்களே!, உங்களை மிகவும் மரியாதையோடு பேச அழைக்கிறோம்” என்று அறிவிப்புச் செய்கிறான் ஜனகன்.
ஜனகன் இந்தக் கல்லூரியிலேயே முதலாம் வகுப்பில் இருந்து இறுதி ஆண்டு வரை கற்றவன். முதலாம் மாணவனாகவே வகுப்புகளில் திறமை காட்டியவன்.
‘டாக்டர் ஜனகன்’ என்று மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் புகழப்பட்டவன். டாக்டர் ஆவதே அவனுடைய கனவாகவும் இருந்தது. ஆனால், முதல் முயற்சியில் மருத்துவம் படிப்பதற்கு போதிய புள்ளிகள் அவனுக்கு கிடைக்க வில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்தும் முயற்சி கை கூடாமல் போக, விஞ்ஞான ஆசிரியராகி இந்தக் கல்லூரியில் கடமை செய்கிறான். இந்த விழாவின் அறிவிப்பாளர் பொறுப்பும் அவனிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.
சுரேஷ் முதலாம் வகுப்பில் இருந்து இறுதி வகுப்புவரை ஜனகனோடு கற்றவன். உயர் வகுப்பிலும் அவனோடுதான் சேர்ந்திருந்து கற்றபோதும் ஜனகனோ ஆசிரியர்களோ அவனை மதித்ததில்லை.
ஏனெனில், சுரேஷுக்கெல்லாம் அந்தக் கொடுப்பனவே இல்லை. முதலாம், இரண்டாம், மூன்றாம் இடம் என்பதெல்லாம் அவனது சரித்திரத்திலேயே இல்லை. 10ஆம், 15ஆம் பிள்ளையாக வருவான். ஆனால் எப்படியும் பாஸாகி விடுவான்.
“சுரேஷ் சட்டம் கற்று வழக்கறிஞராகி இப்போது நீதிபதியாகப் பதவி பெற்று தான் கற்ற கல்லூரிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறான். அதனால் “எங்கள் மாணவன்” என்று கல்லூரி பெருமைப்பட்டுக் கொள்ளவே இந்த விழா.” என்று கதையை நிறைவு செய்கிறார் கதைஞர்.
எவரையும் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது- உதாசீனம் செய்யக் கூடாது என்ற கருத்தினை எடுத்துச் சொல்வதாக அமைந்த கதை அது.
அரசியல்வாதிகளை கதை மாந்தர்களாகக் கொண்டும் சிலகதைகளை ஆக்கியிருக்கிறார் கதைஞர்.
“எந்த சீட் வேண்டும்” என்ற கதையில், இருபது வருடங்களாக எம்.பியாக இருக்கும் சமத் ஹாஜியாரை தோற்கடிக்கவேண்டும், கொடைவள்ளலாக இருக்கும் சித்தீக் ஹாஜியாரை எம்.பியாக்க வேண்டும் என்று பிரதேசத்தின் பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.
அரசியலில் துளியும் விருப்பமில்லாத சித்தீக் ஹாஜியாரைப் பேசிக் கதைத்து முஸ்லிம்களின் குறையகற்றும் கட்சியின் வேட்பாளராகவும் நிறுத்தி விடுகின்றனர்.
மாபெரும் ஊர்வலம் நடந்து, சித்தீக் ஹாஜியார் சார்பான – முஸ்லிம் குறையகற்றும் கட்சியின் பொதுக் கூட்டமும் நடை பெறுகிறது.
கூட்டத்தில் சித்தீக் ஹாஜியாரைப் புகழ்ந்து தள்ளுகின்றனர். சமத் ஹாஜியாரை தூற்றுவது மட்டுமல்லாமல் அவரின் மனைவி பற்றியும் அசிங்கமாக பேசப்படுகிறது. அவரின் பெண் மக்கள் பற்றியும் கேவலமாகக் கதைக்கிறார் பேச்சாளர். சபை ரசித்து கை தட்டுகிறது.
சித்தீக் ஹாஜியார் எழுந்து கொள்கிறார். பேசியவரை கொஞ்சம் தள்ளிக் கொண்டு ஒலி வாங்கியில் பேசுகிறார்.
“இவ்வாறான அரசியலைச் செய்யவா என்னை அழைத்து வந்தீர்கள். பதவிக்கு வர எந்தப் பொய்யையும் சொல்ல மார்க்கம் அனுமதி வழங்கி இருக்கா? நான் சொர்க்கத்து சீட்டுக்கு ஆசைப்படுறவன். இந்தப் பார்லிமெண்ட் சீட்டுக்கு அல்ல. இந்த வெளையாட்டுக்கு நான் வரல்ல. என்னை தயவுசெய்து விடுங்க” என்று ஆவேசமாக கூறிவிட்டு மேடையை விட்டு இறங்கி நடக்கிறார் சித்தீக் ஹாஜியார்.
இவ்வாறு, வேறாகா வேர்களில் வரும் கதைகள் ஒவ்வொன்றும் மனித மனங்களில் நல்லெண்ணங்களை விதைப்பனவாகவும், சமூக மறுமலர்ச்சி விரும்பியவையாகவும் அமைந்து வந்திருப்பதைக் காண முடியும்.
நூலில், பன்னூலாசிரியர் ஏம்பல் தஜம்மல் முகம்மது, திரைப்பட இயக்குனர் பேராதனை ஏ.ஏ. ஜுனைதீன், பிரபல எழுத்தாளர் கலாபூஷணம் மு.சிவலிங்கம், ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்ற செயலாளர் எம். எஸ். எம். ஜின்னா, ஸ்ரீலங்கா இஸ்லாமிய இலக்கிய மன்றத் தலைவர் தமிழ்த் தென்றல் அலி அக்பர், வலம்புரி கவிதா வட்ட செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் ஆகியோரின் அணிந்துரை, வாழ்த்துரை, சிறப்புரை, வெளியீட்டுரை, பின் அட்டைக்குறிப்பு என்பன இடம்பெற்றுள்ளன.
கதைஞர் என். நஜ்முல் ஹுசைனுக்கு நமது வாழ்த்துகள்.
பாவேந்தல் பாலமுனை பாறூக்