துறைகளில் குறைகளை
துல்லியமாய் கண்டறிந்து
நிறைவாய் தீர்வுக்காய்
நிதர்சனமாய் வந்த திட்ட(மா)ம் இது
தேசத்தின் எழுச்சியொன்றே
நேசிப்பின் அர்த்தமென
தேசியத்தின் நன்மைக்காய்
தேர்வான திட்ட(மா)ம் இது
விடயங்களில் தூய்மையை
விரும்பியே விதைத்து
தடயங்களில் ஏற்றம் கண்டிட
தயவுடனே வந்த திட்ட(மா)ம் இது
முன்னுதாரண நாடு என
முகவரியை முழுதாயமைத்தே
பின்வரும் சமுதாயத்துக்கும்
பிரகாச வழிகாட்டும் திட்ட(மா)ம் இது
ஊழலில்லா நாடென
உலகுக்கு பறைசாற்றிட
கோணலில்லா கொள்கைகளை
கொண்டதே இத்திட்ட(மா)ம்
நீசத்தனங்கள் நிர்மூலமாகி
நேசத்தன்மை நிமிர்ந்திட
வாசனையாய் வலம் வரும்
வாகைக்கான திட்ட(மா)ம் இது
தீட்டுப்பட்ட எண்ணங்களை
திடமாகவே நாம் ஒழித்து
பூட்டுப்போட்ட உள்ளங்களிலும்
பூரிப்பைத்தரவந்த திட்ட(மா)ம் இது
மக்கள் நலனை முதலாக்கி
சிக்கல் பலதை சிறையாக்கி
தேசம் செழித்து வளர்ந்திடவே
தெம்புடன் வந்த திட்ட(மா)ம் இது
பாதகம் தரும் விடயங்களை
பக்குவமாய் இனம் கண்டு
சாதக நிலையாய் மாற்றிடவே
சாமர்த்தியமாய் வந்த திட்ட(மா)ம் இது
சர்ச்சைகள் பலதைத் தொலைத்து
சகவாசத்தில் மனதை நிலைத்து
இச்சை கொள்ள வைக்கும் இலங்கை காண
இனிதாய் வந்த திட்ட(மா)ம் இது
தூய்மையான இலங்கை காண
தொடக்கமானவரோடு தோள் சேர்த்து
தீமையான விடயங்கள் மாள
திடமாய் யாவரும் கைகோர்ப்போம்
மறுமலர்ச்சி யுகமொன்று – நம்
மண்ணுலகில் மலர்ந்திட
வருகின்ற நற் காட்சியெல்லாம்
வரலாற்றில் பதிந்திட
இலங்கை தேசமும்
இலங்கியே பெயரெடுக்க
வெல்லட்டும் கிளீன் ஸ்ரீலங்கா – வாகையை
அள்ளட்டும் கிளீன் ஸ்ரீலங்கா!