சொல்லடிகள் பட்டு
சல்லடையான இதயத்தை
சோகங்கள் சூடிக்கொண்ட
சுமையான ஞாபகங்கள்
நான்
அடியெடுத்து
படிநடந்த
பூப் பாதைகளில்
பாவக் கறையான்களின்
படையெடுப்பு
வந்தாரை எல்லாம்
வாழ வைக்கும்
எங்கள்
சிங்கார தேசத்தில்
சிலந்தி வலை சிக்கல்கள்
சத்தியங்கள்
செத்துப்போன
இந்தவூர் தெருக்களில்
அசத்திய களைகளின்
ஆக்கிரமிப்பு
காற்றின் திசையில் செல்லும்
காகிதத் துண்டுகளாய்
சிதறிப்போன சிறுசுகள்
நாவுகள் அறுக்கப்பட்ட
ஊமைகளாய்
ஒதுங்கிச் செல்லும் பெரிசுகள்
சில்லறுந்த வண்டில்களாய்
தடம் புரண்டு
உருக்குலைந்த அறிவாளிகள்
வாலறுந்த பட்டங்களாய்
சமூக வாழ்லில் கரணமடிக்கும்
சமூகத் தலைமைகள்
வேரறுந்த மரங்களாய்
ஆங்காங்கே
வீழ்ந்து கிடக்கும்
விலாசமில்லாத வாலிபங்கள்
வாழ்விழந்த விதவைகளால்
வானம் பார்த்த
தாய்மைகள்
—
சொல்லறுந்த நாவுகளாய்
ஆங்காங்கே
சில திக்குவாய்
அவஸ்தைகள்
இங்கே
ரஸ்திகளும் ரவுடிகளும்தான்
ராஜாக்கள்
அனுபவங்களும்
அறிவுகளும்
வெறும் அடிமைகள்
இது
சாராயச் செம்மல்களின்
சாம்ராஜ்யம்
அதனால்தான்
எங்கள் தேசத்தில்
விபசார விரோதிகளும்
போதை விற்பனர்களும்
கைகோர்த்துக்கொள்கிறார்கள்
இங்கே
அடிதடிகளாலும்
வதந்திகளாலும்
அதிகார அபகரிப்பு
இதனால்
பாலைப் புழுதியாய்
பாவங்களின் ஆர்ப்பரிப்பு
பால் வாசம் மாறாத
பாலக வதனங்களிலும்
போதை வந்து
முகாமிட்டுக் கொல்கிறது
பாவம்
அந்த பச்சிளம் குருத்துகள்
போதை அக்கினிக்குள்
அவர்களின்
எதிர்காலம்
எரிக்கப்படுகிறது.
இங்கே
கருவின் சிசுவுக்கும்
கம்பியூட்டர் பாடம்
நடக்கிறது
ஆனால்
கலாசாரம்
காணாமல் போவதை
யாருமே
கண்டு கொள்ளவில்லை.
இந்த அவலங்கள்
அழிக்கப்படும் வரை
இந்தவூர் புத்திசாலிகள்
இன்னொரு நாட்டிலே
தவமிருக்கிறார்கள்
இங்கு
சந்திகள் தோரும்
சாக்கடைகளின் சஞ்சரிப்பு
புனிதத் தலங்களிலும்
போக்கிரிகளின் ஆக்கிரமிப்பு
இத்தனைக்கும் நடுவே
எதுவுமே இயலாதவனாய்
நான் எனும் நான்.