சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 342 கிலோ ஏலக்காய் மற்றும் 1,231 கிலோ உலர் மஞ்சளுடன் இருவர் கைதாகியுள்ளனர். கடற்படையினர் நடத்திய தேடுதலில் இவ்விருவரும் கடந்த (24) கல்பிட்டியில் கைது செய்யப்பட்டனர்.
கல்பிட்டி கீரி முந்தல் கடற்கரைப் பகுதி மற்றும் தொராயடி கடல் பகுதியில் இந்த தேடுதல்கள் நடத்தப்பட்டன. இரண்டு சந்தேக நபர்களுடன் ஒரு கண்ணாடி இழை படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
கீரி முந்தல் கடற்கரைப் பகுதியில் எட்டுப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 240 கிலோ ஏலக்காயை கடற்படையினர் முதலில் கைப்பற்றினர். இதன்பின்னர், கல்பிட்டி தொராயடி கடல் பகுதியில் சந்தேகத்துக்கிடமான கண்ணாடி இழை படகு ஒன்று சோதனை செய்யப்பட்டபோது, நாற்பது பைகளில் அடைக்கப்பட்ட சுமார் 1,231 கிலோ உலர் மஞ்சள் மற்றும் ஏலக்காய் மூன்று பொட்டலங்களும் கைப்பற்றப்பட்டன.சந்தேக நபர்கள் 23 முதல் 48 வயதுக்குட்பட்டவர்களாவர். கைதான இரண்டு சந்தேக நபர்களும் சுங்கத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.342 கிலோ ஏலக்காய், 1,231 கிலோ உலர் மஞ்சள் என்பவை கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.