ஹமாஸ் – இஸ்ரேல் போர் நிறுத்த உடன்பாடு கடந்த வாரத்திலிருந்து (19.01.2025) அமுலாகி வருகின்றது. ஆனாலும் மேற்கு கரையில் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் இஸ்ரேலிய குடியிருப்பாளர்கள் பாலஸ்தீனக் குடியிருப்புகள் மீது தாக்குதலை நிகழ்த்தி வருகின்றனர். காசா நிலப்பரப்பு கணிசமாக போர் நிறுத்த உடன்பாட்டை பின்பற்றி வருகின்றது என்பதை ஊடகங்கள் உறுதிப்படுத்துகின்றன. இத்தகைய போர் நிறுத்த உடன்படிக்கை இஸ்ரேலுக்கும் மேற்குலகத்துக்கும் எதனை முதன்மைப்படுத்தியுள்ளது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாக மாறியுள்ளது. இக்கட்டுரையும் அத்தகைய விமர்சனத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தை தேடுவதாக அமையவுள்ளது.
முதலாவது, போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்ட பின்னர் பணயக் கைதிகள் பரிமாற்றம் நிகழ்ந்தது. அத்தகைய நிகழ்வில் ஹமாசின் படைப்பிரிவும் அதன் பங்கெடுப்பும் மிக முக்கியமான விடயமாக உலக நாடுகளால் அவதானிக்கப்பட்டது. பணயக்கைதிகளை பரிமாற்றும் செய்முறைக்கு அப்பால் ஹமாஸ் தனது படைப்பிரிவையும் பொலிஸ் பிரிவையும் நிகழ்வில் குவித்தமை பெரும் அதிர்ச்சியான செய்தியாக அமைந்திருந்தது. ஏறக்குறைய 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில் அதற்கு இணையான இரு மடங்கு அதிகமான மக்கள் காயப்பட்ட நிலையில் சொத்துக்களும் கட்டடங்களும் பொதுமக்கள் பயன்படுத்தும் நிர்வாக அமைப்புகளும் தகர்க்கப்பட்ட நிலையிலும் ஹமாசின் வருகை இஸ்ரேலுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே அதிர்ச்சியானதாக காணப்படுகிறது. இதனால் அதிக நெருக்கடியை இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அரசுகள் எதிர் கொண்டுள்ளன.
இரண்டாவது, ஹமாசின் பெருந்தொகையான போராளிகள் எங்கிருந்து வெளிவந்துள்ளனர் என்பது பெரும் கேள்விகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஹமாஸ் போராளிகள் அணிந்திருந்த ஆடைகள் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் அவர்கள் பயன்படுத்திய வண்டி வாகனங்கள் என்பன எந்தவிதப் பாதிப்பு இன்றி மிக ஆரோக்கியமான படைப்பிரிவாக வெளிவந்துள்ளது. அது மட்டுமன்றி படையில் நிறுத்தப்பட்டவர்களை உறுதியான உடல் அமைப்பையும் கம்பீரத்தைக் கொண்டவர்களாகவும் ஊடகங்களின் காணொளி காட்சிகளில் கண்டு கொள்ள முடிகிறது. ஏறக்குறைய 400 க்கும் மேற்பட்ட நாட்கள் நிகழ்த்திய போரின் பின்னர் ஹமாஸ் அழிவடைந்திருக்கிறது என்ற நிலையில் போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்ட போதும் அனைத்துக்கும் தலைகீழான பதிலை ஹமாஸ் அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது. இவர்கள் எப்படிப் பாதுகாக்கப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் குழப்பமாகவே உள்ளது. ஹமாஸ் அமைப்பின் தலைமைகள் கொல்லப்பட்டமை அதன் அலுவலகங்கள் தளங்கள் அழிக்கப்பட்டமை என பல செய்திகளை இஸ்ரேல் வெளிப்படுத்திய போதும் ஹமாஸ் மீண்டெழுந்து வந்துள்ளது.
மூன்றாவது, நடந்து முடிந்த நீண்ட போருக்கு பின்னர் ஹமாசின் படைஅணி மேலும் பலமடைந்திருப்பதாகவும் புதிய உறுப்பினர்கள் இணைந்திருப்பதாகவும் மேற்குலக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போர் முடிவடைந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் ஹமாசின் வளர்ச்சி மிகப் பலமானதாகவே மாறி இருக்கின்றது என்ற மேற்குலக ஊடகவியலாளர் ஒருவரின் கருத்து நிதர்சனமாகவே அமைந்திருக்கின்றது. ஹமாஸ் போரில் இழந்த படைகளை விட புதிய இளம் படைப்பிரிவுகளை அணிவகுப்பதிலும் தயார் செய்வதிலும் பெருமளவுக்கு ஆதரவை பெற்றிருக்கின்றது. பெருமளவான இளையவர்கள் ஹமாஸ் அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளனர்.
நான்காவது பணயக் கைதிகளை கைமாற்றும் நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்கள் போராளிகளோடு சூழ்ந்து இருந்த காட்சிகள் மக்கள் என்றுமே ஹமாஸ் மீதான நம்பிக்கையை கைவிடவில்லை என்பதைக் காட்டுகிறது.
போர் ஆயுதங்களையும் ஹமாசையும் அழித்துவிட்டதாக இஸ்ரேல் செய்திகளை வெளியிட்ட போதும் மக்கள் அதற்கு எதிராக இல்லை என்பதை சம்பவம் காட்டியுள்ளது. காசா மக்கள் ஹமாசைப் பலப்படுத்துவதிலும் ஆதரவளிப்பதிலும் கரிசனை உடையவர்களாக மாறி இருக்கின்றனர். இது ஹமாஸ் அமைப்பின் மீள் எழுச்சியை வெளிப்படுத்துகின்றது.
ஐந்தாவது, ஹமாசின் பொலிஸ் பிரிவு வீதி ரோந்துகளை மேற்கொள்வதாகவும் ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்படும் உணவு வண்டிகள் பாதுகாப்பாக பொதுமக்களிடம் கையளிக்கப்படுவதற்கான செய்முறை ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும் ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. அதற்காகவே இத்தகைய ஹமாஸ் அமைப்பினரின் வீதி ரோந்து நிகழ்த்தப்படுவதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. இது ஹமாஸின் கட்டுப்பாட்டு பகுதியை அறிவிப்பதாகவே தெரிகிறது. ஹமாஸின் நடவடிக்கை பெரும்குழப்பத்தை இஸ்ரேலிய அரசாங்கத்துக்குள் ஏற்படுத்தி இருக்கின்றது. நீண்ட போருக்கு பின்னர் வலுவான ரோந்து நடவடிக்கையை மேற்கொள்ளுகின்ற திறனுடன் ஹமாஸ் பொலிஸ் படைப் பிரிவு தமது அரசு இயந்திரத்தை பாதுகாப்பாக வைத்திருக்கின்றது என்ற செய்தி கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.
ஆறாவது, போர் நிறுத்த உடன்பாடு இஸ்ரேலிய அமைச்சரவைகளுக்கும் இஸ்ரேல் ஆட்சியாளர்களுக்கும் இடையில் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கள் பிரதமர் மீது அதிக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதுடன் பதவியிலிருந்து விலகப் போவதாக எச்சரித்துள்ளன. போர் நிறுத்த உடன்பாடு இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை தந்திருக்கிறது. குறிப்பாக பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சர் தமது பதவியை விட்டு விலகப் போவதாக எச்சரித்திருப்பது புதிய தேர்தலுக்கு போகவேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய அரசாங்கம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் தெரியவருகின்றது. அமெரிக்காவின் புதிய நிர்வாகம் இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு எச்சரிக்கைகளையும் நெருக்கடிகளையும் வழங்கி வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பின்னால் இஸ்ரேலிய தாக்குதலுக்குத் தேவையான ஆயுதங்களும் பொருளாதார மற்றும் புலனாய்வு ஒத்துழைப்புகளும் அமெரிக்காவின் தயவிலே உள்ளதென்பது குறிப்பிடக்கூடிய விடயமாகும்.
ஏழாவது, இஸ்ரேலிய தாக்குதல் பாலஸ்தீன மக்களுக்குள் எத்தகைய விளைவை தந்திருக்கிறது என்பது ஊடகங்களின் காணொளி வாயிலாக கண்டுகொள்ள முடிகிறது. காசா மக்களின் குடியிருப்புகள் துவம்சம் செய்யப்பட்டிருக்கும் செயல்முறையானது இஸ்ரேலிய அரசினதும் மேற்குலகத்தினதும் அனைத்து முகங்களையும் அம்பலப்படுத்தி இருக்கிறது. இத்தகைய செய்முறை உலகத்தில் எங்குமே நிகழ முடியாது என்பதை காட்டியிருக்கின்றது. இஸ்ரேலின் தாக்குதல்களும் எச்சரிக்கைகளும் நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். அத்தகைய நிகழ்வுகள் இஸ்ரேலியரின் கோர முகத்தை காட்டுவது என்பதை விட அதற்கு பின்புலமாக இருந்த மேற்குலகத்தின் முகத்தை அம்பலப்படுத்துவதில் கவனம் கொண்டிருக்கிறது. இதன் விளைவுகள் மேற்குலகத்தின் ஏகாதிபத்திய முகத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்று கேள்வியை தவிர்க்க முடியாமல் ஏற்படுத்தியிருக்கிறது. ஹமாஸ் அமைப்பின் அணுகுமுறை மோசமானது என்பதை காணாமலாக்கும் நகர்வுகளை இஸ்ரேல்-மேற்குலக கூட்டு வெளிப்படுத்தியிருந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே பணயக் கைதிகள் விடயத்திலும் ஹமாஸ் பொறுத்தும் இஸ்ரேல் வெளிப்படுத்தியிருந்த எச்சரிக்கைகளும் செய்திகளும் தாக்குதல்களும் ஹமாஸ் அமைப்பை பலவீனப்படுத்த முடியவில்லை என்பதை காட்டுகின்றது. மீளவும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கைகளை விடுத்திருக்கிறாரேயன்றி பணயக் கைதிகளை நானூறு நாட்களில் ஓரு குறுகிய நிலப்பரப்பில் மீட்க முடியாதுள்ளமை, இஸ்ரேலிய தரப்பின் பலவீனத்தைக் காட்டுகிறது என்பதைவிட ஹமாஸ் அமைப்பின் பலத்தைக் காட்டுவதாகவே தெரிகிறது. பணயக் ககைதிகளை மீட்க முடியாத புலனாய்வுத் துறை திறனற்ற தொன்று என்ற விமர்சனத்தை மொசாட்டும் இஸ்ரேலிய அரசாங்கமும் இராணுவமும் எதிர்கொண்டு வருகின்றன. இதில் சி.ஐ.ஏ.க்கும் பங்கு இருப்பதாக கருதப்படுகிறது. பணயக் கைதிகளை விடுவிப்பதிலேயே ஹமாஸ் அமைப்பின் அரசியல் தங்கியிருந்தது. இதனைக் கோடிட்டு காட்டியதோடு, அதுவே போர் நிறுத்த உடன்பாட்டுக்கான அடிப்படையாகவும் ஹமாஸ் அமைப்பின் வெற்றிகரமான பக்கத்தையும் அடையாளப்படுத்தியுள்ளது. இதற்கான பதிலை இஸ்ரேல் மேற்குலக கூட்டு உடனடியாக வழங்குமா என்ற சந்தேகம் காணப்படுகிறது. ஏனெனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அணுகுமுறையும் ஹமாஸின் எழுச்சியும் அதிகமான குழப்பத்தை இஸ்ரேலிய அரசாங்கத்துக்கும் குடியேற்றவாசிகளுக்கும் ஏற்படுத்தி இருக்கின்றது. ஹமாஸின் அனுபவத்தை கற்றுக் கொள்ள வேண்டிய தேவை உலகிலுள்ள ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கு உள்ளது. ஆனால் ஹமாஸ் அமைப்புக்கு பின்னால் இன்னுமே ஈரானின் செல்வாக்கு மட்டுமல்லாது வேறு நாடுகளின் பங்கும் உண்டு என்பதையே இது காட்டுகிறது.