இந்தியாவின் வடக்கு மாநில நகர் ஒன்றில் இரு தினங்களுக்கு முன்னர் வித்தியாசமான நடவடிக்ைகயொன்றை பொலிஸார் முன்னெடுத்தனர். பொலிஸாரின் இந்நடவடிக் ைகயானது சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டது.
அம்மாநிலத்தில் வீதியில் பயணம் செய்கின்ற பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அதிக ஹோர்ன் ஒலி எழுப்பியவாறு செல்வது வழக்கம். வாகனமொன்று அதன் உருவம் மற்றும் முக்கியத்துவத்துக்குப் பொருத்தமான அளவு ஒலி கொண்ட ஹோர்ன்களையே பொருத்தியிருக்க வேண்டும் என்பது பொதுவான நியதி ஆகும்.
ஆனால் வாகன உரிமையாளர்கள் பலர் அவ்விதியைப் பற்றிக் கவனம் கொள்வதில்லை. தாங்கள் விரும்பியவாறு அதிக ஒலி எழுப்பும் ஹோர்ன் சாதனங்களை தங்களது வாகனங்களில் பொருத்தி, வீதியில் அதிக சத்தம் எழுப்பிச் செல்வர்.
இந்தியாவின் அம்மாநிலத்தில் வாகனங்களின் ஹோர்ன் ஒலியைக் குறைக்குமாறு சாரதிகளுக்கு பொலிசார் பலதடவை அறிவுறுத்தல் வழங்கிப் பார்த்தனர். ஆனால் சாரதிகளோ அதனைப் பொருட்படுத்தவேயில்லை. இறுதியில் பொலிசார் வித்தியாசமான நடவடிக்ைகயை முன்னெடுத்தனர்.
அதிக ஹோர்ன் ஒலி எழுப்பிய வாகனம் ஒவ்வொன்றையும் தடுத்து நிறுத்தி, அவற்றின் சாரதிகளை வெளியே வருமாறு அழைத்தனர். வாகனத்தின் முன்பாக அச்சாரதிகளை நிற்கச் செய்து, அவ்வாகனத்தின் ஹோர்ன் ஒலியை பொலிசாரே எழுப்பினர்.
“இந்தச் சத்தத்தை உங்களால் தாங்க முடிகின்றதா? அவ்வாறானால் வீதியில் நடமாடுவோர் எத்தனை துன்பம் அடைவார்கள் என்பதை உங்களால் இப்போது புரிந்து கொள்ள முடிகின்றதா? தயவு செய்து வீதியில் நடமாடுவோரின் துன்பங்களை மனிதநேயத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ளுங்கள்” என்பதே பொலிசார் அச்சாரதிகளிடம் விடுத்த வேண்டுகோள் ஆகும்.
வடஇந்திய மாநில பொலிசாரின் இந்நடவடிக்ைகயைப் பார்க்கின்ற போது இலங்கை வீதிகளில் செல்கின்ற வாகனங்களையும் அவ்வாறுதான் நினைக்கத் தோன்றுகின்றது.
மோட்டார் சைக்கிள், பேருந்துகள் உட்பட பலவிதமான வாகனங்களும் அதிக ஹோர்ன் ஒலி எழுப்பியவாறே செல்கின்றன. வாகன உரிமையாளர்கள் தாங்கள் விரும்பியவாறு அதிக சத்தம் எழுப்பும் ஹோர்ன் பூட்டியவாறு, வீதியில் செல்வோரை சித்திரவதைக்கு உள்ளாக்குகின்றனர். தனியார் பஸ்கள், முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் போன்றவைதான் இவற்றில் அதிகம்.
எமது சூழல் மாசடைவது போன்று ஒலியும் மாசடைகின்றது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அதிக ஒலியினால் மக்களுக்கு ஏற்படுகின்ற உடல், உளப் பாதிப்புகள் பற்றியெல்லாம் இவ்வாறான சாரதிகள் அக்கறை கொள்வதுமில்லை. அதிக ஒலி எழுப்பி, முன்னே செல்பவரை அச்சுறுத்தி வழிவிலக வைக்க வேண்டுமென்ற சுயநலம் மட்டுமே அவர்களிடம் உள்ளது.
அதிக ஒலி எழுப்புகின்ற ஹோர்ன்களைப் பொருத்தியுள்ள வாகனங்களைக் கண்டுபிடித்து சட்ட நடவடிக்ைக மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு போக்குவரத்துப் பொலிசாரின் கடமையாகும்.