இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், தனது பாங்கசூரன்ஸ் பிரிவின் சிறந்த 60 செயற்பாட்டாளர்களின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் தாய்லாந்துக்கு நான்கு நாள் வெளிநாட்டு சுற்றுப் பயண வாய்ப்பை வழங்கியுள்ளது. தமது குடும்பத்தாருடன் பயணிக்கக்கூடிய வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பினூடாக, அர்ப்பணிப்புடன் செயலாற்றும் இந்த ஊழியர்களுக்கு மனம்மறவாத அனுபவங்களைப் பெற்றுக் கொடுப்பதுடன், தமது வெற்றிகரமான செயற்பாடுகளை, தம் அன்புக்குரியவர்களுடன் கொண்டாடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்துள்ளது. பங்குபற்றுனர்களுக்கு புதிய கலாசார அம்சங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு இந்தப் பயணத்தினூடாக கிடைத்திருந்தது. தாய்லாந்தின் பிரத்தியேகமான உணவு வகைகளை சுவைப்பதற்கும், Royal Galaxy சொகுசு கப்பலில் காட்சியம்சங்கள் நிறைந்த இராப்போசனம் அருந்தி மகிழும் வாய்ப்பும் கிடைத்திருந்தது. இந்நிகழ்வில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி செனத் ஜயதிலகவும் கலந்து கொண்டார்.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம பங்காண்மை விநியோக அதிகாரி வத்சலா அளுத்கெதர கருத்துத் தெரிவிக்கையில், “இந்த பிரத்தியேகமான வெளிநாட்டு சுற்றுப் பயண அனுபவம் என்பது, பாங்கசூரன்ஸ் அணியினரின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பை நோக்கிய ஒப்பற்ற பயணம் போன்றவற்றுக்கு கிடைத்த கௌரவமாகும். ” என்றார்.