ஆசியாவின் முன்னணி சைக்கிள் உற்பத்தியாளர்களாக திகழும் Lumala City Cycle Industries Manufacturing Pvt Ltd இன் செயற்பாடுகளை மூடிவிடும் நிலைக்கு தள்ளியுள்ள பாரிய நெருக்கடியிலிருந்து நிறுவனத்தை பாதுகாப்பதற்கு அரசு தலையிட வேண்டுமென்று நிறுவனத்தின் ஊழியர்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர். பாணந்துறையில் அமைந்துள்ள Lumala, ஐந்து தசாப்த காலத்துக்கு மேலாக இலங்கையின் தொழிற்றுறையில் முக்கிய பங்கை வகிப்பதுடன், அதிகரித்துச் செல்லும் செலவுகள் மற்றும் நேர்மையற்ற சந்தை செயற்பாடுகள் போன்றன நிறுவனத்தின் நிலைத்திருப்புக்கு பெரும் இடரை தோற்றுவித்துள்ளன.
தொழிற்சாலையின் பொது முகாமையாளர் ரஞ்ஜித் சிறிவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “ஸ்டீல் ரிம் பிரிவையும் இலங்கையிலுள்ள குரோமியம் பூச்சு ஆலைகளில் ஒன்றையும் மூடியுள்ளதுடன், கட்டம்கட்டமாக தமது செயற்பாடுகளை இடைநிறுத்தும் பணிகளை நிர்வாகம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. போர்க் மற்றும் மட்கார்ட் உற்பத்தி, அலொய் ரிம் உற்பத்தி, பிரேம் உற்பத்தி மற்றும் பெயின்ட் பிரிவு போன்றன அடங்கலாக இதர பல பிரிவுகளும் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. இவற்றில் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. Lumala இல் இரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக பணியாற்றியுள்ள ஊழியர்கள், தமது வாழ்வாதாரத்தை தக்க வைத்துக் கொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்” என்றார்.
இந்த நெருக்கடி நிலைக்கு பங்களிப்பு வழங்கியுள்ள சில பிரதான சவால்கள் குறித்து ஊழியர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இறக்குமதி செய்யப்படும் சைக்கிள்கள் மற்றும் மின் சைக்கிள்கள் போன்றவற்றால் உள்நாட்டு சந்தை நிறைந்துள்ளது. இவற்றில் பல ஒழுங்குபடுத்தல் பரிசோதனைகளையும் மீறி நாட்டினுள் காணப்படுகின்றன.