இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில், பங்களாதேஷ் இராணுவத்தில் அதிகாரப் போட்டி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷ் இராணுவம் மூன்று பிரிவாகப் பிரிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பங்களாதேஷில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இந்தியாவுடன் முரண்பாடு நிலவி வருகின்றது. பங்களாதேஷ் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி துறந்து இந்தியாவில் தஞ்சமடைந்த பிறகு அங்கு இடைக்கால அரசு அமைந்தது. ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் வழங்கிய பின்னரே இருநாட்டு உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். அவரது செயற்பாடுகள் இந்தியாவுடன் நட்புறவு பாராட்டுவதாக இல்லை.
ஷேக் ஹசீனா இந்தியாவுடன் நட்புறவோடு இருந்தார். ஆனால் முகமது யூனுஸ் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். இவர் அந்த நாட்டின் தலைமை ஆலோசகராகப் பொறுப்பேற்றதில் இருந்து இந்திய- – பங்களாதேஷ் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியா மீதான எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டுள்ள பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் முகமது யூனுஸ் நெருங்கிச் செயற்படத் தொடங்கி உள்ளார்.
இதன் ஒரு அங்கமாக பாகிஸ்தான் இராணுவத்தினர் அடுத்த மாதம் பங்களாதேஷுக்குச் சென்று அந்த நாட்டு வீரர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்க உள்ளனர். பாகிஸ்தான் இராணுவத்திடம் இருந்து ஏவுகணைகள், துருக்கி நாட்டிடம் இருந்து நவீன தொழில்நுட்பம் கொண்ட தாங்கிகளை வாங்குவதில் பங்களாதேஷ் ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்துமென்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
இவ்வாறான நிலையில்தான் பங்களாதேஷில் தற்போது இராணுவத்தில் மூன்று அதிகார மையங்கள் உருவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது பங்களாதேஷின் இராணுவத்தில் அதிகாரத்தைத் தக்கவைப்பது, அதிகாரத்தைப் பெறுவது என்று மூன்று அதிகாரிகளிடையே கடும் போட்டி நிலவி வருவதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த மூன்று தரப்புகளில் ஷேக் ஹசீனா ஆதரவாளர் தரப்பு அணியும் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் இராணுவத் தளபதியாக ஜெனரல் வாக்கர் உஸ் ஜமான் உள்ளார். இவர்தான் பங்களாதேஷ் இராணுவத்தின் தலைவராக செயற்பட்டு வருகிறார். ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தபோது இவரது தலைமையில்தான் அந்நாட்டை இராணுவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அதன் பின்னரே அந்நாட்டில் இடைக்கால அரசு உருவாக்கப்பட்டது. வாக்கர் உஸ் ஜமான், ஷேக் ஹசீனாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் நடுநிலைவாதியாகக் கருதப்படுகிறார். இவர் கடந்த ஆண்டு ஜுன் மாதம்தான் ஷேக் ஹசீனாவால் பங்களாதேஷ் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் 2026 ஆம் ஆண்டு வரை இந்தப் பொறுப்பில் இருப்பார். அதன்பிறகு ஓய்வு பெறுவார். அதற்கிடையில் அவர் இராணுவத்தை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் வேலைகளை செய்யத் தொடங்கி உள்ளார்.
அதேபோல் இரண்டாவது நபர் டாக்காவில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கமாண்டன்ட் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் முகமது ஷாகினுல் ஹக் ஆவார். இவர் இராணுவத் தலைவர் பதவியை குறிவைத்து செயற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இவருக்கு ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளராக அறியப்படும் மேஜர் ஜெனரல் முகமது மொயின் கானின் ஆதரவு உள்ளது. முகமது மொயின் கான் என்பவர் பங்களாதேஷ் இராணுவத்தின் ஒன்பதாவது பிரிவின் தலைவராக உள்ளார். பங்களாதேஷ் இராணுவத்தைப் பொறுத்தவரை இந்த அமைப்பு மிகவும் பலம்மிக்கதாகக் கருதப்படுகிறது. இவ்வாறிருக்கையில், மூன்றாவது நபர் லெப்டினன்ட் ஜெனரல் முகமது பைஜுர் ரஹ்மான் ஆவார். இவர் பங்களாதேஷ் இராணுவத்தின் Quartermaste General அதிகாரியாக செயற்பட்டு வருகிறார். இந்தப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு அவர் உளவுப்பிரிவில் செயற்பட்டு வந்தார். அவர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியைக் கவிழ்த்த கல்லூரி மாணவர்களுடன் நெருக்கமாக உள்ளார். முகமது யூனுஸின் ஆலோசகர்களில் ஒருவராகவுள்ள மெக்பூஸ் ஆலமின் என்பவருடன் நெருக்கம் காட்டி வருகிறார்.
இது ஒருபுறமிருக்க, பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் பதவியை விட்டு விட்டு முகமது யூனுஸ் வெளிநாடு செல்லலாம் என்றும் ஊர்ஜிதமற்ற தகவல்கள் வெளிவருகின்றன. அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமானால், தற்போதைய இராணுவத் தளபதி வாக்கர் உஸ் ரஹ்மானை நீக்கிவிட்டு அந்தப் பொறுப்புக்கு செல்ல வேண்டும் என்பதை முகமது பைஜுர் ரஹ்மான் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு பங்களாதேஷ் இராணுவத் தளபதி பதவியை தக்கவைத்துக் கொள்ள வாக்கர் உஸ் ரஹ்மான் போராடி வருகிறார். அதேவேளையில் அவரிடம் இருந்து அந்தப் பொறுப்பை பெறுவதற்காக லெப்டினன்ட் ஜெனரலாக செயற்பட்டு வரும் முகமது ஷாகினுல் ஹக் மற்றும் முகமது பைஜுர் ரஹ்மான் ஆகியோர் காய்நகர்த்தி வருகின்றனர். இவர்கள் இடையேயான இந்த அதிகாரப் போட்டி என்பது பங்களாதேஷுக்கு புதிய சிக்கலாகப் பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறமிருக்கையில், பாகிஸ்தானுடன் பங்களாதேஷ் நெருக்கம் காட்டி வருகின்ற தற்போதைய நிலையில் பாகிஸ்தான்- சீனா இணைந்து தயாரித்த எஃப் 17 ரக தண்டர் போர் விமானங்களை வாங்குவதற்கு பங்களாதேஷ் விருப்பம் தெரிவித்துள்ளது. இதுவும் இந்தியாவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறத்தில் பங்களாதேஷில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனை இடைக்கால அரசு கண்டுகொள்ளாமல் உள்ளதாக பல்வேறு தரப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றன. மத அடிப்படைவாதிகளை வைத்து சமூக வலைதளங்களில் இந்தியாவுக்கு எதிராக கருத்துகளை பங்களாதேஷ் உதிர்த்து வருவதாக இந்திய தரப்பில் குற்றம் சுமத்தப்படுகின்றது. இவ்வாறிருக்கையில் பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்தியாவுக்கு எதிரான செயல்களை பங்களாதேஷ் மேற்கொண்டு வருவதாக இந்திய தரப்பினால் குற்றம் சாட்டப்படுகின்றது. இதனால் இருநாடுகள் இடையேயான உறவு தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.
எஸ்.சாரங்கன்