காஸாவின் பணயக் கைதிகள் பரிமாற்றம் மற்றும் யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலும் ஹமாஸும் இணக்கம் கண்டுள்ளன. இதனை கட்டார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி கடந்த புதனன்று (15.01.2025) மாலை அறிவித்தார். இப்போர்நிறுத்தம் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 08.30 மணி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான மத்தியஸ்தராக செயற்படும் நாடுகளில் கட்டார் பிரதான பாத்திரம் வகிக்கிறது. எகிப்தும், அமெரிக்காவும் இம்மத்தியஸ்தப் பணிகளில் பங்காளராக உள்ளன.
இவ்வாறான நிலையில், கட்டார் பிரதமரின் அறிவிப்பு வெளியானதும் காஸா மக்களும் இஸ்ரேலியர்களும் அதனை வரவேற்று கொண்டாடினர்.
அவரது உத்தியோகபூர்வ அறிவிப்பு வர முன்னர் ஹமாஸும் இஸ்ரேலும் யுத்தநிறுத்தத்திற்கு இணங்கியுள்ள செய்தி பட்டிதொட்டியெல்லாம் பரவியது. ‘காஸா மீதான யுத்தம் நிறுத்தப்பட வேண்டும், அமைதி ஏற்பட வேண்டும்’ என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ள அனைத்து மக்களும் இப்போர்நிறுத்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர். குறிப்பாக ஐ. நா, அமெரிக்கா, துருக்கி, அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, ஒமான், பாகிஸ்தான், பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துத் தரப்புகளும் இப்போர்நிறுத்த இணக்கப்பாட்டை பாராட்டியுள்ளன.
இதேநேரம் இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சிக்கு இப்போர்நிறுத்த இணக்கப்பாட்டுக்கு எதிராக நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த ஆட்சியில் பங்காளராக இருக்கும் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மொட்ரிச், தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டமிர் பென்க்விர் ஆகியோர் காஸா யுத்தநிறுத்த இணக்கப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு, அரசில் இருந்தும் வெளியேறுவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப், தாம் பதவிக்கு வர முன்னர் காஸா யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளதோடு, பணயக் கைதிகளாக உள்ள அமெரிக்கப் பிரஜைகள் முதல் கட்டத்திலேயே விடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக ட்ரம்ப் நாளை 20 ஆம் திகதி பதவி ஏற்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான பின்புலத்தில் காஸா யுத்தநிறுத்த இணக்கப்பாடு கடந்த புதன்கிழமை எட்டப்பட்ட போதிலும், அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி கவலை அளிப்பதாகவும், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி யுத்தநிறுத்தத்தை இஸ்ரேல் முன்னெடுக்க வேண்டும் எனவும் சர்வதேச அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2023 ஒக்டோபர் 07 ஆம் திகதி ஹமாஸ் தெற்கு இஸ்ரேலில் மேற்கொண்ட திடீரென தாக்குதலில் 1139 பேர் கொல்லப்பட்டதோடு 251 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இந்நிலையில் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் காரணமாக காஸா கடும் பாதிப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்துள்ளது. மரணங்களும் காயங்களும் மலிந்துள்ளன. மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். போரை நிறுத்துமாறு ஐ.நா. மற்றும் உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி, ஐ.நாவில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. உலக நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில் ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை கட்டார் ஆரம்பித்தது. இதில் எகிப்தும் அமெரிக்காவும் பங்காளர்களாகச் செயற்படத் தொடங்கியது. அந்த வகையில் 2023 நவம்பர் 24 ஆம் திகதி கைதிகள் பரிமாற்ற யுத்தநிறுத்தத்திற்கு இருதரப்பினரும் இணங்கினர். மறுநாள் 25 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த போர்நிறுத்தத்தின் ஊடாக ஒரு தொகை பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இக்கைதிகள் பரிமாற்ற யுத்தநிறுத்தம் மூன்று தடவை நீடிக்கப்பட்டு ஏழு நாட்கள் வரையில்தான் நடைமுறையில் இருந்தது. டிசம்பர் முதலாம் திகதி இஸ்ரேல் மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்தது. யுத்தத்தின் ஊடாக பணயக் கைதிகளை மீட்பதே இஸ்ரேலின் நோக்கமாகும்.
ஆனால் கட்டாரும் எகிப்தும் தொடர்ந்தும் யுத்தநிறுத்த முயற்சிகளை முன்னெடுத்தன. அந்த முயற்சிகளுக்கு ஹமாஸும் இஸ்ரேலும் ஒத்துழைத்த போதிலும், வெவ்வேறு காரணங்களை முன்வைத்து யுத்தநிறுத்தத்திற்கு வருவதைத் தவிர்த்து இருதரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டினர். யுத்த நிறுத்தத்திற்கு சென்றால் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக இஸ்ரேலிய நிதியமைச்சரும் தேசிய பாதுகாப்பு அமைச்சரும் அச்சுறுத்தி வந்தனர்.
எனினும் கடந்த 15 மாதங்களாக யுத்தம் முன்னெடுக்கப்பட்டு காஸா சாம்பல் மேடாக்கப்பட்டும் கூட, இன்னுமே எஞ்சியுள்ள பணயக் கைதிகளை யுத்தத்தின் ஊடாக மீட்க முடியவில்லை. ஹமாஸ் வசம் இன்னும் 94 பணயக் கைதிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் அவர்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவான டொனால்ட் ட்ரம்ப், ‘ஜனவரி 20 இற்குள் பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கை நரகமாக்குவேன்’ எச்சரித்தார். ‘பணயக்கைதிகளை விடுவிக்க தாம் தயார்’ என்ற ஹமாஸ், அது தொடர்பிலான யுத்தநிறுத்த உடன்பாட்டை வலியுறுத்தியது. இந்நிலையில் கட்டாரில் இருதரப்புக்கும் இடையில் முன்பு போன்று பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தரப்பு, பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது என்றது. ஆனால் அவர்கள் ஏற்கனவே பல சந்தரப்பங்களில் அவ்வாறு குறிப்பிட்டும் யுத்தநிறுத்தம் ஏற்படுத்தபடவில்லை.இச்சூழலில் ட்ரம்ப், அமெரிக்காவை தளமாகக் கொண்ட நியூஸ் மெக்ஸ் வலையமைப்புக்கு அளித்த பேட்டியில், “இவ்வார இறுதிக்குள் காஸா போர் நிறுத்த உடன்படிக்கை சாத்தியமாகலாம். நாம் அதை செய்து முடிப்பதில் மிகவும் நெருங்கியுள்ளோம். அவர்கள் அதனை செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அங்கு அவர்கள் ஒருபோதும் காணத் தவறாத பெரும் பிரச்சினைகள் ஏற்படலாம்” என்று கூறினார்.
இவ்வாறான பின்னணியிலேயே இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் யுத்தநிறுத்த இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக கட்டார் புதன்கிழமை தோஹாவில் அறிவித்தது. கட்டார் பிரதமரின் அறிவிப்பின்படி, இது மூன்று கட்டங்களைக் கொண்ட பணயக்கைதிகள் மற்றும் யுத்தநிறுத்த ஒப்பந்தமாகும். இதன் முதலாம் கட்டம் ஆறு வார காலக்கட்டத்தைக் கொண்டது. இக்காலப்பகுதியில், இஸ்ரேலிய படைகள் மத்திய காஸாவில் இருந்து படிப்படியாக விலகும். பலஸ்தீனியர்கள் வடக்கு காஸாவில் உள்ள தங்களது வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். அந்த ஆறு வாரங்களில் ஹமாஸ் இஸ்ரேலின் அனைத்து பெண் வீரர்கள் மற்றும் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட 33 பணயக் கைதிகளை விடுவிக்கும்.
அவர்களின் பெயர்களையும் படங்களையும் வெளியிட்டுள்ள ‘டைம்ஸ் ஒப் இஸ்ரேல்’ விடுவிக்கப்படவிருக்கும் பலஸ்தீன சிறைக்கைதிகளில் ஒரு பகுதியாக பெண்கள், சிறுவர்கள் அடங்கிய 737 பேரின் பெயர்ப்பட்டியலையும் வெள்ளியன்று வெளியிட்டது.
இப்போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் முதலாம் கட்டத்தின் 16 ஆவது நாளில் தொடங்கும். மேலும் மீதமுள்ள கைதிகளை விடுவிப்பது மற்றும் காஸாவில் இருந்து இஸ்ரேலியப் படைகளை முழுமையாக திரும்பப் பெறுவது ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது கட்டத்தில் யுத்தகாலத்தில் இறந்தவர்களின் உடல்களைத் திரும்பப் பெறுதல் மற்றும் காஸாவில் புனரமைப்பு தொடங்குதல் ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போர்நிறுத்த இணக்கப்பாட்டுக்கு இஸ்ரேலிய யுத்த அமைச்சரவை நேற்றுமுன்தினம் மாலை அங்கீகாரம் அளித்தது. இந்நிலையில் மூன்று பணயக் கைதிகளை 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் விடுவிக்கப்போவதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளதாக இஸ்ரேலிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று கட்ட யுத்தநிறுத்தத்தின் ஊடாக 94 பணயக் கைதிகளுக்காக சுமார் ஆயிரம் பலஸ்தீன சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவர். ஆனால் இந்த இணக்கப்பாட்டுக்கான பேச்சுவார்த்தை இடம்பெற்ற சூழலிலும் கூட காஸா மீது கடும் தாக்குதல்களை இஸ்ரேல் முன்னெடுத்தது. அதனால் அந்த நாளில் 80 பேர் கொல்லப்பட்டனர். அதன் பின்னரும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.கடந்த 15 மாதங்களாக இடம்பெறும் இப்போரில் காஸாவில் 46ஆயிரத்து 700 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும், ஒரு இலட்சத்து 10 ஆயிரம் மக்கள் காயமடைந்துமுள்ளனர்.
அதேநேரம் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்கள் தொடர்வதாலும் இஸ்ரேலின் இறுக்கமான கட்டுப்பாடுகளாலும் காஸாவுக்குள் மனிதாபிமான உதவிகள் உள்ளிட்ட உதவிகளை கொண்டு செல்ல முடியாத நிலை நீடிக்கிறது.
காஸாவை மீளக்கட்டியெழுப்ப 50 பில்லியன் அமெரிக்க டொலர் செலவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தமானது, பேரழிவிற்குள்ளான பலஸ்தீனப் பிரதேசத்தில் சண்டையை நிறுத்தும் என்றும், இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக காஸாவிலுள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவர் எனவும் பலமான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மர்லின் மரிக்கார்