2015 இல் ஆட்சியமைத்த ரணிலின் அரசாங்கம் நான்கரை ஆண்டு காலத்தில் 12.5 பில்லியன் டொலர் ISB கடனை 6 வீதம் முதல் 9 வீதம் வரையிலான வட்டி வீதத்தில் பெற்றுக்கொண்டது. உலக வங்கியின் தரவுகளின்படி இலங்கை 2015 இல் நடுத்தர வருமானம் பெறும் நாடாக பட்டியலிடப்பட்டிருந்ததால் 2015க்குப் பிறகு குறைந்த வட்டி விகிதத்தில் இலங்கைக்கு கடன் வழங்க யாரும் முன் வரவில்லை. அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைபடி ஆட்சியாளர்கள் அதிக வட்டிக்கு ISB கடனை பெற்றனர். 2015- – 2019 வரையான நான்கரை வருட காலப்பகுதியில் பெற்றுக்கொண்ட முழு கடன்கனின் பெறுமதி 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதுவரை காலமும் ஆட்சியிலிருந்த அரசுகள் மக்கள் மீது வரியை அதிகரித்து சுமையை ஏற்படுத்தினர். பணக்காரர் அல்லாத எமது நாட்டு நடுத்தர வர்க்க மக்கள் வரி விதிப்பினால் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர்.
இதனால் இலங்கையின் பொருளாதாரம் எதுவித சரியான திட்டங்களுமின்றி தவறான திசையில் பயணிக்க தொடங்கியது. பொதுவாக பொருளாதாரம் தவறான திசையில் பயணிக்கும் போது சமூகமும் தவறான திசையில் பயணிப்பது இயற்கையே. இவ்விரண்டு காரணிகளால் இலங்கை 2022 இல் வங்குரோத்து நாடாக மாறியது. இந்நிலைமை தொடர்பில் பலகோணங்களிலும் உற்று நோக்கிப் பார்க்கையில் எமது நாட்டின் பொருளாதார கொள்கையை செயற்படுத்தும் போது ஏற்பட்ட பலவீனமான நிலை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.. மேலும் இந்த பொருளாதார கொள்கையை உருவாக்கியது பொருளாதார வல்லுனர்கள் அல்ல. கொழும்பிலுள்ள பிரபுத்துவ வர்க்கத்தினர் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு பொருளாதார கொள்கைகளை உருவாக்கியமையை கடந்த காலங்களில் நாட்டு மக்களால் உணர முடிந்தது. அவர்களுக்கு கிராம பொருளாதாரம், இந்நாட்டு மக்கள் முகம்கொடுக்கும் உண்மையான பிரச்சினை பற்றிய தெளிவு இருக்கவில்லை. இவ்வாறானதோர் நிலமையில் வரவு செலவு திட்டத்தின் மூலமோ, வெளிநாட்டு உறவுகள் மூலமோ, கடனைப்பெற்று அன்றாடம் பொருளாதாரத்தை நிர்வகிப்பதையே காணக் கூடியதாக இருந்தது. இலங்கை வங்குரோத்து நாடாக உருவெடுத்தது. இலங்கை வங்குரோத்து நிலைமையை அடைய முன்பு ஆட்சியிலிருந்த கபினெட் அமைச்சர்கள்; கபினட் அல்லாத அமைச்சர்கள் நாட்டின் தேவையை பாராமல் பாராளுமன்றத்தில் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் மற்றும் சலுகை போன்றவற்றை வழங்கினார்கள் அதனால் முறையற்ற விதத்தில் மீண்டும் மீண்டும் அரச வாகனங்களை கையாண்டார்கள். தத்தமது அதிகாரிகள் குழாமிற்கு தங்களின் சொந்த பந்தங்களையே நியமித்துக் கொண்டார்கள்.
இக்காரணங்களை உற்று நோக்கினால் பெற்றோலின் விலை குறைப்பினால் அதன் கூடுதல் பலணை அடைவது சொகுசு வாகனங்களை பாவிக்கும் வர்க்கத்தினரே. பஸ் அல்லது மோட்டார் சைக்கிள் பாவிப்போருக்கு இது பலனளிக்காது. சில நேரங்களில் பெற்றோல் விலை பல தடவைகள் குறைக்கப்பட்டாலும் மண்ணெண்ணையின் விலை குறைவடைவதில்லை. மிக அரிதாக மண்ணெண்ணை குறைக்கப்பட்டாலும் விலை எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு குறைக்கப்படவில்லை. இலங்கையில் மண்ணெண்ணை பாவிப்பது மின்சார வசதியில்லாத நலிவுற்ற குடும்பங்களே. இது சாதாரண மக்கள் மீது பொருளாதார சுமையை சுமத்தி ஆட்சியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பணக்கார வர்க்கத்தினருக்கு சொகுசு வாழ்வு வாழும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொள்ள உதவுகின்றது.
இதற்கான சூழலையும் சட்டத்திட்டங்களையும் கொள்கைகளையும் செயற்படுத்தியதே இதுவரை ஆட்சி செய்தவர்கள் முன்னெடுத்த அரசியல் இது ஒரு சிறிய எடுத்துக்காட்டே. இதனால் கடந்த காலத்தில் பெற்றுக் கொண்ட கடன்களை மீள செலுத்துவதில் தடைகள் ஏற்பட்டன. இதன் பின்னணியில் ஈஸ்டர் தாக்குதல், கொவிட் போன்ற காரணங்களும் உள்ளன. இதனால் அரசுக்கு ஏற்பட்ட அழுத்தங்கள் பொருளாதார ஸ்திரத் தன்மைகள் சீர் குலைய ஏதுவாகின. இதனால் நாடு வங்குரோத்து நிலைமைக்கு தள்ளப்பட்டது. இதன் தாக்கங்கள் படிப்படியாக குறையும் போது மீண்டும் பொருளாதார ஸ்திர தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது.
ஒரு நாட்டில் பொருளாதரத்தில் இரண்டு பிரிவுகள் காணப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி முதலாவது. நிலைபேண்தகைமை மற்றையது. கடந்த ரணில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்து இறுதியில் பொருளாதாரத்தை ஓரளவு மேம்படுத்த ஆவன செய்தது. அவ்வாறில்லாமல் பொருளாதாரத்தை மறுசீரமைக்கும் செயற்பாடு நாட்டில் இன்னும் முன்னெடுக்கப்படுவதாக தெரியவில்லை.
கடந்த 2024 ஆம் ஆண்டின் இறுதியில் சிறிய வளர்ச்சியை நாடு எட்ட முடிந்துள்ளது. அதன் பிரதிபலனாக கடந்த வருட இறுதியில் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். அது ஒரு பாரிய புரட்சியாக பார்க்கப்படுகிறது. யாரும் எதிர்பாராதவிதமாக மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர். அது ஓர் பாரிய புரட்சியாக பார்க்கப்படுகிறது. யாரும் எதிர்பாராத விதமாக மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர் .புதிய கொள்கைகளுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவே மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர். முன்னாள் ஆட்சியாளர்களால் அதிகார மையத்தில் ஏற்படுத்தப்பட்ட தவறுகளை ஆராய வேண்டும். பொருளாதார நிபுணர்கள், கல்வியாளர்கள், புத்திஜீவிகள் துறைசார் நிபுணர்கள் குழுவை நியமித்து அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று கிராமிய பொருளாதாரத்தை சரியாக அடையாளம் கண்டு மேம்படுத்துவதற்கு தெளிவான திட்டங்களை அரசு செயற்படுத்த வேண்டும்.
கடந்த வருடம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின் மக்களின் அர்ப்பணிப்புடன் வருட இறுதியில் 5% பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருப்பதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. மக்கள் புதிய ஆட்சியை ஏற்படுத்தியிருப்பது 8% முதல் 10% பொருளாதார வளர்ச்சியை நோக்கி நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமென்பதற்காகவே. முக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கு அரச தரப்பில் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பான சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி நாட்டின் வளங்களையும் பயன்படுத்தி வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டும். 2024 முதலாவது காலாண்டில் 5.3% வளர்ச்சியும் இரண்டாம் காலாண்டில் 4.3 வீதம் வளர்ச்சியும் இறுதி காலாண்டில் 5 வீத வளர்ச்சியும் நாடு பெற்றுக்கொண்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்திருந்தபோதிலும் அரசின் வரிவருமானம் 1000 பில்லியன்களால் அதிகரித்திருந்தது. 2024ஆம் ஆண்டின் கடன் அதிகரிப்பு 600 பில்லியன்களாகும். சில வருடங்களுக்கு முன்னர் உள்நாட்டு கடன் அதிகரிப்பு 3000 பில்லின்கள் என்ற உச்ச வரம்பை எட்டியள்ளது. 2024 கடன் அதிகரிப்பு குறைந்து 600 பில்லியனாக இருந்தது. இவ்வாறான பின்னணியில் நாட்டின் கடனை தரவரிசைப்படுத்தி பட்டியலிடும் நிறுவனங்கள் இலங்கை தரவரிசைப்படுத்தலில் முன்னேறியுள்ளதாக கூறின. இது இலங்கை முன்னேற்றப்பாதையில் செல்லும் அறிகுறியென மூடிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்வளர்ச்சியின் மூலம் ரூபாவின் பெறுமதி ஸ்திர நிலையை அடைந்துள்ளது. செலாவணி விகிதத்தை எடுத்துக்கொண்டால் 2024 ஜனவரியில் ஒரு டொலரின் பெறுமதி 323.00 ரூபாவாக இருந்தது. 2024 டிசம்பர் இறுதி வாரத்தில் அது 294.00வாக குறைவடைந்து ரூபாவின் பெறுமதி வலுபெற்றுள்ளது.
சுற்றுலாத்துறையை நோக்கும் போது 2023இல் நாட்டிற்கு 1,277,000 சுற்றுலா பயணிகளே வருகை தந்திருந்திருந்தனர். 2024இல் 2000000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். இது அத்துறையின் பாரிய வளர்ச்சியாகும். 2025இல் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நாடு சென்றுகொண்டிருப்பதை உணரமுடிகின்றது. அதற்கான திட்டங்களை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கள் செயற்படுத்தி வருகின்றது.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களால் நாட்டிற்கு பல நன்மைகள் கிடைத்து வருகிறது. வெளிநாட்டு முதலீடுகளும் நாட்டிற்குள் வருகின்றது. அரசின் லட்சம் ஊழலற்ற கொள்கைகளினால் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் ஆர்வத்துடன் பல துறைகளில் முதலீடுகளை செய்துவருகின்றனர். எனினும் நாட்டில் பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்கள் பல இன்னும் செயற்பாட்டுக்கு வரவில்லை. மத்திய வங்கி சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களுடன் பொருளாதாரத்தை ஒரு சுபிட்ச நிலைக்கு கொண்டுவர முடிந்துள்ளதாலும், பாரிய பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு அரசாங்கம் உறுதியான மறுசீரமைப்பை பல துறைகளில் மேற்கொள்ள வேண்டும். இதனைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும். அப்படிச் செய்தாலே நாட்டு மக்களின் ‘கனவுகள் மெய்ப்பட” முடியும்.
அருள்