சிறகுடைந்த பட்டாம்பூச்சி
கனவு கலைந்து
நினைவைச் சுமந்த படி…
காற்றின் வேகத்தில்
திசைமாறிச் செல்லும்
கசக்கி வீசிய காகிதம்
கண்ணெதிரே தோன்றிட…
கண்சிமிட்டும் தாரகை
ஆர்ப்பரிக்கும் மனதில்
வட்டமிடும் பருந்தாய்
முட்டுக்கட்டை இடவே..
வேலிதாண்டிப் போன
காகத்தின் சிறகுகள்
நிர்க்கதி கொண்டதும்
வேடிக்கை பார்க்கிறது …
மஞ்சள் பூசிய அவள்
தலைகுனிந்து செல்லும்
மௌனத்தின் தோற்றம்
சிதைவடைந்து போகிறது
வானவில் வர்ணங்கள்…
மழைத்துளித் தேகம்
தன்னையே நனைக்க
இடைவிடாமல் பட்டுத்தெறிக்கும்
வியர்வையில்
நனைகிறது கண்கள்…
அவளின் முந்தானை
வளைவடைந்து திறந்து கொள்ள
ஏக்கமான வதனம்
தவித்து நிற்கிறது…
குடைசாய்ந்த படியே
இடைவிடாது தொடர்கிறது
வினோதமான நெரிசல்…
இயற்கையை நேசித்த
இளவேனிப் பொழுது
இருட்டறை வடிவில்
தலைசாய்த்து சமாதானமாகிறது…
மலருகின்ற பொழுதில்
கட்டவிழ்த்துச் செல்ல
எத்தனிக்கிறது மனநிலை…
வசீகரம் காணவே
வஞ்சனைகளைக் கலைத்து
நீலவானில் நீந்தியபடி…
சமரசம் பேசிய போதும்
சந்தர்ப்பத்தை நோக்கி
அடங்கமறுக்கும் நிலை
ஆட்டம் போடுகின்ற
சூழ்நிலையோடு…
துணையாக
எச்சில் பட்ட
மாங்கனியாய் உன் துயர்
துடிக்கும் மனதில்
தும்மல் போலவே
தடை போட்டிடும்
திக்குமுக்கு …
வருவாய் வசந்தமாய்
தருவாய் நிம்மதி
என்றெண்ணி நானும்
காத்திருக்கிறேன்.