நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரிசி தட்டுப்பாட்டுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு காணப்படுமென விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். சந்தையில் ஏற்பட்டுள்ள அரிசிப் பிரச்சினைக்கு தீர்வுகாண எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘நாட்டில் தற்போது தலைதூக்கியிருக்கும் அரிசிப் பிரச்சினை இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும்.
இரண்டு வாரங்களில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.தற்போது நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் நெல் அறுவடைகள் ஆரம்பித்துள்ளன . அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வோம்.
சிறிய, நடுத்தர ஆலை உரிமையாளர்களும் நெல்லை கொள்வனவு செய்யத் தேவையான ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர்.இதையடுத்து அரிசி பிரச்சினை தீர்ந்து விடும்.
அரிசி மாபியாக்கள் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மூன்று மாதங்களிலேயே செயற்படுவார்கள். இந்த காலப்பகுதியிலேயே நாட்டுக்கு அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது.இதனால்தான், நாட்டில் அரிசி விலை அதிகரிக்கப்படுகிறது.
அதேபோன்று இந்த காலப்பகுதியலேயே நாட்டில் அரிசி காணாமலாகிறது. எதிர்காலத்தில் இந்த காலப்பகுதில் இவ்வாறான பிரச்சினை இடம்பெறுவதற்கு இடமளிக்கப்போவதில்லை.அதனால் அரசாங்கம் என்ற வகையில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யும் ஒரு கதிர் நெல்லைக்கூட விற்பனை செய்யப்போவதில்லை. அந்த நெல்லை மீண்டும் அரிசியாக்கி பொது மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வோம். தற்போது நாட்டில் ஏற்ட்டிருக்கும் அரிசி பிரச்சினை நாங்கள் ஏற்படுத்தியது அல்ல. நாங்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் இருந்தது. என்றாலும் அரசாங்கம் என்ற வகையில் இதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இந்தப் பிரச்சினை இந்த வருட இறுதியில் மீண்டும் ஏற்பட்டால், அந்தப் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிவரும்.