சுமார் ஒன்றேகால் ஆண்டுகாலமாக இரத்தம் சிந்தும் பூமியாக அல்லலுறும் காஸா மண்ணில் இன்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் யுத்தநிறுத்தம் அமுலாவதாக வெளியாகியுள்ள அறிவிப்பானது, உலகெங்கும் வாழ்கின்ற மனிதநேயத்தையும், அமைதியையும் விரும்புகின்ற மக்களுக்கு நிம்மதியைத் தருமென்பதில் ஐயமில்லை.
இஸ்ரேலிலும், காஸாவிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற பணயக் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளும் யுத்தநிறுத்தம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் முன்னெடுக்கப்படுவதாக வெளியான அறிவிப்பும் ஆறுதல் தருகின்றது.
கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து கொண்டிருந்த இந்தக் கொடிய யுத்தத்தினால் காஸாவில் மாத்திரம் 46,700 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து போயுள்ளனர். காஸாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் தாண்டி விட்டது. இஸ்ரேல் தரப்பிலும் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகம்.
இந்த யுத்தத்தில் இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ள போதிலும், இஸ்ரேல் தரப்பின் மரணங்களும் பாதிப்புகளும் குறைவென்றே கூற வேண்டும்.
எத்தரப்பாயினும் மனித உயிரிழப்புகளையும், யுத்தத்தையும் எவரும் நியாயப்படுத்தி விட முடியாது. அதிலும் ஆயுதமேந்தாத அப்பாவிகள் கொல்லப்படுவதென்பது பரிதாபமும் அநீதியுமாகும்.
காஸா மீதான தாக்குதல்களினால் இதுவரை அங்குள்ள மக்கள் அடைந்துள்ள துன்பதுயரங்களை வார்த்தைகளில் வடிக்க முடியாது. எங்கு பார்த்தாலும் மரண ஓலங்களும், கட்டட இடிபாடுகளுமாகவே காட்சியளிக்கின்றது அப்பிரதேசம். வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களினால் பலியானோரில் சிறுவர்கள் மற்றும் பெண்கள்தான் அநேகர் என்ற செய்திகள் மேலும் துயரம் தருகின்றன.
அது மாத்திரமன்றி, தாக்குதல்களில் காயமடைந்தோருக்கு மருத்துவ உதவிகள் இல்லை, படுகாயமடைந்தோருக்கு உணவும் அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லையென்ற செய்திகளும் கவலையளிக்கின்றன.
இப்போர் எப்போது முடிவுக்கு வருமென்று ஏங்கிக் கொண்டிருக்கின்ற அனைத்து மக்களுக்கும் இப்போது நிம்மதியான யுத்தநிறுத்தச் செய்தி கிடைத்திருக்கின்றது.
இந்த யுத்தநிறுத்தமானது நிரந்தரமான அமைதியைத் தர வேண்டுமென்பதுடன், இருதரப்புக்கும் இடையிலான விரோதங்கள் இணக்கப் பேச்சுகள் மூலம் களையப்பட வேண்டுமென்பதுவுமே சமாதானப் பிரியர்களின் ஏக்கமாக இருக்கின்றது. அதேநேரம் யுத்தநிறுத்த காலப்பகுதியில் தாக்குதல்கள் எதுவும் இடம்பெறலாகாது என்பதுவும் மனிதநேயம் கொண்டோரின் வேண்டுதலாக உள்ளது.
கொடிய யுத்தத்தை நிறுத்துவதற்கான கட்டாரின் அர்ப்பணிப்பையும், அம்முயற்சிக்குப் பங்காளர்களாக விளங்கிய எகிப்து மற்றும் அமெரிக்காவின் பங்களிப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது.
காஸா மக்கள் மாத்திரமன்றி, இஸ்ரேலில் உள்ள சமாதானப் பிரியர்களும் தற்போது நிம்மதியடைந்துள்ளனர். இந்த நிம்மதி இடையூறின்றி நீடிக்க வேண்டுமென்பதே எமது வேண்டுதலாகும்.