Home » பேஜர் வெடிப்பு தாக்குதலின் சூத்திரதாரி யாரென்பது வெட்டவெளிச்சமாகியது!

பேஜர் வெடிப்பு தாக்குதலின் சூத்திரதாரி யாரென்பது வெட்டவெளிச்சமாகியது!

by Damith Pushpika
January 5, 2025 6:02 am 0 comment

காஸா மீதான யுத்தத்தை நிறுத்தக்கோரி இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வந்த ஹிஸ்புல்லா உறுப்பினர்களை இலக்கு வைத்து பேஜர் தொடர்பாடல் சாதனத்தைப் பயன்படுத்தி 2024 செப்டம்பர் 17ஆம், 18 ஆம் திகதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. அன்றைய தினம் பிற்பகல் 3.30 மணியளவில் பேஜர், வோக்கிடோக்கி கள் லெபனானின் பட்டி தொட்டியெல்லாம் திடீர் திடீரென வெடித்துச் சிதறின. சிரியாவிலும் இது நடந்தது. இதனால் 3,400 பேர் காயமடைந்தனர். 39 பேர் உயிரிழந்தனர்.

தொடர்பாடல் கருவிகள் எவ்வாறு வெடிகுண்டாகின? இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் 40 வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ள ஹிஸ்புல்லா, முன்பின் அறியாதவர்களிடம் இத்தொடர்பாடல் கருவிகளை கொள்வனவு செய்திருக்குமா? இவ்வாறான கேள்விகள் பரவலாக எழுந்தன. இக்கருவிகளை நெருங்கவே மக்கள் அச்சம் கொண்டனர்.

இந்நிலையில் லெபனானும் சிரியாவும் பேஜர் பயன்பாட்டை உடனடியாக இடைநிறுத்தின. சில வாரங்களில் ஈரானும் இத்தொடர்பாடல் கருவியின் பாவனைக்குத் தடை விதித்தது.

பேஜர், வோக்கிடோக்கி வெடிப்பின் ஊடாக 1500 பேர் பார்வை இழந்துள்ளனர், பலர் கைவிரல்களை இழந்துள்ளனர். அவர்களில் பெரும்பகுதியினர் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள். அதனால் சுமார் 3,000 உறுப்பினர்களின் ஆளணி பலத்தை இழந்தது ஹிஸ்புல்லா. குறிப்பாக லெபனானுக்கான ஈரான் தூதுவர் முஜிதபா அமானியும் இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டார்.

இத்தாக்குதலுக்கு இஸ்ரேலையும் அதன் உளவுப் பிரிவான மொசாட்டையும் ஹிஸ்புல்லாவும் அதன் நேசநாடுகளும் குற்றம் சாட்டின. ஆனால் இஸ்ரேல் மௌனம் சாதித்தது. நாட்கள், வாரங்கள் செல்லச் செல்ல இத்தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்ற செய்தி வெளிவரத் தொடங்கியதோடு, ஐம்பது நாட்கள் கடந்த நிலையில் நவம்பர் 10 ஆம் திகதி இத்தாக்குதலுக்கு தானே அனுமதி வழங்கியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்கமாகக் குறிப்பிட்டார்.

இத்தகைய திட்டத்துடன் மொசாட் செயற்பட்டுக் கொண்டிருக்கையில், வோக்கிடோக்கிகளை உற்பத்தி செய்யும் ஜப்பானின் ஐகொம் நிறுவனம் அதன் ஐ.சி.-வி82 என்ற வகை வோக்கிடோக்கி தயாரிப்பை 2014 இல் நிறுத்தியது. அதனை தமக்கான ஒரு வாய்ப்பாக இஸ்ரேல் பயன்படுத்தலானது. அதற்கேற்ப சிறிய மாற்றங்களுடன் வோக்கிடோக்கிகளை சொந்தமாகத் தயாரிக்கலானது இஸ்ரேல். அதற்கு இணைய தளங்கள் ஊடாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இஸ்ரேல் தயாரித்த முதல் தொகுதி வோக்கிடோக்கிகள் 2015 இல் லெபனான் சந்தைக்கு அனுப்பப்பட்டன. அவ்வருட இறுதிக்குள் மேலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வோக்கிடோக்கிகள் அங்கு அனுப்பப்பட்டதாக உளவுப் பிரிவு அதிகாரிகள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், மொசாட் உளவுத்துறையின் பெண் அதிகாரி ஒருவர், 2018 இல் பேஜர் பற்றரியில் வெடிக்கும் பொருளைப் பொருத்துவதற்கான நுட்பத்தை உருவாக்கினார். இஸ்ரேலிய உளவுத்துறைத் தளபதிகள் இதனை மதிப்பாய்வு செய்தனர்.

ஆனால் அக்காலப்பகுதியில், ஹிஸ்புல்லா பேஜர்களைப் பயன்படுத்துவது போதுமானதாக இல்லை எனத் தீர்மானித்ததோடு ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தலாயினர். அதனால் மொசாட் பேஜர் தொடர்பான திட்டத்தை கிடப்பில் போட்டது.

இச்சூழலில் இஸ்ரேலின் யூனிட் 8200 உளவுப் பிரிவு அதிகாரிகள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அரபுமொழி செய்தி அறிக்கைகளில் இஸ்ரேலின் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை ஊடுருவும் (ஹேக் செய்யும்) திறன் குறித்து சிலாசித்து பேசலாயினர். இது ஹிஸ்புல்லாவை அச்சத்திற்கு உள்ளாக்கியதாக உளவுத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேநேரம் கையடக்கத் தொலைபேசிகளை ஹேக் செய்யும் திறன் இஸ்ரேலிடம் அதிகரித்து வருவதால் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவது குறித்து ஹிஸ்புல்லா, ஈரான் மற்றும் அவர்களது நேச அணியினர் அதிக எச்சரிக்கையுடன் செயற்படலாயினர்.

அதனால் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளைக் கைவிட்டு பேஜர் பாவனைக்கு செல்ல ஹிஸ்புல்லா தீர்மானித்தது. அதனால் ஹிஸ்புல்லா போர் நிலைமைகளுக்கு போதுமான பேஜர்களைத் தேடத் தொடங்கியது. இதனை யுனிட் 8200 அறிந்து கொண்டதோடு, கிடப்பிலுள்ள பேஜர் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்தது. அத்தோடு ஷெல் நிறுவனங்களின் வலையமைப்பை உருவாக்கி தங்கள் தோற்றத்தை மறைக்கவும், தயாரிப்புகளை ஹிஸ்புல்லாவுக்கு விற்கவும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன் பொருட்டு இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரிகள் பேஜர்களுக்கு நன்கு அறியப்பட்ட தாய்வானின் கோல்ட் அப்பல்லோவை குறிவைத்தனர். அதற்கேற்ப 2022 மே மாதத்தில் பி.ஏ.சி கன்சல்டிங் என்ற நிறுவனம் புடாபெஸ்டில் பதிவானது. ஒரு மாதம் கழித்து, பல்கேரியாவில் உள்ள சோபியாவில், நோர்டா குளோபல் லிமிடெட் என்ற நிறுவனம் ரின்சன் ஜோஸ் என்ற நோர்வே குடிமகன் ஊடாகப் பதிவு செய்யப்பட்டது.

பி.ஏ.சி கன்சல்டிங், ஏ.ஆர்-924 ரக்ட் எனப்படும் புதிய பேஜர் மாதிரியைத் தயாரிக்க கோல்ட் அப்பல்லோவிடமிருந்து உரிம ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்டது. அதற்கேற்ப இஸ்ரேல் தயாரித்த பேஜர்கள் கோல்ட் அப்பல்லோ தயாரிப்பை விடவும் பெரியதாக இருந்தன ஆனால் இது தூசு, நீர்ப்புகாதது. நீண்ட ஆயுளுடையது என விளம்பரப்படுத்தப்பட்டது. இதற்கென யூரியூப் பயன்படுத்தப்பட்டது. அத்தோடு விளம்பர திரைப்படங்களையும் பிரசுரங்களையும் தயாரித்து இணைய தளத்தில் அவை வெளியிடப்பட்டன. மொத்தமாக வாங்குபவர்களுக்கு தள்ளுபடி விலையிலும் அவை வழங்கப்பட்டன.

இந்தச் சூழலில் ஹிஸ்புல்லா தனது அனைத்து முன்னணிப் படைகளையும் பலப்படுத்த அதிநவீன பேஜரைத் தேடிக்கொண்டிருப்பதை யுனிட் 8200 கண்டுபிடித்தது. இஸ்ரேலில் உற்பத்தி செய்யப்பட்ட பேஜர்களை மொசாட் மேற்பார்வையிட்டது. இந்நிலையில் இஸ்ரேலில் தயாரிக்கப்படும் பேஜர் 2023 மார்ச்சில் வெடிமருந்து இன்றி நெதன்யாகுவிடம் காண்பிக்கப்பட்டது. அப்போது அவர் இதன் நீடித்த தன்மை குறித்து சந்தேகம் எழுப்பியதோடு, அலுவலக சுவரை நோக்கி அதனை எறிந்துள்ளார். அது சுவரில் பட்ட இடத்தில் வெடிப்பு ஏற்பட்டதோடு பேஜரும் அழிந்தது.

இந்நிலையில் இடைத்தரகர்கள் மூலம் மொசாட் முகவர்கள் பேஜர்களை ஹிஸ்புல்லா வாங்கும் வகையில் சந்தைப்படுத்தலாயினர். அந்தவகையில் இவ்வருடத்தின் (2024) ஆரம்பத்தில் 16 ஆயிரம் பேஜர்களை ஹிஸ்புல்லா வாங்கியுள்ளது.

ஆனால் இந்த பேஜர்களை மொசாட்டிடம் இருந்துதான் கொள்வனவு செய்கின்றோம் என்பதை ஹிஸ்புல்லா அறிந்திருக்கவில்லை. அவர்கள் இப்பேஜர்களை கொள்வனவு செய்ததன் ஊடாக எதிரியிடம் ரிமோட்டை கையளித்து குண்டை கையில் வைத்திருக்கும் நிலைக்கு அவர்களை அறியாமலே உள்ளாகினர்.

ஹிஸ்புல்லாவின் தொழில்நுட்பவியலளர்களுக்கு இப்பேஜர்கள் குறித்து 2024 இன் பிற்பகுதியில் சந்தேகம் வந்துள்ளது. அதனால் பேஜர்கள் தொடர்பில் பற்றி ஆராய்வதற்காக 2024 செப்டம்பர் 11 இல் ஈரானுக்கு சிலரை அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் பேஜர்களில் வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டிருப்பது அம்பலமாகிவிடும் எனப் பரபரப்படைந்த இஸ்ரேலின் உயர்மட்ட உளவுத்துறையினர், அதனை வெடிக்கச் செய்ய அனுமதி வழங்குமாறு பெஞ்சமின் நெதன்யாகுவை வற்புறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் செப்டம்பர் 16 இல் நெதன்யாகு உயர்மட்ட பாதுகாப்புத் தலைவர்களை சந்தித்ததோடு, தாக்குதலுக்கும் அனுமதி வழங்கினார். அதனை சிலர் எதிர்த்தனர், ஏனெனில் இது ஹிஸ்புல்லாவின் முழு அளவிலான எதிர்த்தாக்குதலைத் தூண்டும். அத்தோடு ஈரானின் தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்றனர்.

இருப்பினும் மறுநாள் பிற்பகல் லெபனான் உள்ளூர் நேரப்படி பி.ப 3.30 மணிக்கு பேஜர்களுக்குள் மறைக்கப்பட்ட வெடிபொருள் வெடிக்கும் வகையில் குறுஞ்செய்தி அனுப்ப மொசாட் உத்தரவிட்டது. அதற்கேற்ப ஆயிரக்கணக்கான பேஜர்கள் வெடித்துச் சிதறின. ஆயிரக்கணக்கானவர்கள் காயங்களுக்கு உள்ளாகினர். லெபனான் நிலைகுலைந்தது. ஹிஸ்புல்லா செய்வதறியாது திகைத்து நின்றது என்று உளவுப் பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இஸ்ரேலின் உளவுப் பிரிவு முன்னாள் உத்தியோகத்தர்கள் இருவர் இப்பேஜர் தாக்குதல் தொடர்பான இரகசியங்களை டிசம்பர் 24 ஆம் திகதி வெளியிட்டுள்ளனர். அவர்கள் தமது ஆளடையாளத்தை மறைந்து முகமூடி அணிந்தபடி சி.பி.எஸ் நியூஸ் நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டியில் இவற்றைக் கூறியுள்ளனர்.

“ஹிஸ்புல்லா எங்களிடமிருந்து பேஜரை வாங்கும்போது நாம் மொசாட்டிலிருந்துதான் வாங்குகிறோம் என்பதற்கான பூச்சிய அளவு கூட துப்பு கிடைக்காத அளவுக்கு நாம் பணியாற்றினோம். இத்திட்டத்தின் ஊடாக குறைந்தபட்ச சேதம் ஏற்படுத்தவென பல தடவைகள் பரீட்சிப்புக்களை மேற்கொண்டோம். நாம் பட்டினை அழுத்தினால் காயமடைவது பயங்கரவாதி மட்டுமே. அவருக்கு அருகில் அவரது மனைவியோ பிள்ளையோ இருந்தாலும், அவர் மட்டுமே பாதிக்கப்படும் வகையில் இதனைத் தயாரித்தோம். பேஜர்கள் வெடித்ததும் அதுவே நடந்தது. லெபனானில் உடனடியாகப் பரபரப்பு ஏற்பட்டது. ஹிஸ்புல்லா உறுப்பினர்களின் கைகள், கால்களில் காயங்கள் ஏற்பட்டன. அடுத்த நாள் வோக்கிடோக்கிகளும் வெடிக்கச் செய்யப்பட்டன. இந்நடவடிக்கைகளின் ஊடாக ஹிஸ்புல்லா உறுப்பினர்களைக் கொல்வது இலக்கல்ல, அவர்களை காயப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்” என்று அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இஸ்ரேல் தொடர்பாடல் சாதனத்தை தாக்குதல் கருவியாக பயன்படுத்தியது இது முதல் தடவை அல்ல. ஹமாஸின் பிரதான குண்டு தயாரிப்பு பொறியியலாளரான யஹ்யா அய்யாஸை 1996 இல் படுகொலை செய்யப் பயன்படுத்தியதும் ஒரு தொடர்பாடல் கருவிதான். அது கையடக்கத் தொலைபேசியாக அமைத்துக் கொள்ளப்பட்டது தெரிந்ததே.

மர்லின் மரிக்கார்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division