‘க்ளீன் ஸ்ரீலங்கா (தூய்மையான இலங்கை)’ தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறையை எவ்வாறு கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறீர்கள்?
எங்கள் அமைச்சுடன் இணைந்து செயற்படும் அனைத்து நிறுவனங்களின் செயற்பாட்டுத் திட்டங்களைப் மதிப்பாய்வு செய்தோம். கடந்த காலங்களில் இது தொடர்பில் எவ்வாறு செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதை ஆராய்ந்து பார்த்தோம். அதன்பிரகாரம், செயற்பாட்டு திட்டத்திற்கு அன்றே அங்கீகாரம் வழங்கி, குறித்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு மாதங்களுக்குள் இந்த செயற்பாட்டுத் திட்டத்தின்படி செயற்பட்டு அதன் முன்னேற்றத்தை குறித்த நிறுவனங்கள் எமக்கு காட்ட வேண்டும்.
இந்தச் செயற் திட்டம் செயற்படும் முறை தொடர்பில் தெளிவு படுத்த முடியுமா?
எம்மோடு தொடர்புடைய நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு அமைவாக அதற்கு ஏற்றவகையிலேயே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, சுகாதாரத் துறையை எடுத்துக் கொண்டால் பாம்பு விஷத்திற்கு மிகவும் வெற்றிகரமான மருந்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. எனினும் அச்செயற்பாடு எங்கோ ஓரிடத்தில் தடைப்பட்டுள்ளது. அது தொடர்பில் கவனத்தைச் செலுத்தி அந்த மருந்தை உற்பத்தி செய்வதன் மூலம் அந்த மருந்தினை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வருவதற்காகச் செலவிடும் பணத்தை மீதப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. அதேபோன்று எமது நாட்டில் மிகவும் உயர் தரத்திலான காரீயம் உள்ளது. அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பெட்டரிகளின் தரத்தினை மிக உயர்ந்த மட்டத்திற்குக் கொண்டு சென்று அவற்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் இந்தச் செயற்பாட்டுத் திட்டத்தில் முன்னெடுக்கப்படும். நாட்டுப் பொருளாதாரத்தை உயர்த்துவதை முதல் செயற்பாடாகக் கொண்டு தற்போது வெற்றியளித்துள்ள பத்து ஆராய்ச்சிகளைத் தெரிவு செய்து அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக நீங்கள் கூறியுள்ளீர்கள். அதைப் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?
இந்த பொருளாதாரத்தை இரண்டு மூன்று மாதங்களில் அல்லது ஓரிரு வருடங்களில் கட்டியெழுப்பி விட முடியாது. முறையான திட்டத்துடன் முன்னேறிச் செல்ல வேண்டும். எமது நாட்டின் வருமானத்தை அதிகரிக்காமல் எதுவும் செய்ய முடியாது. எனவே, எமது நாட்டின் பொருளாதாரத்தை குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் கட்டியெழுப்பக்கூடிய துறைகள் தொடர்பில் எமது முதன்மையான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற முறையில், என்னிடம் பாரிய பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதற்காக நாம் அடைய வேண்டிய இலக்குகள் பலவற்றைக் கண்டறிந்து, அவற்றை நோக்கி நம்மை அர்ப்பணித்துச் செயல்படுகிறோம். அதேவேளை சில திருத்தங்கள் மூலம் இந்நாட்டில் கஷ்டமான நிலையில் வாழும் வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம். அஸ்வெசும நலன்புரித்திட்ட உதவிகளை அதிகரிப்பதுடன், அந்த குடும்பங்களில் கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 6000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் வைப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கும் இந்த உதவித் தொகையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் நாம் ஒரு திட்டத்தின் படியே செய்கிறோம். இந்த நாட்டில் பிள்ளைகளின் கல்வியை ஒரு முதலீடாகவே நாம் நினைக்கிறோம்.
அவர்களை நாட்டின் பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக்கி அவர்களின் குடும்பங்களை வறுமையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதே எங்களது திட்டம்.
பொருளாதார வளர்ச்சிக்காக எந்தெந்த துறைகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது?
இதற்காக, நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல், எங்களிடம் குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் உள்ளன. குறுகிய கால வேலைத்திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறை போன்ற தற்போது ஒரு மட்டத்தில் காணப்படும் குறுகிய காலத்தில் அபிவிருத்தி செய்யக்கூடிய என்றாலும் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டிய பல துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். எனினும் அதன் மூலமான முழுமையாகப் பலனை எம்மால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. சுற்றுலாத் துறையில் உள்ள குறைபாடுகளே இதற்குக் காரணம். சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை கூடியளவில் பூர்த்தி செய்யும் வகையில் இத்துறை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். உதாரணமாக: உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத மிகவும் அழகிய இடங்கள் நம் நாட்டில் உள்ளன. அங்குள்ள வசதிகளை மேம்படுத்தி, அவர்கள் விருப்பப்படி அவ்விடங்களைப் பார்த்து ரசிக்கும் வகையில் ஹோட்டல் வளாகங்களை அமைத்துக் கொடுத்தல், பாதுகாப்பான முறையில் பூங்காக்களில் பயணிக்க இடமளித்தல், பாதுகாப்பான முறையில் சாகச அனுபவத்தைத் தரக்கூடிய இடங்களைத் திட்டமிடுதல், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகைகளில் கிராமங்களில் வசதிகள், பாரம்பரிய தொழில் கிராமங்கள், ஆயுர்வேதம், அவர்கள் வேடிக்கை பார்க்கக்கூடிய இடங்களை உருவாக்கி வசதிகளை ஏற்படுத்தல், அதேபோன்று பிரதேசத்திற்குப் பிரதேசம், கிராமத்திற்குக் கிராமம் என சிறப்பு உணவு வகைகள் உள்ளன. அவற்றைப் பிரபலப்படுத்தல், இது போன்ற பல்வேறு திட்டங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அவற்றை முறையாக அபிவிருத்தி செய்தால் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்து, இன்று நாம் பெறுவதை விட சுற்றுலாத் துறையில் அதிக வருமானத்தை எம்மால் ஈட்ட முடியும்.
மறுபுறத்தில் விவசாயத்தை எடுத்துக் கொண்டால் உற்பத்தித் திறனைப் பெருக்கி, உணவில் தன்னிறைவு பெற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதுதான் நமது முதன்மையான குறிக்கோளாக உள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதை நிறுத்த முடியும். அதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு எமது அமைச்சு தலையிட்டுள்ளது. இவ்வாறு பல துறைகளிலும் இந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான பல நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் பெறுபேறுகளை அடுத்த ஓரிரு வருடங்களில் மக்களுக்கு வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இதற்கிடையில், நீண்டகால பொருளாதார வேலைத் திட்டத்தின் கீழ் இந்த நாட்டை ஒரு நிலையான பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்வதற்கான அடித்தளத்தை அமைக்க பணியாற்றி வருகின்றோம்.
மக்கள் ஆணையின் ஊடாக ஓர் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர்; அந்த அரசாங்கம் செயற்பட இடமளிக்காமல் சில குழுக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
இம்முறை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலின் மூலம் ஏற்பட்ட மாற்றங்களை சாதாரண ஆட்சி மாற்றத்துடன் ஒருபோதும் ஒப்பிட முடியாது. இது இதுவரை காலமும் இடம்பெற்ற கட்டமைப்பில் மாற்றத்தை எதிர்பார்த்து இந்த நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களினதும் ஆசீர்வாதத்துடன் அமையப் பெற்ற அரசாங்கமாகும். எனவே, இதுவரை ஆட்சியில் இருந்தவர்களின் ஊழல் நிறைந்த இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது. நாம் ஊழலை ஒழிப்போம்; திருடர்களைப் பிடிப்போம்; தவறு செய்தவர்களுக்குத் தராதரம் பாராமல் தண்டனை பெற்றுக் கொடுப்போம் என நாம் கூறினோம்.
நாம் கூறியதைப் போன்று நாம் அந்த வழியிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றோம். எனவேதான் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள்,
இந்த நாட்டு மக்களின் பணத்தையும் சொத்துக்களையும் ஏமாற்றி கொள்ளையடித்தவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து மிகவும் பயத்தில் இருக்கின்றார்கள்.
அது அவர்களின் அரசியல் எதிர்காலம் பற்றியது மட்டுமல்ல; அவர்கள் இதுவரை அனுபவித்து வந்த ஊழல் அமைப்பின் வீழ்ச்சியால் பெரும் நிச்சயமற்ற நிலையில் உள்ளனர்.
இந்த அச்சத்தின் அடிப்படையிலேயேதான் அவர்கள் இவ்வாறு போலிக் குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் செய்து கொண்டிருக்கின்றனர்.
அவர்களது இருப்பின் ஊடாக தமது இருப்பை உறுதிப் படுத்திக் கொண்டிருந்த அதிகாரிகள், நண்பர்கள், உறவினர்கள், ஊடக பிரதானிகள், சில தலைவர்களை குருட்டு பக்தியுடன் ஏற்றுக்கொண்டவர்கள் எனப் பலர் உள்ளனர். அவர்கள் பல்வேறு அவதூறுகளை பரப்பி ஒழுங்கமைக்க முயன்றனர், ஆனால் அது மக்களுக்குத் தெரியும். எனவே, தங்களுக்குச் சாதகமான ஊடகங்களைப் பயன்படுத்தி போலியான மக்கள் ஆதரவை உருவாக்க முயல்கின்றனர். அவற்றுள் அந்த ஊடகங்களின் பல தனிப்பட்ட காரணங்கள் உள்ளன.
என்றாலும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுக்கு நல்லபிப்பிராயம் இருக்கின்றதே தவிர அதிருப்தி எதுவும் இல்லை என்பதை அவர்களால் பார்க்க முடிகிறது. எனவே, அவர்கள் தங்கள் இருப்பிற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். இவற்றினால் அரசு சளைத்துவிடவில்லை. காரணம் மக்கள் அரசாங்கத்தோடு இருக்கின்றார்கள்.
எம். எஸ். முஸப்பிர்