பத்திரிகை காரன் வரவை எதிர்பார்த்து
வீட்டு முன் வீதியிலே நிற்கிறேன்
பக்குவமாய் சமைத்த காலை உணவை
உண்ண வரச்சொல்கிறாள் என் மனைவி
எட்டி வெகுதூரம் கண்ணெறிந்து பார்த்துவிட்டு
வேகமாய் வந்து கையைக் கழுவிக்கொண்டு
கட்டில் விளிம்பிலே நானும் உட்கார்தேன்
தட்டில் உணவும் தண்ணீரும் காத்திருக்கு
சோளம்மாப் பிட்டும் சுரக்காய் கறியும்
உருட்டிப் பிரட்டி ஒருவாறு உண்டுவிட்டேன்
சோக்காத்தான் இருந்திச்சி பசியடங்கவில்லை
கையைத் துடைத்துவிட்டு வீதிக்கு வருகிறேன்
என்னை நோக்கிய என் அன்பு மனைவி
என்னங்க பொடிநடையாய் உலாவுறயள்
என்னவென்றுதான் சொல்லுங்களன் என்றார்
பத்திரிகைக் காரனைப் பார்த்து நிற்கிறேன்
அப்படி என்னதான் அந்த பத்திரிகையில்
நல்ல செய்தி வந்திடப் போகுது ம்………
அடியேய் புள்ள புதுப்புது புதினங்கள்
வருகுது பத்திரிகையில் அறியவேண்டாமோ
என்னதான் நடந்தாலும் நமக்குத்தான் என்ன
நாசமத்த உலகில நடப்பதெல்லாம் நல்லதா
எங்கெங்க என்ன நடந்தாலும் அதை அறியணும்
அதப்படிச்சாத்தான் எனக்கு பசியடங்கும்