தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகள் எதிர்வரும் (08) புதன்கிழமை முதல் (12) வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
அன்றைய தினம் முதல் சாதாரண முறைப்படி பெறுபேறுகளை வெளியிடுவதற்கு சுமார் 40 நாட்கள் ஆகும் எனவும், இம்முறை கால அவகாசம் மேலும் குறைக்கப்பட்டு விரைவில் பெறுபேறுகளை வெளியிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுமெனவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
“நீதிமன்ற தீர்ப்பின்படி, சர்ச்சைக்குரிய 03 வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்கி, புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பீட்டு பணியை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவின் சட்டபூர்வமான தன்மை குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். இதன்படி, இந்த முடிவு சட்டப்பூர்வமானது என உறுதி செய்யப்பட்டது.
இதுவரை, பரீட்சை நடந்து சுமார் மூன்றரை மாதங்கள் கடந்துவிட்டன. புதிய பாடசாலை தவணை எதிர்வரும் (27) ஆரம்பமாகிறது.
இம்முறை முடிவுகளை மதிப்பிடுவதில் பல சவால்கள் உள்ளன. க.பொ. த உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த (02) செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது.
இரண்டு முக்கிய பரீட்சைகளின் மதிப்பீடு ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. பரீட்சை வரலாற்றில் இது ஒரு சிக்கலான தருணம். ஆனால் இந்த இரண்டு பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட வேண்டிய பரீட்சைகள் அல்ல. இதனால் சவாலை ஏற்று பரீட்சை மதிப்பீட்டு பணிகள் சம காலத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை தடைகளுக்கு மத்தியிலும் விரைவில் வெளியிட முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.