ஆறாவது தலைமுறை போர் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ள சீனா, இந்திய எல்லைக்கு அருகே பிரம்மபுத்திரா ஆற்றில் 137 பில்லியன் ெடாலர் மதிப்பிலான உலகின் மிகப்பெரிய அணை கட்டும் திட்டத்தையும் அறிவித்துள்ளது. இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் நீர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சீனாவின் இந்த நடவடிக்கையை இந்தியா எப்படி சமாளிக்கப் போகிறது என்பதுதான் பிரச்சினை.
‘நவீன சீனாவின் தந்தை’ எனப் போற்றப்படும் மா சே துங்கின் 131 ஆவது பிறந்தநாளில், சீனா இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தனது ஆறாவது தலைமுறை போர் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், இந்திய எல்லைக்கு அருகே பிரம்மபுத்திரா ஆற்றில் உலகின் மிகப் பெரிய அணை திட்டத்தையும் சீனா அறிவித்துள்ளது.
ரேடார் மற்றும் மேம்பட்ட உபகரணங்கள் மூலம் கண்டுபிடிக்க முடியாத சீனாவின் முதல் ஸ்டெல்த் வகை போர் விமானம் கே.ஜே -20 ஆகும். இந்தப்போர் விமானங்களைச் சமாளிக்க, 2021 ஆம் ஆண்டு ‘ஆறாவது தலைமுறை’ போர் விமானங்கள் மூலம் ‘அடுத்த தலைமுறை வான்வெளி ஆதிக்கம்’ (NGAD) என்ற திட்டத்தை அமெரிக்கா அறிவித்தது. 2031 ஆம் ஆண்டுக்குள், இந்த போர் விமானங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று அமெரிக்க விமானப்படை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஆறாவது தலைமுறை போர் விமானத்தின் முதல் விமானம் பறந்த வீடியோவை சீனா வெளியிட்டுள்ளது. சீன வான்வெளியில் காணப்பட்ட இந்தப் போர் விமானம் அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ட்ரோன்களுடன் தடையற்ற ஒருங்கிணைப்புடன் செயற்படும் இந்த புதிய விமானம், நவீன வான்வழிப் போர்களில் விமானிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதிக தொலைவில் உள்ள இலக்குகளையும் கண்டறிந்து தாக்கும் அதிநவீன ரேடார் அமைப்புகளுடன் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு இருக்கைகள் கொண்ட இந்தப் போர் விமானம், அடுத்த தலைமுறை போர் தொழில்நுட்பத்துக்கான போட்டியில் அமெரிக்காவை சீனா முந்துகிறது என்று கூறப்படுகிறது.
இது உலகின் முதல் ஆறாவது ஜென் போர் விமானம் ஆகும். இது அமெரிக்காவின் NGAD ஜெட் திட்டத்துடனான நேரடிப் போட்டியாகும்.
இந்நிலையில், இந்தியாவின் Advanced Medium Combat Aircraft (AMCA), 5.5 -தலைமுறை ஸ்டெல்த் வகை போர்விமானம் இன்னமும் தயாரிப்பு நிலையிலேயே உள்ளது. தனது விமானப்படையை நவீனமயமாக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. எனவே, இந்த திட்டத்தில், தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்துவது குறித்த முடிவை மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறத்தில், இந்திய எல்லைக்கு அருகே பிரம்மபுத்திரா ஆற்றில் சுமார் 137 பில்லியன் ெடாலர் மதிப்பிலான அணையைக் கட்டும் திட்டத்தையும் சீனா அறிவித்துள்ளது. 60,000 மெகாவாட் திறன் கொண்ட இந்த அணை, உலகின் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தவாரம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இடையே சிறப்பு பிரதிநிதி அளவிலான நாடு கடந்த நதிகளின் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அணைகட்டும் திட்டத்தை சீனா அறிவித்திருப்பது, இந்தியாவுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
நிலஅதிர்வு மண்டலத்தில் இந்த அணை கட்டப்படுவதால், இந்தியாவில் நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் மேற்குவங்கத்தில், விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சீனாவின் போர் விமானம் மற்றும் அணை அறிவிப்புகள் இந்தியாவுக்கான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகின்றன.
இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை ஆகியவற்றில் இன்னும் விரைவாக செயற்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதேவேளை சமீபத்தில் சீனா தனது 6 ஆவது தலைமுறை போர் விமானத்தை பரிசோதித்து பார்த்திருந்த நிலையில், KJ-3000 எனும் மேற்படி புதிய அதிநவீன விமானத்தை பரிசோதித்திருக்கிறது. தாய்வானுடன் போருக்கு தயாராகி வரும் சீனாவின் இந்த புதிய சோதனை, இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, ஜப்பானுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
KJ-3000 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த வகை விமானங்கள் அமெரிக்காவிடம் கூட இல்லை. இது மின்னணு கண்காணிப்பு விமானமாகும். டிசம்பர் இறுதியில் இந்த விமானம் குறித்து சமூக ஊடகங்களில் சில படங்கள் பகிரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
KJ-3000 விமானத்தின் மேல் பகுதியில் குடை போன்ற அமைப்பு இருக்கும். இது குவிந்து இருக்காமல், டிஸ்க் போன்று இருக்கும். இதுதான் ரேடார் கருவி. போர்க் காலங்களில் எல்லைப் பகுதியில் உள்ள அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஆய்வு செய்ய இந்த விமானம் பயன்படுகிறது.
செயற்கைக்கோளிலிருந்து தரைப்பகுதியை ஆய்வு செய்வதை விடவும், சில ஆயிரம் அடி பறக்கும் விமானத்திலிருந்து ஆய்வு செய்வது எளிதானது. அதைத்தான் இந்த விமானம் செய்கிறது.
இந்த விமானத்திலிருந்து சொந்த நாட்டு போர்க் கப்பலுக்கும், போர் விமானங்களுக்கும் நிகழ்நேர தரவுகளை வழங்க முடியும். எனவே துல்லியமாகவும், உடனடியாகவும் தாக்குதலுக்கு தயாராக முடியும். இந்த விமானத்தைத்தான் சீனா டிசம்பர் இறுதியில் பரிசோதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படியான நவீன விமானங்கள் தாய்வான் விஷயத்தில் சீனாவுக்கு நிச்சயம் பலன் கொடுக்கும். தாய்வான் தொடக்கத்தில் சீனாவின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. ஆனால் பின்னர் அமெரிக்காவின் தலையீடு காரணமாக, சுதந்திர நாடு என்கிற நிலைப்பாட்டிற்குள் நுழைந்திருக்கிறது.
இந்தக் கொந்தளிப்பில் சீனா இருக்கும்போது, தாய்வானுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான் களம் இறங்கினால் யுத்தம் பலமாக இருக்கும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். “தாய்வானுக்கு ஒன்று என்றால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்” என்று அமெரிக்கா முன்னர் கூறியிருந்தது. தாய்வானுக்கு தேவையான ஆயுதங்களை வழங்குவதோடு, நேட்டோவை கொண்டு வந்து தாக்குதல் நடத்தவும் அமெரிக்கா தயங்காதென்றே நம்பப்படுகின்றது. அப்படி நடந்தால் அமெரிக்காவுக்கும், கூட நிற்கும் ஜப்பானுக்கும்தான் சிக்கல் என்பதை KJ-3000 விமான சோதனை மூலம் சீனா தெரிவித்திருக்கிறது.
வான், கடற்படை மற்றும் தரைப்படையை இந்த KJ-3000 விமானம் ஒருங்கிணைப்பதால் லடாக் எல்லையில் இந்தியாவுக்கும் இது சவாலை ஏற்படுத்தும். ஏற்கெனவே கால்வான் எல்லைப் பகுதியில் இருநாட்டுப் படைகளும் கடுமையாக மோதிக்கொண்டன. இதில் இருநாட்டு தரப்புக்கும் இடையே உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இப்போதும் கூட நிலைமை இன்னும் முழுமையாக சீரடையவில்லை.
எனவே இந்தியாவுக்கு KJ-3000 விமானம் அச்சுறுத்தல்தான். உக்ரைன்- — ரஷ்யா போர், இஸ்ரேல் — பாலஸ்தீன போர்கள் உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் புதியதாக சீனா மற்றொரு போரை தொடங்கிவிடக் கூடாது என்பதே இப்போதைக்கு எல்லோருடைய வேண்டுதலாக இருக்கிறது.
எஸ்.சாரங்கன்