பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். எமக்கு வழங்கிய பேட்டியிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கே: பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது பற்றி விளக்கமளிக்க முடியுமா?
பதில்: தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைந்து ஒரு மாதமும் சில நாட்களுமே கடந்துள்ளன. நாம் பெற்ற மக்கள் ஆணைக்கு அமைய, இந்த நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். தற்போது இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வந்துள்ளது. இந்த மீட்சியினால் மாத்திரம் நாடு அனைத்துப் பொருளாதாரப் பிரச்சினைகளையும் தீர்வுக்குக் கொண்டுவந்து விட்டது எனக் கூறவரவில்லை. மக்களுக்கு நிலையான தீர்வுகளை வழங்க, பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கிக் கொண்டுசெல்லப்பட வேண்டும்.
முன்னைய ஆட்சியாளர்கள் உருவாக்கிய பாதாளத்தில் இருந்து நாட்டை மீட்பதற்காக பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவது அரசாங்கம் என்ற ரீதியில் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை அங்கிருந்து மீட்க முறையான பொருளாதாரத் திட்டம் அவசியம். இந்த வழியில் பொருளாதாரத்தை அழித்த அதே குழு ஒருதலைப்பட்சமாக ஏப்ரல் 2022 இல் வெளிப்புற கடன் சேவைகளை ஒரே தீர்வாக நிறுத்தியது என்பதை நாங்கள் அனுபவித்தோம். அந்த நிலைமையை எதிர்கொண்டு சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதென ஒரே தீர்வாக முன்மொழிந்தனர்.
அதன்படி, நான்கு ஆண்டுகளில் 8 தவணைகளைக் கொண்டதாக 3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நீடிக்கப்பட்ட நிதி வசதியை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறுவதற்கான திட்டத்தில் நாடு உள்நுழைந்தது. இதன் நிபந்தனைகளில் ஒன்றாக கடன் மறுசீரமைப்புக்கான செயன்முறை தொடங்கப்பட்டது. கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் தாமதம் மற்றும் சிக்கலான தன்மை காரணமாக, நாடு கூடுதல் செலவுகளைச் செய்ய வேண்டியிருந்தது மற்றும் மக்கள் மீது கூடுதல் சுமை சுமத்தப்பட்டது. எவ்வாறாயினும், அரசாங்கத்தின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டத்தின்படி, தற்போதைய சூழ்நிலையின் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டையும் கருத்தில் கொண்டு நாட்டு மக்களின் நலனுக்கான விருப்பங்களுடன் நாங்கள் முன்னேறி வருகின்றோம்.
கே: சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அடுத்த கடன் தவணையைப் பெற்றுக் கொள்வது எந்தளவில் உள்ளது?
பதில்: கடந்த வருடம் நவம்பர் 26ஆம் திகதி நடைபெற்ற மூன்றாவது மதிப்பாய்வில், பொருத்தமான அளவுருக்கள் மற்றும் அரச வருமான மார்க்கங்களில் பொருத்தமான தலையீடு மற்றும் சரியான நேரத்தில் வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தால் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடலில் இணக்கப்பாட்டுக்கு வர முடிந்தது. இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை ஒப்புதல் வழங்குவதற்கு முன்னர், நீடிக்கப்பட்ட நிதி உதவியின் அடுத்த தவணையைப் பெறுவதற்கு அரசாங்கம் தற்போது சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளது.
கே: கடன் மறுசீரமைப்பு செயன்முறை குறித்து விளக்கமளிக்க முடியுமா?
பதில்: கடன் மறுசீரமைப்பு செயல்முறை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு ஆகிய இரு விடயங்களை உள்ளடக்கியுள்ளது. 2023 ஜூலையில் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பின் போது பலதரப்பு கடன் வழங்குநர்கள் பல்வேறு அடிப்படைகள் மற்றும் நியாயங்களின் அடிப்படையில் விலக்கப்பட்டுள்ளனர். அதன்படி, இது உத்தியோகபூர்வ இருதரப்பு கடன்கள் மற்றும் தனியார் சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் (ஐ.எஸ்.பி) வைத்திருப்பவர்களைக் கொண்டுள்ளது.
கே: இருதரப்பு கடன் மறுசீரமைப்பு செயல்முறை எந்தக் கட்டத்தில் உள்ளது?
பதில்: சீனாவின் எக்சிம் வங்கி, சீனா டெவலப்மென்ட் வங்கி, பிற உத்தியோகபூர்வ கடனாளிகள் மற்றும் பிற வணிகக் கடன் வழங்குபவர்களுடன் இணைந்தும், 17 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரான்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து தலைமை தாங்கும் அதிகாரபூர்வ கடனாளிகள் குழு இருதரப்புக் கடன் மறுசீரமைப்புக் குறித்துக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டோம்.
அதிகாரபூர்வ கடன் வழங்குநர் குழு 2024 ஜுன் மாதம் இது தொடர்புடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்கிக் கொண்டது. 2023 ஒக்டோபர் மாதத்திற்குள் இணக்கப்பட்ட கட்டமைப்பிற்குள் தொடர்புடைய கடன் சீனா எக்ஸிம் வங்கியுடன் மறுசீரமைக்கப்பட்டது. உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் (குவைத், சவுதி அரேபியா, ஈரான் மற்றும் பாகிஸ்தான்) தவிர, அனைத்து இருதரப்பு கடனாளர்களும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட கட்டமைப்பிற்குள் கடன்களை மறுசீரமைப்புச் செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர், ஏறத்தாழ டொலர் 300 மில்லியன் மற்றும் மொத்த வெளிநாட்டுக் கடனில் ஒரு சதவீதம் மறுசீரமைப்புக்கு உட்பட்டது.
கே: சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது?
பதில்: பரேட் சட்ட நிவாரணத்தின் நீடிப்பைக் கருத்தில் கொண்டு, பரேட் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் திகதியை ஒத்திவைப்பதற்குப் பதிலாக, நீண்ட காலமாக நிலவும் இந்தப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுகள் காணப்படுவதை உறுதிசெய்ய, பங்குதாரர் குழுக்களுடன் அரசாங்கம் கலந்துரையாடியது. இதன் விளைவாக, பரேட் சட்டத்தின் அமுலாக்கம் 2025 மார்ச் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கே: இது தொடர்பில் வழங்கப்பட்டுள்ள நிவாரணம் என்ன?
பதில்: வணிகங்களுக்கு நிவாரணம் என்பது காலநீடிப்பால் மட்டும் வழங்கப்படுவது அல்ல. மத்திய வங்கியின் தரவுகளின்படி, 25 மில்லியன் ரூபாவுக்கும் குறைவான கடன் மூலதனத்தைக் கொண்ட கடனாளிகளில் 99 வீதமானவர்களுக்கு வங்கிகளுடன் கடன்களை மீளப் பேரம் பேசுவதற்கும் கொடுப்பனவுத் திட்டத்திற்கு உடன்படுவதற்கும் 12 மாத காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 25 முதல் 50 மில்லியன் ரூபா வரை கடன் பெற்றவர்களுக்கு 9 மாதங்கள் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மற்றைய கடன் வாங்குபவர்களுக்கு 6 மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட மற்றும் மத்திய வங்கியால் செயற்படுத்தப்பட்ட நிவாரணப் பொதியில் குறைந்த வட்டி வீதத்தில் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடித்தல், கடன் மதிப்பீடுகளில் தளர்வு மற்றும் மதிப்பீட்டு சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான வெளிப்படையான பொறிமுறையை வழங்குதல் போன்ற பல முக்கியமான நடவடிக்கைகள் அடங்கும். இந்த நிவாரண நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம் பொருளாதாரத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தீவிர பங்களிப்பை உறுதி செய்வதாகும்.
கே: பாடசாலை மாணவர்கள் பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொள்ள என்ன வகையான சலுகை வழங்கப்படுகின்றது ?
பதில்: சமூகத்தில் நலிவடைந்த பிரிவினரின் பெற்றோரால் பிள்ளைகளின் கல்வியில் சுமத்தப்பட்டுள்ள சுமையைக் குறைக்கும் வகையில் பாடசாலைக்கு அத்தியாவசியமான பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் கொள்வனவு செய்வதற்கு ஒரு மாணவருக்கு 6,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிவாரணம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு இந்த உதவித்தொகை விரைவில் வழங்கப்படும். தற்போது நிவாரணம் கிடைக்காமல் பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கும் குடும்பங்களின் குழந்தைகளுக்கும் கல்வி அமைச்சின் பரிந்துரையின் பேரில், இந்த நன்மை வழங்கப்படுகிறது. இந்த செயல்முறையை விரைவில் முடிப்போம் என்று நம்புகிறோம். பண ரீதியான நிதிச் சிரமங்களை எதிர்நோக்கும் சகல சிறார்களுக்கும் இந்த உதவித்தொகை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து ஒரு சில நாட்களுக்குள் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.