2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்துக்குச் சென்று தேடி படி எடுத்து வந்த நூல் “கோப்பிக் கிருஷிக் கும்மி”. “மலையகம் 200” நினைவு கூரப்படும் இந்த வேளை மலையகத்தின் முதலாவது நூலாக கூறப்படுகிற இந்த நூலை பரவலாக கிடைக்க செய்ய வேண்டியது நமது கடமை என உணர்ந்தோம். இதனை பற்றிய விபரங்களை சேகரிப்பது எடுத்து வருவது, தொகுப்பது, சரி பார்ப்பது, வெளியிடுவது என்கிற கட்டங்களைப் பற்றி பிரமிளாவும் நானும் அதிகம் உரையாடினோம். அதன்படி நாங்கள் தீவிரமாக இயங்கியதன் மூலம் “கோப்பிக் கிருஷிக் கும்மி’ நூலை குமரன் பதிப்பகத்துக்கு ஊடாக வெளிக்கொணர்ந்தோம்.
1869 ல் வெளியான ‘கோப்பிக் கிருஷிக் கும்மி’ மலையகத்தின் முதல் நூல் என நமக்கு கண்டு பிடித்து கூறியவர் மு.நித்தியானந்தன். “கூலித் தமிழ்” நூலில் அவர் அதைப் பற்றிய பல விபரங்களைக் வெளியிட்டிருந்தார். அந்த நூலில் உள்ள முதல் கட்டுரையும், பெரிய கட்டுரையும் அது தான்.
இலங்கையில் வெளியான முதல் நூல், இலங்கையின் முதலாவது தமிழ் நாவல், முதலாவது வரலாற்று நாவல், முதலாவது சிறுகதைத் தொகுப்பு முதலாவது என்பவற்றை மீள் கண்டு பிடிப்பு செய்து; அவற்றை மீள பதிப்புக்கும் முயற்சிகள் கடந்த சில தசாப்தங்களாகத் தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் மலையகத்தின் முதலாவது நூல் என கருத்தப்படுகிற ‘கோப்பிக் கிருஷிக் கும்மி’ (A Cummi poem on coffee planting) ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளைக் கொண்ட நூல். இதே காலத்தில் வெளிவந்த பத்திரிகைகள் எல்லாம் ஆங்கிலத்திலும்;கூடவே அதன் மொழிபெயர்ப்பு தமிழிலும் சேர்த்தே வெளிவந்த ஒரு மரபைக் கொண்டிருந்தது என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும். இந்த நூலில் உள்ள 280 கும்மிப் பாடல்களும் இடது பக்கத்தில் ஆங்கிலத்திலும், வலது பக்கம் அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் என வெளிவந்ததைக் கவனிக்கலாம்.
இலங்கையின் மிகத் தரமான வாசனைத் திரவியங்களை அடையாளம் கண்டதாலேயே இலங்கை முதற் தடவை போர்த்துகேயரின் ஆக்கிரமிப்புக்கும், காலனித்துவ ஆட்சிக்கும் இலக்கானது. அவ்வாறு போர்த்துகேயரும் அதன் பின்னர் ஒல்லாந்தரும் பின்னர் ஆங்கிலேயரும் கூட கறுவாவை அவர்களின் வருமானத்துக்கு உரிய முக்கிய உற்பத்தியாக ஆக்கிக் கொண்டார்கள். இலங்கையின் சுதேசிய பெருந்தோட்டத்துறையாக நாம் கறுவாவைத் தான் கொள்ளமுடியும். ஆங்கிலேயர்கள் கறுவா பெருந்தோட்டத்துறையை ஒரு கட்டத்தில் முடிவுக்கு கொண்டு வந்தார்கள். அதற்குப் பதிலாக கோப்பியும்; கோப்பியின் அழிவைத் தொடர்ந்து தேயிலை இறப்பர் ஆகியவற்றையும் உற்பத்தி செய்தார்கள். அவையே ஆங்கிலேய கால பிரதான வருவாய்க்கான உற்பத்திகளாக ஆக்கப்பட்டன. அவற்றை பலப்படுத்துவதற்காகவே இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கினர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்த மூன்று பிரதான பெருந்தோட்டப் பயிற்செய்கைக்காகவே தென்னிந்தியாவிலிருந்து தமிழ் கூலித் தொழிலாளர்களையும் குடியேற்றினர். ஆக கோப்பி, தேயிலை, இறப்பர் ஆகிய இலங்கையின் பிரதானமான மூன்று பெருந்தோட்டப் பயிர்களும் சுதேசிய மண்ணுக்கு உரியவை அல்ல. அந்த மூன்றுமே வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்து செயற்கையாக இங்கே பயிரிடப்பட்டு – நடப்பட்டு பெருந்தொட்டத்துறையாக ஆக்கப்பட்டவை. அது போல அதை உருவாக்கவும், வளர்க்கவும், பலப்படுத்தவும், பாதுகாக்கவும் கூட வெளிநாட்டில் இருந்து தான் (தமிழகத்தில் இருந்து) தொழிலாளர்களையும் கொண்டு வந்தார்கள்.
இதில் கோப்பிப் பயிர்ச்செய்கை ஒல்லாந்தர்களால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதனைப் பெருந்தோட்ட உற்பத்தியாக விரிவுபடுத்தியவர்கள் ஆங்கிலேயர்களே. 1860களில் கோப்பிப் பயிர்செய்கை மோசமான நோயினால் பாதிக்கப்பட்டு முடிவுக்கு வந்துகொண்டிருந்த காலமாகும். அப்படி முடிவுக்கு வந்துகொண்டிருந்த காலத்தில் தான் 1869இல் ஆபிரஹாம் ஜோசப் என்பவர் இந்த நூலை வெளியிட்டார். கோப்பி இலைகளை நோய் தாக்கி அழிவடையத் தொடங்கியது இந்த நூல் வெளிவந்த அதே ஆண்டு தான். இந்தப் பின்னணியிலேயே இந்த நூலின் உள்ளடக்கத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.
1860கள் 1870களில் கோப்பி பயிர்ச்செய்கை, அதன் பராமரிப்பு, அறுவடை, தயாரிப்பு, ஏற்றுமதி என பல விபரங்கள் அடங்கிய மேலும் சில ஆவணங்களும், நூல்களும் வெளிவந்திருப்பதையும் காண முடிகிறது.
இதை நோக்கும் போது; அத்துறையை மீட்டெடுக்கும் கடைசி முயற்சியாக இப்படைப்புகள் வெளிவந்தனவா என்று எண்ணத் தோன்றுகிறது. கோப்பி அழிவுக்கு உள்ளான இக்காலக்கட்டத்தில் வெளியான பின்வரும் நூல்களை இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.
• The Coffee – Planter of Ceylon (William Sabonadiere) 1870
• Observations on the Enemies of the Coffee Tree in Ceylon (John Nietner) 1861
• Coffee planting in southern India and Ceylon (Hull, Edmund C. P), 1877
• 1877 The First Year’s Work in the Opening of a Coffee Estate (T C Owen), 1877
• Thirty years ago” or Reminiscences of the early days of coffee planting in Ceylon, (Millie, P. D.), 1878
• Liberian Coffee in Ceylon: The History of the Introduction and Progress of the Cultivation Up to April 1878 (G. A. Cruwell), 1878
• Ceylon Coffee Soils and Manures. A Report to the Ceylon Coffee Planters’ Association (Hughes, John), 1879
• The Cinchona Planter’s Manual (Owen, T. C), 1881
கோப்பிக் கிருஷிக் கும்மிக்கு முன்னோடி?
இவ்வாறு இதைப் பற்றிய தேடல்களின் போது கண்டெடுத்த நூல்களில் முக்கியமான இன்னும் இரண்டு நூலகளைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்.
1. Coffee-Planting in Ceylon
2. Mountain Life and Coffee Cultivation in Ceylon
இலங்கையில் கோப்பி செய்கை (Coffee-Planting in Ceylon) என்கிற நூல் 1961 இலேயே வந்து விட்டது என்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது கோப்பிக் கிருஷிக் கும்மி வெளிவருவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்து விட்டது. சுமார் 44 பக்கங்களை மட்டுமே கொண்ட இந்த நூலின் ஆசிரியர் அலிகுஸ் (Aliquis) என்று காணப்படுகிறது. அது ஒரு புனை பெயர் என்று கண்டு கொள்ள முடிந்தது.
யார் இந்த Aliquis என்று தேடித் பார்த்த போது அவர் வில்லியம் ரூட் (William Rudd) என்று அறிந்துகொள்ள முடிந்தது. வில்லியம் ரூட் இலங்கைக்கு அன்றைய கவர்னர் ரோபர்ட் வில்மட் ஹோர்டன் ஆரம்பித்த ஒரு தேங்காய் எண்ணை மில்லில் இஞ்சினியராக பணியாற்றுவதற்காக 1832 இல் வந்தவர்.[1]
இலங்கையில் முதலாவது கோப்பித் தோட்டத்தை உருவாக்கியவர் ஜோர்ஜ் பேர்ட் (George Bird) என்பதை அறிந்திருப்பீர்கள். குண்டசாலையில் இருந்த கோப்பித் தோட்டத்தில் ஜோர்ஜ் பேர்டுக்கு உதவியாளராக வில்லியம் ரூட் நியமிக்கபட்டார். இலங்கையின் பெருந்தோட்டத்துறையின் வரலாற்றில் “சின்னத்துரை” (Sinna Durai)என்று முதலாவது அழைக்கப்பட்டவர் வில்லியம் ரூட். படிப்படியாக கோப்பித் தோட்டங்களுக்கு சொந்தக் காரர் ஆனார். அவரின் அடுத்தடுத்த பரம்பரைகளும் பல்வேறு முதலீடுகளுடன் பிற்காலத்தில் இலங்கையில் பெரும் பணக்காரர்களாக ஆனார்கள்.
இது ஒரு புறம் இருக்க கோப்பிப் செய்கைக்காக கடுமையாக உழைத்து வந்த காலத்தில் தனது அனுபவங்களைத் தான் கோப்பிச் செய்கையின் வழிகாட்டியாக “Coffee-Planting in Ceylon” நூலை ஜோர்ஜ் ரூட் எழுதினார். ஆனால் அதனை அவர் ஏன் புனைப்பெயரில் எழுதி லண்டனில் பதிப்பிட்டார்.[2] ஆனால் அதனை அவர் கட்டுரை வடிவத்தில் எழுதவில்லை. மாறாக கவிதை வடிவில் அதனை தந்திருக்கிறார்.
மொத்தம் ஏழு சிறு அத்தியாயங்களாக அந்நூலின் பகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அவ்வத்தியாயங்களுக்கு அவர் “Fytte” என்கிற சொல்லைப் பயன்படுத்தியதிலிருந்து அதை அவர் பண்டைய ஆங்கிலேய இலக்கிய கலை நயத்துடன் அணுகியிருப்பதைக் கவனிக்கலாம். “Fyttethe Second”என்றால் இரண்டாவது பகுதி என்று பொருள். அப்பதத்தை கவிதைகலின் அங்கங்களைப் பிரித்துக் காட்டுவதற்காகவே பயன்படுத்தி வந்திருப்பதை கவனிக்க முடிகிறது.
அதுபோல வில்லியம் ஸ்கீன் (William Skeen)1870 இல் 188 பக்கங்களில் வெளியிட்ட Mountain Life and Coffee Cultivation in Ceylon என்கிற நூலைக் குறிப்பிட வேண்டும்.
வில்லியம் ஸ்கீன் ஆங்கிலேய காலனித்துவ காலத்தில் இலங்கை பற்றிய ஏராளமான நூல்களை எழுதியவர். ஒரு பதிப்பாளரும் கூட. அதேவேளை இந்த நூலுக்கு முன்னுரை 1868 ஆம் ஆண்டே எழுதப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லபோனால் இந்த இரு நூல்களும் கோப்பிக் கிருஷிக் கும்மிக்கு முன்னரே எழுதப்பட்டிருக்கிறது.
கோப்பிச் செய்கை பற்றிய விபரங்கள் தொடங்கி தொழிலாளர்கள் பற்றிய விபரங்கள் வரை பதிவு செய்திருப்பது; இந்த இருவரின் நூல்களிலும் உள்ள பொதுப்பண்பாகும். அதுபோலவே இரு நூல்களும் கவிதை வடிவில் எழுதியிருப்பதைக் காண முடியும்.
ஆபிரகாம் ஜோசப் பின்னர் கோப்பிக் கிருஷிக் கும்மியை எழுதுவதற்கான சிந்தனையும், வழிகாட்டலும் இங்கிருந்தே தொடங்கியிருக்கலாம் என்று நம்மால் கணிக்க முடியும். அல்லது இந்த நூல்களின் பாதிப்பு அவரையும் எழுதத் தூண்டியிருகிறது.
அப்பிரகாம் ஜோசப் இதிலிருந்து வேறுபாடும் இடம் அவர் ஒரு தமிழர் என்பதும், அதனால் ஆங்கிலேய எழுத்தாளர்கள் பதிவு செய்யாத இந்தியத் தமிழர் தரப்பு விபரங்களையும் அவர் உள்ளடக்கியிருக்கிறார் என்பது தான். அதுவும் அவர் அன்றைய இந்தியத் தமிழ் மத்தியில் கதை சொல்லி வடிவமாக இருந்த கும்மி வடிவத்தை அவர் தெரிவு செய்கிறார். அதன் பொழிப்புரையை அதே நூலில் ஆங்கிலத்திலும் வழங்குகிறார்.
ஆபிரகாம் ஜோசப்
இந்தக் காலப்பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் பெருவாரியாக இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு திரும்பத் தொடங்கியிருந்தார்கள். இந்தச் சூழலில் தான் கோப்பிப் பயிற்செய்கைக்கான வழிகாட்டல் கைநூலாக கும்மி வடிவத்தில் இதனை எழுதி முடித்திருக்கிறார் ஆபிரகாம் ஜோசப்.
ஆபிரகாம் ஜோசப் ஒரு இந்தியத் தமிழர் என்கிற வகையிலும், தமிழில் எழுதப்பட்டதாலும்இதனை நாம் மலையகத்தின் முதலாவது நூல் எனக் குறிப்பிடுவது மிகவும் சரியானதே.
நூலின் முகப்பில் ஆபிரகாம் ஜோசப்‘Conductor, Central Province, Ceylon’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தில் கோப்பித் தோட்டத்தில் கண்டக்டராக இருந்திருக்கிறார் என்கிற குறிப்பு இந்த நூலின் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ள உதவுகின்ற முக்கிய சான்றாகும். கோப்பித் தோட்ட மெனேஜர்களின் உதவியாளர்களாகவும், ஓவர்சீயர்களாகவும் இந்த கண்டக்டர்கள் பணிபுரிந்துள்ள னர். அதுமட்டுமன்றி கண்காணிகளுக்கு மேற்பட்ட நிலையில் இந்த கண்டக்டர்கள் பதவிநிலை இருந்துள்ளது.
அன்றைய சூழலில் மத்திய மலைநாட்டுப் பகுதியில் அச்சுக்கூடங்கள் இராத நிலையில் மிஷனரிமார்களின் அச்சகங்கள் இயங்கிய கொழும்பிலோ, யாழ்ப்பாணத்திலேயோ அச்சடிக்க வேண்டியிருந்தது. இந்த நூல் யாழ்ப்பாணத்தில் Strong and Asbury Printers இல் அச்சடிக்கப்பட்டிருகிறது. இந்த அச்சகத்தில் தான் இலங்கையின் முதல் தமிழ் பத்திரிகையான உதயதாரகை, பின்னர் கிரிஸ்தோபகாரி போன்றன பதிப்பிக்கப்பட்டது.
ஆபிரகாம் ஜோசப் பற்றி மேலதிக தகவல்களை ஆராய்கிறபோது “A vocabulary English, Burmese, Hindustani & Tamil In English characters. With the Burmese also in the native letters” என்கிற நூலின் இரு ஆசிரியர்களில் ஒருவராக Abraham Joseph என்கிற பெயரும் கிடைக்கிறது. இந்த நூலும் கிட்டத்தட்ட இதே காலத்தில் அதாவது 1877 இல் வெளிவந்திருப்பதாலும், தமிழைப் பற்றி எழுதியிருப்பதாலும் இது அவராக இருக்க வாய்ப்புண்டு என்றும் சந்தேகிக்க முடிகிறது. இதைவிட The Planters’ Colloquial Tamil Guide in Tamil and Roman Characters, Or, The Art of Speaking, Reading and Writing Tamil Without a Teacher and Tamil Characters நூலும் ஆபிரகாம் ஜோசப் அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. இது வெளியிடப்பட்ட ஆண்டும் 1872 ஆகும். இலங்கை பற்றியும், தோட்டத் தமிழ் மக்களின் மொழி சார்ந்தும் எழுதியிருப்பதால் நிச்சயம் அவரின் தமிழ், ஆங்கிய புலமையோடு தோட்டப்புற விடயதானங்களும் இணைவதால் இந்த நூல்கள் ஆபிரகாம் ஜோசப்பால் எழுதப்பட்டிருப்பதாகக் கொள்ள நிறைய வாய்ப்புகள் உண்டு. அப்படிப் பார்க்கும் போது அவர் ஒரு அறிஞராக இருந்திருக்கிறார். மொழி வல்லமை மட்டுமன்றி தமிழ் – ஆங்கில இலக்கிய ஆளுமை மிக்கவராகவும் இருந்திருப்பதையும் கவனிக்கலாம். இல்லையென்றால் இப்படிப்பட்ட கும்மி ஒன்றை படைக்க முடியுமா? அதுவும் கும்மியை அதே தரத்துடன் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துத் தந்திருக்க முடியுமா?ஆங்கிலத்திலும் தமிழிலும் இப்படிப்பட்ட மொழிமாற்று உள்ளடக்கத்தைக் கொண்ட இலக்கியத்துக்கு இதுவே முன்னோடி என்றும் கூற முடியும்.
அதே வேளை கோப்பிக் கிருஷிக் கும்மி மலையகத்தின் துயரப் பதிவு அல்ல. ஆபிரகாம் ஜோசப்பின் நோக்கமும் மலையக மக்களின் துயரைப் பதிவு செய்வதல்ல. அவர் “இந்தியத் தொழிலாளர்கள் தமது தாய் நாட்டில் இருப்பதை விடவும் கோப்பித் தோட்டங்களில் எவ்வளவு சலுகைகளை அனுபவிக்கிறார்கள்” என்று The Overland Ceylon Observer (13.03.1969) பத்திரிகையில் எழுதியதைப் பார்க்கும் போதுஅவர் இந்தியத் தொழிலாளர்கள் சொந்த நாட்டில் இதைவிட துயரங்களை அனுபவித்தமையையும் பதிவு செய்திருக்கிறார் என்றும் கொள்ள முடியும். ஆனால் அடுத்ததாக அவர் “ஆகவே… தமது எசமானர்களுக்கு நன்றி விசுவாசம் கொண்டவர்களாய், நல்லபணிவோடு நடந்துகொள வேண்டும்” என்றுக் கூறுகையில் அவர் தனது எசமான விசுவாசத்தை உறுதி செய்யவே விரும்புவதை காண முடிகிறது. ஆங்கிலேயே துரைத்தனத்தையும், நலன்களையும் பாதுகாப்பதே இந்த நூலின் அடிப்படை நோக்கமாகக் கொண்டாலும் கூட இது கோப்பிப் பயிர்ச்செய்கை பற்றிய கைநூல் தான். கோப்பிப் பயிர்ச்செய்கை முறைகளை கும்மிப் பாடலாக விபரித்துச் செல்வது இந்நூலின் முக்கிய இலக்கியச் சிறப்பியல்பு எனலாம்.
அதுபோல மலையகத்தின் சிறுதெய்வ வழிபாடுகளில்ஒன்றான முனியாண்டி வழிபாட்டை கேலி செய்வதையும் காண முடிகிறது. துரைத்தனத்தினதும், வெள்ளைத்தனத்தி னதும், காலனித்துவத்தினதும், ஆங்கிலே யத்தினதும், ஆண்டான்தனத்தினதும் கைக்கூலியாகவே ஆபிரகாம் ஜோசப் இயங்கியிருக்கிறார் என்பதையும் இந்த நூலின் மூலம் இனங்காண முடியும்.
இதனாலேயே சிலர் இது மலையக மக்களின் முதலாவது நூல் என்கிற அந்தஸ்தை கொடுக்க மறுப்பதையும் காண முடிகிறது. ஆனால் இந்த காரணங்களால் ஒரு வரலாற்று பதிவை மறைத்துவிட முடியாது. மறைக்கவும் கூடாது. அதன் மீது விமர்சனங்களை வேண்டுமென்றால் பின்னர் வைத்துக் கொள்ளலாம். காய்தல் உவத்தலின்றி இது போன்ற ஆவணங்களை அணுகினால் மட்டுமே நம்மால் சரியானதொரு வரலாற்றை மீட்டெடுக்க முடியும். “இந்த நூலின் மூலம் கோப்பித் தோட்டங்களில் வேலை பார்க்க எதிர்காலத்தில் இங்கு வரவிருக்கும் தொழிலாளர்களும் இதன் மூலம் இலங்கைக்கு வர மிகவும் பிரியப்படுவர்” என்று அவர் குறிப்பிடுவதைப் பார்க்கும் போது தொழிலாளர்களின் பற்றாக்குறையைசரி செய்வதற்கான முயற்சியில் இந்த நூலின் பாத்திரத்தின் மூலம் எதிர்பார்ப்பதாகவும் கருத முடியும்.
கூலிகளுக்கு வாசித்து காட்டுவதற்காக ஒவ்வொரு கண்டக்டருக்கும் ஒவ்வொரு கங்காணிக்கும் குறைந்தது இந்நூலின் ஒரு பிரதியையாவது தோட்ட முதலாளிகள் வழங்கி உதவ வேண்டும் என்றும் கோருகிறார். ஆள் திரட்டும் பிரச்சாரக் கருவியாக இந்த நூலை உபயோகித்திருக்கிறார் என்று இதன் மூலம் தெளிவாகிறது. கோப்பி செய்கை பலவீனப்பட்டு வேலை இன்றி தாயகத்துக்கு திரும்பும் காலத்தில் இந்த கோரிக்கை எழுந்ததையும் வைத்தே இதனை நோக்க வேண்டும்.
கும்மிப் பாட்டு
தமிழ்ப பண்பாட்டில் நெடுங்காலமாக நாட்டுப்புறக் கலை மரபின் அங்கமாக கும்மி பாடுவது இருந்து வருகிறது. பல பெண்கள் இணைந்து இன்ப உணர்வைப் புலப்படுத்தும் பாங்கில் கைகொட்டிக் களித்து பல பொருள் குறித்து வரும் கதைப் பாடல்களைச் சமய சமூக விழாக்களில் சுவை ததும்ப பாடியும், கலை சிறக்க ஆடியும் பிறரை மகிழ்விப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த வடிவம் இது.
கும்மியடித்தல், கொம்மி கொட்டுதல், கொப்பி கொட்டுதல் எனப் பல பதங்களில் இது அழைக்கப்படுகிறது. அகநானூறு, புறநானூறு போன்ற சங்க இலக்கிய நூல்களிலும் கும்மி பற்றிய விபரங்கள் கிடைக்கின்றன.
“புரங்கொம்மை கொட்டினார் இல்” என்கிறது பதினெண் கீழ்கணக்கில் உள்ள ஒரு பழமொழி. கொம்மை என்பது “கைகளை குவித்துக் கொட்டுதல்” என்று பொருள்.
இவ்வாறு பண்டைய தமிழ் இலக்கிய நூல்கள் பலவற்றில் கும்மியின் இடம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கும்மியை தனது கதை சொல்லி வடிவமாக தெரிவு செய்திருக்கிறார் என்றால் அன்றும் பிரபல வடிவமாக கும்மி இருந்திருக்கிறது என்று கருத முடிகிறது.
பிற்காலத்தில் மெதுவாக அது வழக்கொழிந்து அருகிவிட்டதை காண முடிகிறது.
என். சரவணன்