- இலங்கையில் அவர்களுக்கான வசதிகள் எவை?
- புதிய அரசிடம் கோரும் மாற்றுத் திறனாளிகள்
யுத்தத்தால் இரு கால்களையும் இழந்த நான், ஒவ்வொரு முறையும் பெரும் போராட்டத்துக்கு மத்தியிலேயே தேர்தலில் வாக்களித்துள்ளேன். நடைபெற்று முடிந்த இரண்டு தேர்தல்களிலும் பிரதான வீதியிலிருந்து எனது வாக்குச் சாவடிக்கு செல்வதே பெரும் போராட்டமாகவிருந்தது. 50 மீற்றர் கொண்ட முற்றிலும் மணல் தரை அது. என்னால் தனியாக சக்கரநாற்காலியை அதில் தள்ளிக் கொண்டு செல்ல முடியவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் இருவர் என்னை பின்னால் தள்ளிக் கொண்டு வந்தார்கள். பாராளுமன்றத் தேர்தலில் அப்படியொரு உதவியும் கிடைக்கவில்லை. நான் சக்கர நாற்காலியிலிருந்து இறங்கி 50 மீற்றர் மணல் தரையில் அரக்கிக் கொண்டே வாக்குச்சாவடியை சென்றடைந்தேன்’ என்கிறார் வட்டுவாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான சூசைமுத்து.
இலங்கை அரசியலமைப்பு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமைக்கான உத்தரவாதத்தை வழங்கியுள்ள போதிலும் சூசைமுத்துவை போன்ற குறைபாடு உடையவர்கள், தேர்தலில் பங்குபற்றுவதில் அடிக்கடி இத்தகைய தடைகளை எதிர்கொள்கின்றனர்.
இதனால் தமது உரிமையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.
இதற்கான முக்கிய காரணமாக இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் மாற்றுத்திறனாளிகள், விசேட தேவையுடையவர்களுக்கான வாக்களிப்பு வசதிகள் சரியான முறையில் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இலங்கை மக்கள் தொகையில் 5 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 8.7% பேர் ஏதேனும் ஒரு வகையில் குறைபாடுகளுடன் வாழ்கின்றனர். மேலும் இவர்களில் 18–60 வயதுக்குட்பட்ட சுமார் 300,000 பேர் வரை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
(2012 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு)
சக்கர நாற்காலியில் செல்லும் ஊனமுற்றவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான அமைப்பின் (a disabled person in a wheelchair and a doughty campaigner for the rights of the disabled) 2018 தகவல்களின் படி இலங்கையில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்ற 14.5 மில்லியன் வாக்காளர்களில் இரண்டு மில்லியன் பேர் மாற்றுத்திறனாளிகள் என தெரிவிக்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி தெற்காசியாவில் அதிகளவிலான வயதானவர்களின் மக்கள் தொகையை இலங்கை கொண்டுள்ளதுடன் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மக்கள் தொகையில் 17% மாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை 1996 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளது. அதுமட்டுமின்றி ஐக்கிய நாடுகள் சபையின் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரகடனத்திலும் கைச்சாத்திட்டுள்ளது. இதுதவிர பல்வேறு துறைகளில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான செயலகமும் நிறுவப்பட்டுள்ளது.
எனினும் நடைமுறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இலங்கையின் வடமாகாணத்தை எடுத்துக் கொண்டால் 30வருடகால உள்நாட்டு போரினால் அதிகளவானோர் உயிரிழந்ததுடன் பலர் மாற்றுத்திறனாளிகள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இவர்கள் இன்றும் போரின் வலிகளை சுமந்தவர்களாகவே வாழ்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு அறக்கட்டளையின் தகவல்களின் படி (The Foundation for the Rehabilitation of the Disabled estimates) போரினால் வட மாகாணத்தில் 20,000 பேர் மாற்றுத்திறனாளிகள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் வாக்குரிமையை பெற்றிருந்தாலும், வாக்களிப்பு நிலையங்களில் தடை இன்றி செல்வதற்குரிய வசதிகள் செய்யப்படுவதில்லையென தெரிவிக்கின்றனர்.
‘எனது பெயர் அம்பிகைப்பாலன் நான் போலியோவினால் பாதிக்கப்பட்டுள்ளேன். எல்லா தேர்தலிலும் தவறாமல் வாக்களித்துள்ளேன். எனது வீட்டிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. வாக்குச்சாவடிக்குள் நான் சென்று வருவதற்கு போதிய இடவசதிகள் இருந்தன. அதிகாரிகள் மிகவும் ஒத்துழைப்புடன் நடந்துகொண்டார்கள்.
எனினும் எனது வாக்குச்சாவடியை சென்றடைவதில் சிரமங்களை எதிர்கொண்டேன் ‘ என அவர் தெரிவித்தார்.
யுத்தத்தால் தனது இரு கண்களையும் இழந்த புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ராஜ்குமார் தனது மனைவியின் உதவியுடன் தேர்தல்களில் வாக்களித்து வருவதாக தெரிவிக்கின்றார்.
‘யுத்தம் முடிவடைந்து பல தேர்தல்களில் வாக்களித்துள்ளேன். கிராம சேவகரின் கடிதம், மருத்துவ அறிக்கை எதையும் எடுத்துச் செல்லவில்லை. நானும் மனைவியும் மக்களோடு மக்களாய் வரிசையில் காத்திருந்து சென்று வாக்குச் சீட்டை பெறுவோம். பின்னர் விரும்பும் வேட்பாளருக்கு மனைவி எனது வாக்கை செலுத்துவார் என அவர் தெரிவித்தார்.
இதுதவிர யுத்தம், விபத்துக்கள் காரணமாக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக சிகிச்சைகளை பெற்றுவருவோர் தமது வாக்குப்பதிவு உள்ள சொந்த ஊர்களுக்கு சென்றுவருவதில் காணப்படும் சிரமம் காரணமாக பலவருடங்களாக வாக்களிப்பை தவிர்த்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு மாங்குளம் உயிரிழை அமைப்பில் சிகிச்சை பெற்றுவரும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஸ்ரீவதி 40 வயது தெரிவிக்கையில்,
‘நான் சவூதிக்கு பணிப்பெண்ணாக சென்று அங்கு ஏற்பட்ட விபத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது கணவர், குடும்பத்தினர் என்னை முற்றாக கைவிட்டமையால் இங்கு தங்கி சிகிச்சை பெற்றுவருகின்றேன். எனக்கு நிரந்தரமாக ஓரிடத்தில் வாக்குப் பதிவு இல்லை. அதனால் வாக்களிப்பை தவிர்த்து வருகின்றேன். எனவே எதிர்வரும் தேர்தல்களில் நாங்கள் தங்கியிருக்கும் இடத்திலேயே வாக்களிப்பதற்கான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பில் உயிரிழை அமைப்பின் தலைவர் செல்வரட்ணம் ஆனந்தராசா தெரிவிக்கையில்,
எமது அமைப்பில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் உட்பட 10 பேர் வரை தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பாராமரிப்பதற்கு யாரும் இல்லாத காரணத்தால் இங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். இடுப்புக்கு கீழ் பகுதி செயலிழந்தோர், கழுத்துக்குக் கீழே செயலிழந்தோர் என பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு பலவருடங்களாக வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு தேர்தல் காலங்களில் அனுப்புவதில் நமது அமைப்பு பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதால்
தாங்கள் இருக்கும் இடத்திலேயே வாக்களிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார். இவ்வாறு இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்கும் உரிமைக்காக போராட வேண்டிய நிலையில் உள்ளனர்.
இலங்கையில் 2011 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் இயற்றப்பட்டது, இதன் மூலம் எந்தவொரு உடல் குறைபாடு காரணமாக வாக்குச் சீட்டில் புள்ளடி இட முடியாத வாக்காளர்கள்:
(அவர் சார்பாக வாக்களிக்க மற்றொரு நபர் வாக்களிக்கச் செல்ல அனுமதிப்பது அல்லது
அதற்கு வாக்களிப்பு நிலைய பிரதான அதிகாரியின் உதவியைப் பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாக்காளர்கள் கிராம அலுவலரால் வழங்கப்பட்ட சான்றிதழ் அல்லது மருத்துவ அலுவலரால் சான்றளிக்கப்பட்ட கடிதத்தை கொண்டுவரவேண்டும்.
வாக்காளரின் அடையாளத்தை முறையாக நிறுவிய பிறகு வாக்காளரின் மூத்த தலைமை அதிகாரி மற்றும் தேர்தல் பணியாளர்களின் மற்றுமொரு உறுப்பினர் முன்பாகவுள்ள அறையில் வாக்களிக்கலாம். பார்வையற்ற வாக்காளர் ஒருவர் உதவியாளர் இல்லாத போது மூத்த தலைமை அதிகாரி மற்றொரு தலைமை அதிகாரமுள்ள அதிகாரி ஊடாக வாக்களிக்கலாம் போன்ற நடைமுறைகளும் காணப்படுகின்றன.
எனினும் இத்தகைய நடைமுறைகள் எந்தவகையிலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதை ஊக்குவிக்கவில்லையென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதுதொடர்பில் தகவலறியும் சட்டத்தின் ஊடாக தேர்தல் ஆணைக்குழுவிடம் வினவிய போது,
வாக்காளர் பட்டியலைத் திருத்தும்போது, வாக்குச் சாவடியில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான வசதிகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு, 2019 முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான விபரங்கள் மாவட்ட செயலகத்தால் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்ட படிவத்தின் மூலம் பெறப்பட்டதுடன் எந்த ஒரு நபருக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் https:e/services.elections.gov.lk/Auth/Login.aspx என்ற இணைய வழியூடாக கணினி மூலம் தேவையான வசதிகளை நிர்வகிப்பது எளிது. அதற்கமைய வாக்களிப்பு நிலையத்தில் சக்கரநாற்காலியை பயன்படுத்துதல்,
வாக்குப் பெட்டியை தமது உயரத்துக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளுதல், பிரெயில் (Braille) எழுத்துக்களை பெற்றுக் கொள்ளுதல், பிரெயில் (Braille) இல்லாத வேறு உபகரணங்களை பெற்றுக் கொள்ளுதல், எழுத்துக்களை பெரிதாக்கி பயன்படுத்துவதற்கான உபகரணங்கள், வாக்களிப்பதற்கான விளக்கங்களை வழங்குதல், மொழிப்பெயர்ப்பு வசதிகள், வாக்கை செலுத்துவதற்கான உதவிகள், வாக்களிப்பு நிலையத்துக்கு உதவியாளருடன் வருதல் மற்றும் வாக்களிப்பு நிலையத்துக்கான போக்குவரத்து போன்ற வசதிகளை பெற்றுக் கொள்ள முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் பல நாடுகள் மாற்றுத்திறனாளிகளின் வாக்குரிமையை பாதுகாப்பதற்கு முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்தியா
இந்தியாவில் 2016 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் மாற்றுத்திறனாளிகளை தேர்தல் பணியில் தீவிரமாக இணைக்க நடவடிக்கை எடுத்தது.
சட்டத்தின் பிரிவு 11, மாற்றுத்திறனாளிகள் அணுகல் வசதிகளுடன் வாக்களிக்கும் உரிமையை வெளிப்படையாக அங்கீகரிக்கிறது. அதன்படி, வாக்குச் சாவடிகள், வாக்களிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் ஆவணங்களை மாற்றுத்திறனாளிகள் புரிந்துணர்வுடன் பயன்படுத்துவதை உறுதி செய்வது இந்திய தேசிய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையங்களின் பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள் , வாக்குச்சாவடிகளுக்கு வர முடியாத நோயாளிகள் மற்றும் வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு உதவும் நோக்கத்துடன் மொபைல் மின்-வாக்களிப்பும் ஒருசில மாநிலங்களில் அமுலில் உள்ளது.
ஐக்கிய அமெரிக்கா
அமெரிக்காவில் மாற்றுத்திறனாளிகளின் வாக்களிக்கும் அடிப்படை உரிமையைப் பாதுகாக்க முக்கியமான கூட்டாட்சி சிவில் உரிமைச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் சட்டம் (ADA), 1984 ஆம் ஆண்டின் முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கான வாக்களிக்கும் அணுகல் சட்டம் (VAEHA), 1993 இன் தேசிய வாக்காளர் பதிவுச் சட்டம் (NVRA) போன்றவற்றை குறிப்பிடலாம். தேர்தல் தினம் அல்லது முற்கூட்டியே தேர்தல் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இதற்கான பயிற்சி பெறுவார்கள், அதனால் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுடன் சரியான முறையில் தொடர்புக் கொள்ள முடியும்.
அவுஸ்திரேலியா
வாக்குச் சாவடியை அணுகுவதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளியொருவருக்கு காரை விட்டு இறங்க முடியாவிட்டால் வாக்குச் சீட்டுகளைக் அதிகாரிகள் கொண்டு வரலாம்.
அதுமட்டுமின்றி இயலாமை அல்லது நடமாடும் கட்டுப்பாடுகள் உள்ள வாக்காளர்கள் பொது அஞ்சல் வாக்காளராகவும் தகுதி பெறலாம். பார்வையற்ற அல்லது பார்வைக் குறைபாடு உள்ள வாக்காளர்கள் தங்கள் சொந்த வீடுகள் உட்பட எந்த இடத்திலிருந்தும் தொலைபேசி வழியாக இரகசியமாக வாக்களிக்கலாம்.
கனடா
கனடாவில் தேர்தல் முறை அதிகளவில் மொபைல் வாக்குச் சாவடிகளில் கவனத்தை குவித்துள்ளது. இதில் வாக்காளர்கள் வசிக்கும் இடத்திலிருந்து வாக்களிக்கலாம்.
பொதுவாக நீண்ட கால பராமரிப்பு வசதி, மருத்துவமனை, முதியோர் இல்லம், தொலைதூர தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களில் வசிக்கும் வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை வழங்க இம்முறை பயன்படுத்தப்படுகின்றது.
ப்ராக்ஸி வாக்களிப்பு – ஒருவரின் வாக்களிக்கும் உரிமையை மற்றொரு குறிப்பிட்ட நபருக்கு வழங்குதல் – இது ஒரு சில நாடுகளில் பயன்படுத்தப்படும் மற்றொரு முறையாகும்,
பார்வையற்ற வாக்காளர்களுக்கு டெம்ப்ளேட் வாக்குச் சீட்டுகளை வழங்குதல் போன்ற விசேட நடைமுறைகள் உள்ளன.
பிலிப்பைன்ஸ் தனது முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தலை 2016 ஆம் ஆண்டு நடாத்தியது.
அதைபோல சியராலியோன், நைஜீரியா போன்ற நாடுகளும் மாற்றுத்திறனாளிகளின் வாக்குரிமையை பாதுகாப்பதற்கு முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை மறுத்த நாடுகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.
எது எவ்வாறாயினும் மாற்றுத்திறனாளிகளின் வாக்குரிமையை பாதுகாக்க புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகள் தொடர்பில் அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும்.
வசந்தா அருள்ரட்ணம்