உலகப் பெருந்தொற்றான கொவிட் வைரஸ் முழு உலகையே ஆட்டிப்படைத்து, கோடிக்கணக்கான உயிர்களையும் பலிகொண்டு ஐந்து வருடகாலம் கடந்துள்ள இன்றைய நிலையில், மற்றொரு கொடிய வைரஸ் குறித்த அச்சம் உலகில் தற்போது தலைதூக்கியுள்ளது.
ஐந்து வருட காலத்துக்கு முன்னர் கொவிட் வைரஸ் முதன் முதலில் உருவாகிய இடம் சீனா என்பதுதான் ஆய்வுகள் கூறும் தகவல் ஆகும். அவ்வாறிருக்கையில், தற்போது மற்றொரு கொடிய வைரஸ் கிருமியும் சீனாவிலேயே கண்டறியப்பட்டிருக்கின்றது.
சீனாவில் தற்போது ஹியூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) என்ற புதிய வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்ட ஏராளமானோர் சீனாவிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அந்நாட்டிலுள்ள சில வைத்தியசாலைகள் நோயாளிகளால் நிரம்பி வழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களே HMPV என்ற இந்த புதிய வைரஸினால் கடுமையான பாதிப்புக்குள்ளாகலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வைரஸ் பாதிப்பு குறித்து உலகநாடுகள் உஷாரடைந்துள்ளன. இன்றைய விஞ்ஞான யுகத்தில் உலகம் என்பது ஒரு குடும்பம் போன்று சுருங்கி விட்டதால், இவ்வாறான கொடிய நோய்க்கிருமிகள் உலகநாடுகளுக்குப் பரவுவது சாதாரண விடயம். இந்நிலையில் இலங்கையும் உஷாரடைந்திருக்கின்றது.
சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக இலங்கையின் தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்களை அறிந்து கொண்டுள்ளதாகவும், உரிய ஆய்வின் பின்னர் அதுகுறித்த தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கவுள்ளதாகவும் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்று ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து உலகம் இன்னுமே முற்றாக மீளாத நிலையில், மற்றொரு வைரஸ் தலைதூக்கியிருக்கும் செய்தியானது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தவே செய்யும்.
HMPV வைரஸ் கொரோனா தொற்று போன்ற அறிகுறிகளைக் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய நிலைவரம் தொடர்பில் சீனாவில் இருந்து இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. எவ்வாறாயினும், குறித்த வைரஸ் தொற்று தொடர்பில் சீன மருத்துவர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதுஒருபுறமிருக்க சீனாவில் இன்புளுவன்சா வைரஸும் (Influenza virus) பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெறுவதில் விஞ்ஞானபூர்வமான அனுபவங்களைப் பெற்றுள்ள மக்கள், சீனாவில் தற்போது தோன்றியிருக்கும் வைரஸிலிருந்து பாதுகாப்புப் பெறுவதிலும் மிகுந்த அவதானம் பேணுவர் என்பதால், உலகம் சற்று நிம்மதியடையலாம். ஆனாலும் இது குறித்து அலட்சியமாயிருத்தல் கூடாது.