இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிக் கிரியை நேற்று புதுடில்லியிலுள்ள நிகம்போத் காட் (Nigambodh Ghat) பொது மயானத்தில் நடைபெற்றது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த (26) உயிரிழந்தார். முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை ( 26) இரவு காலமானார்.
டில்லியிலுள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட மன்மோகன் சிங்கின் உடல், நேற்று (28) காலை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது.
அங்கு மன்மோகன் சிங் உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், சித்தராமையா, டி.கே. சிவகுமார், பூபேஷ் பாகெல், சுக்விந்தர் சிங் உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர். மன்மோகன் சிங்கின் மனைவி, மகளும் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து காலை 10 மணியளவில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலிருந்து மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் ஆரம்பமானது. மன்மோகன் சிங் உடல் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தில் ராகுல் காந்தி, ரேவந்த் ரெட்டி, சித்தராமையா உள்ளிட்டோர் இருந்தனர்.
யமுனை நதிக்கரையிலுள்ள நிகம்போத் காட் மயானத்தில் நண்பகல் 12 மணிக்கு வந்த மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினா். பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கெல் வாங்சக், மன்மோகன் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
முழு ராணுவ மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. மன்மோகன் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடி, அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து அவரது உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இறுதியாக 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் உடல் தகனம்செய்யப்பட்டது.