வழக்கமான வெற்றி, தோல்வி என்ற ஏற்றத்தாழ்வுகளுடன் 2024 ஆம் ஆண்டு நிறைவடையப்போகிறது. இலங்கை விளையாட்டுக்கும் இந்தத் தத்துவம் பொருந்தும். தடகளத்தில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் ஏகத்துக்கு இடம்பெற்றாலும் சர்வதேச மட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் சாதிக்கமுடியவில்லை. கால்பந்தில் புதிய பயிற்சியாளர், புதிய திட்டங்களுடன் சில வெற்றிகளைப் பெற முடிந்தது. இலங்கை கிரிக்கெட்டின் ஆடவர் மற்றும் மகளிர் இரண்டிலும் நல்ல சமிக்ஞைகள் தெரிந்த ஆண்டாகக் குறிப்பிடலாம்.
தடகளம்
2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் ஆண்டு என்பதால் அதனை மையப்படுத்தியே அனைத்தையும் பார்க்க வேண்டும். கடந்த ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற பல இலங்கை வீர, விராங்கனைகள் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டபோதும் மொத்தம் ஆறு வீர, வீராங்களைகளுக்கே அங்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது.
என்றாலும் ஒருவர் கூட தமது போட்டி நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்குக் கூட முன்னேறவில்லை. இளம் மத்தியதூர ஓட்ட வீராங்கனை தரூஷி கருணாரத்ன பற்றி பெரிதாக எதிர்பார்ப்பு இருந்தபோதும் அவர் ஆரம்ப சுற்றிலேயே கடைசி இடத்தையே பெற முடிந்தது.
ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற அருண தர்ஷன ஆரம்ப சுற்றில் வெற்றியீட்டி அரையிறுதிக்கு முன்னேறினாலும் அரையிறுதியில் விதி மீறிய ஓட்டத்தால் தகுதி இழப்பு செய்யப்பட்டார். பெண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்கேற்ற டில்ஹானி லேகம்கேவும் தனது போட்டி நிகழ்ச்சியில் கடைசி இடத்தையே பிடித்தார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு பூப்பந்து போட்டியில் பங்கேற்ற விரேன் நெத்தசிங்கவாகட்டும், நீச்சல் போட்டிகளில் பங்கேற்ற கைல் அபேசிங்க மற்றும் கங்கா செனவிரத்ன ஆகியோரின் பங்கேற்புக் கூட பெரிய விடயம் என்ற அளவிலேயெ ஆறுதல்பட வேண்டி இருந்தது. ஒட்டுமொத்தத்தில் இலங்கை வீர, வீராங்கனை ஒலிம்பிக் பதக்கம் ஒன்றை நெருங்கும் அளவுக்குக் கூட இன்னும் முன்னேறவில்லை என்பதையே இது காட்டியது.
ஒலிம்பிக்கிற்கு அப்பால் இலங்கை வீராங்கனைகள் சர்வதேச மட்டத்தில் குறிப்பிடும்படியாக சில பதக்கங்களை வென்றார்கள். ஒலிம்பிக் தகுதி பெற தவறிய இலங்கையின் அதிவேக வீரரான யுபுன் அபேசிங்க ஜெர்மனியில் நடந்த அன்ஹால்ட் தடகள சம்பியன்சிப் போட்டியின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.16 விநாடிகளில் முடித்து தங்கம் வென்றார்.
இந்த ஆண்டு உபாதைகளால் அவதியுற்ற யுபுன் ஒலிம்பிக்கில் தகுதி பெறுவதற்கான தகுதி மட்டத்தை அடைய கடைசிவரை போராடினாலும் அது கைவிட்டுப்போனது.
அதேபோன்று கடந்த ஜூனில் நடந்த தாய்வான் தடகளப் போட்டியில் பங்கேற்றிருந்த அருண தர்ஷன ஆண்களுக்கான 400 மீற்றரில் தங்கப் பதக்கத்தை வென்றதோடு பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் தரூஷி கருணாரத்ன தங்கம் வென்றார்.
இதே மாதத்தில் நடந்த ஆசிய எறிதல் சம்பியன்சிப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ரமேஷ் தரங்க 85.45 மீற்றர் தூரம் எறிந்து தங்கம் வென்றிருந்தார்.
என்றாலும் கோடைகால ஒலிம்பிக் போட்டி முடிந்த பின்னர் நடைபெற்ற விசேட தேவையுடையவர்களுக்கான பாராலிம்பிக் போட்டியில் இலங்கையால் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வெல்ல முடிந்தது. துலான் கொடிதுவக்கு ஈட்டி எறிதலில் அந்தப் பதக்கத்தை வென்றார்.
எவ்வாறாயினும் கடந்த செப்டெம்பரில் நடந்த 20 வயதுக்கு உட்பட்ட தெற்காசிய தடகள சம்பியன்சிப் போட்டியில் இலங்கை தடகள வீர, வீராங்கனைகளால் மூன்று தங்கம் உட்பட மொத்தம் ஒன்பது பதக்கங்களை வெல்ல முடிந்தது எதிர்காலத்திற்கான நற்செய்தியாக இருக்கட்டும்.
கால்பந்து
இந்த ஆண்டில் இலங்கை கால்பந்து அணி மொத்தமாக 10 போட்டிகளில் ஆடியதோடு அதில் மூன்றில் வென்று, நான்கில் தோற்றதோடு மூன்று போட்டிகளை சமநிலை செய்ய முடிந்தது. இதில் யெமன், கம்போடியா மற்றும் பூட்டானுக்கு எதிரான போட்டிகளையே இலங்கையால் வெல்ல முடிந்தது. இந்த மூன்று அணிகளும் பிஃபா தரவரிசையில் இலங்கையை விட முன்னணியில் இருக்கும் அணிகள் என்பதால் இந்த வெற்றிகள் முக்கியமானவை.
பிஃபா தடை, நிர்வாகச் சிக்கல்களுக்கு பின் மீண்டு வந்திருக்கும் இலங்கை கால்பந்து அணிக்கு 2024 ஆம் ஆண்டு முன்னேற்றகரமாக வருடமாக இருந்தது. குறிப்பாக குவைட் நாட்டைச் சேர்ந்த அப்துல்லா அல் முதைரி புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பது நல்ல செய்தியாக பார்க்கலாம்.
இலங்கை அணி தற்போது பிஃபா தரவரிசையில் 200ஆவது இடத்தில் இருக்கிறது. எனவே அது தனது திறமையை இன்னும் வலுவாக உலகுக்கு காட்ட வேண்டிய கட்டாயம் அதிகம் உள்ளது. இதில் இலங்கை பூர்வீகத்தைக் கொண்ட வெளிநாட்டு வீரர்களுக்கு இலங்கை அணியில் அதிக இடம் அளிக்கப்பட்டிருப்பது குறுகிய காலத்தில் சாதகமான சூழலை ஏற்படுத்தி இருக்கின்றபோதும் நீண்ட கால அடிப்படையில் அது எவ்வாறான தாக்கத்தை செலுத்தும் என்பது தெரியவில்லை. எனவே 2024 இல் இலங்கை பெற்ற வெற்றிகளின் செயற்கைத்தனம் கலந்திருப்பதான ஒரு பார்வையை களைவது எதிர்காலத்திற்கு நல்லது.
கிரிக்கெட்
பல தோல்விகள், பின்னடைவுகளுக்கு பின்னர் வெற்றிகள் மற்றும் முன்னேற்றங்களை தந்த ஆண்டாக இந்த ஆண்டை குறிப்பிடலாம். புதிய பயிற்சியாளராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டது அதனையொட்டி இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தலைவராக சரித் அசலங்கவும் டெஸ்ட் அணித் தலைவராக தனஞ்சய டி சில்வாவும் நியமிக்கப்பட்டது இலங்கை அணிக்கு புதிய எதிர்பார்ப்புகளை தந்திருக்கிறது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்த ஆண்டில் ஆடிய 10 டெஸ்ட் போட்டிகளில் 6 இல் வென்று 4 இல் தோற்றது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2–0 என்று முழுமையாக வென்றது உச்சம் என்பதோடு கடைசியாக தென்னாபிரிக்காவிடம் டெஸ்ட் தொடரை 0–2 என இழந்தது பெரும் வீழ்ச்சியாக இருந்தது. இதனால் உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இலங்கையின் வாய்ப்பு கைநழுவிப் போகும் நிலை உள்ளது.
அதேபோன்று இலங்கை அணி இந்த ஆண்டில் ஆடிய 18 ஒருநாள் சர்வதேச போட்டிளில் 12 இல் வென்று மூன்று போட்டிகளில் தோற்றது. அதிலும் இந்தியாவுக்கு எதிராக கடந்த ஓகஸ்டில் நடந்த ஒருநாள் தொடரை இலங்கை அணி 2–0 என வென்றது 27 ஆண்டுகளின் பின் இந்திய அணியை ஒருநாள் தொடர் ஒன்றில் வீழ்த்திய முதல் சந்தர்ப்பமாக இருந்தது.
டி20 கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் இலங்கை இதுவரை ஆடிய 20 போட்டிகளில் 10 இல் வென்று ஒன்பது போட்டிகளில் தோற்றதோடு ஓர் ஆட்டம் டையில் முடிந்தது. என்றாலும் இந்த ஆண்டு ஜூனில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடந்த டி20 உலகக் கிண்ண போட்டிகளில் இலங்கை அணி ஆரம்ப சுற்றுடனேயே வெளியேறியது பெருத்த ஏமாற்றம்.
மகளிர் கிரிக்கெட்டும் இந்த ஆண்டில் ஏறுமுகத்தைக் காட்டியது. சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி 2024 இல் ஆடிய 9 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 5 இல் வென்று மூன்றில் தோற்றதோடு அந்த அணி இந்த ஆண்டில் ஆடிய 23 டி20 போட்டிகளில் 15 இல் வென்று 8 இல் தோற்றது.
இதிலே ஜூலை மாதம் நடந்த ஆசிய கிண்ண சம்பியன்சிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை மகளிரால் முதல் முறை ஆசிய சம்பியனாக முடிந்தமை விசேடமானது. அதேபோன்று 16 ஆண்டுகளில் முதல் முறையாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது முக்கிய சாதனையாக குறிப்பிடலாம்.
என்றாலும் கடந்த ஒக்டோபரில் பங்களாதேஷில் நடந்த மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியால் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல்போனது பெரும் பின்னடைவு. குறிப்பாக சமரி அத்தபத்துவிலேயே இலங்கை மகளிர் அணி பெரிதும் தங்கி இருக்கும் சூழல் மாறினாலேயே இன்னும் முன்னேறிச் செல்ல முடியும்.
எப்படி இருந்தபோதும் இலங்கை கிரிக்கெட் இந்த ஆண்டில் ஏறுமுகம் காட்டியதோடு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை தந்திருக்கிறது.
மற்றவை
ஆசிய வலைப்பந்தில் இலங்கை அணி வலுவானது என்பதில் சந்தேகம் இல்லை. என்றாலும் அதனால் இந்த ஆண்டு நடந்த ஆசிய வலைப்பந்து சம்பியன்சிப் போட்டியை வெல்ல முடியாமல்போனது. இறுதிப் போட்டி வரை இலகுவாக முன்னேறினாலும் இறுதிப் போட்டியில் சிங்கப்பூரிடம் தோற்றது. தர்ஜினி சிவலிங்கத்தின் ஓய்வுக்குப் பின்னர் இலங்கை வலைப்பந்து சற்று இறக்கம் கண்டாலும் அதனால் சுதாகரிக்கும் திறன் இருக்கிறது.
கடந்த மே மாதம் நடந்த ஆசிய ரக்பி பிரிவு 1 சம்பியன்சிப் இறுதிப் போட்டியில் இலங்கை அணியால் கசக்ஸ்தானை 45–7 புள்ளிகளால் வெல்ல முடிந்தது.
கடந்த ஒக்டோபரில் இலங்கை போர்மியுலா பந்தய வீரர் யெவான் டேவிட் யூரோ போர்மியுலாவை வென்றார். இந்தப் பிரிவில் இலங்கையர் ஒருவர் பங்கேற்றது இது முதல் முறையாக இருந்ததோடு இதன்மூலம் ஏப்4 போட்டிக்கும் தகுதி பெற முடிந்தது. இது இலங்கை விளையாட்டில் புதிய வாயில் ஒன்றை திறப்பதாக இருக்கும்.
எஸ்.பிர்தெளஸ்