இன்னும் இரண்டு நாட்களில் முடிவடையவிருக்கும் 2024ஆம் ஆண்டானது, இலங்கையின் வரலாற்றில் முக்கிய நினைவுப் பதிவுகளை விட்டுச் செல்கின்றது.
2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து படிப்படியாக மீட்சிபெற்றுவந்த இலங்கைக்கு இந்த வருடம் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முக்கியமான வருடமாக அமைந்தது. குறிப்பாக ‘அரகலய’ போராட்டத்தின் மூலம் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு தமக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும் தேர்தல் ஆண்டு என்பதால், அனைவரினதும் கவனம் இலங்கை மீது திரும்பியிருந்தது.
இருந்தபோதும், மக்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் வகையில் தேர்தல் நடத்தப்படுமா, இல்லையா என்ற நிச்சயமற்ற சூழலும் முன்னாள் ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்டிருந்தது. எனினும், எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் தேர்தல்களைத் தடுக்க முடியாது போனது. ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதும் அவருடைய எஞ்சிய பதவிக்காலத்தை நிரப்புவதற்காக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க தேர்தல்களை நடத்தாது தனது அதிகாரத்தை நீடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டதாக அவ்வேளையில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
அரசியல் அதிகார மாற்றம்:
இவ்வாறான பின்னணியில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவேண்டியிருந்ததால், தேர்தல்கள் குழு அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. தேசிய மக்கள் சக்தி சார்பில் அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்கவும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அதன் தலைவர் சஜித் பிரேமதாசவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு பிரசாரங்களை ஆரம்பித்திருந்தபோதும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராகத் தெரிவுசெய்யும் விடயத்தில் அவருக்கு ஆதரவு வழங்கிய பொதுஜன பெரமுனவுக்குள் பிளவு ஏற்பட்டது.
இதனால் ரணில் விக்கிரமசிங்க ஒரு பக்கத்தில் களமிறங்க, பொதுஜன பெரமுன அதன் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவைக் களமிறக்கியது. பொதுஜன பெரமுனவின் முழுமையான ஒத்துழைப்புடன் மீண்டும் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற ரணிலின் கணிப்பிலும் பிசகு ஏற்பட்டமையை தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டின.
ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் பலர் இருப்பதால் எவருக்கும் ஐம்பது வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காது என்பது முன்னரே தெரிந்த விடயமாக இருந்தது. இந்நிலையில், தேர்தல் முடிவுகளில் அநுர குமார திசாநாயக்க 42 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 32 வீத வாக்குகளையும், அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க 17 வீத வாக்குகளையுமே பெற்றனர். இரண்டாவது விருப்பு வாக்குகளும் எண்ணப்பட்டு போட்டியிட்டவர்களில் அதிக வாக்குகளைப் பெற்ற அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. இதற்கு அமைய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டார்.
இருபது வருடங்களுக்கு மேலாகப் பாராளுமன்ற உறுப்பினராக அனுபவம் பெற்ற சிறந்த பேச்சாளரான அநுர குமார திசாநாயக்க மீது மக்கள் கடுமையான நம்பிக்கை வைத்திருந்தனர் என்பதை தேர்தல் முடிவு வெளிக்காட்டியது. அநுர குமார மீதான நம்பிக்கை என்பதற்கு அப்பால் இதுவரை ஆட்சிசெய்தவர்கள் மீதிருந்த வெறுப்பு மற்றும் அமைப்பு மாற்றமொன்றுக்கான தேவை என்பன தெளிவாகப் புலப்பட்டன. இடதுசாரிக் கொள்கை உடைய கட்சியொன்றில் இணைந்து பல்வேறு சவால்களுக்கு மத்தியில் முன்னேறி வந்த ஒருவர் நாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்டது முதல் அநுர குமார தொடர்பான மக்களின் நிலைப்பாடு வெளிப்படத் தொடங்கியிருந்த போதும், இதுவரை பல தசாப்தங்களாக ஒரே வர்க்கத்தைச் சேர்ந்த தரப்பினரிடமிருந்த ஆட்சியதிகாரம் புதியதொரு தரப்பினரிடம் செல்வதை அவர்கள் விரும்பியிருக்கிவில்லை. இதனால் தேசிய மக்கள் சக்தி என்ற கட்சியில் அங்கம் வகிக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் கடந்தகால செயற்பாடுகளை மையமாகக் கொண்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் அல்லது குழப்பும் வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதாவது தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும், சர்வதேச நாணய நிதியம் கைவிட்டுச் செல்லும், நாட்டில் குழப்பம் ஏற்படும் என்ற பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. எனினும், எந்தப் பிரசாரங்களும் மக்களை குழப்பமடையச் செய்யவில்லை. தெளிவான பதிலை தமது வாக்குரிமையின் ஊடாக வழங்கியிருந்தனர் மக்கள்.
புதிய அரசியல் கலாசாரம்:
அதற்கும் அப்பால் இதுவரையிருந்த தேர்தல் கலாசாரத்தை முற்றாக மாற்றிய வருடமாகவும் 2024 அமைந்து விட்டது. சுமார் ஏழு தசாப்தங்களாக தேர்தல் காலத்தில் ஒவ்வொரு கட்சியும் தமக்கிடையில் வன்முறைகளை வளர்த்துக் கொண்டு கட்சி ஆதரவாளர்கள் தமக்கிடையில் முட்டிமோதிக் கொண்டிருந்தனர்.
இம்முறை தேர்தல் இதனை முற்றாக நிராகரித்திருந்ததுடன், தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகள் பூச்சியமாகவே இருந்தன. கடந்த காலங்களில் தேர்தல் முடிவடைந்ததும் வெற்றிபெற்ற கட்சியினர் மற்றைய கட்சிக்கு ஆதரவானவர்களைப் பழிவாங்கும் வகையில் நடந்து கொள்வர். அது மாத்திரமன்றி வெற்றிக் கொண்டாட்டங்கள் ஏனையவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுவதையே நாம் பார்த்திருந்தோம்.
ஆனால் இம்முறை தனது வெற்றியை பட்டாசு கொளுத்திக் கொண்டாட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதற்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி ஏனையவர்களைக் கஷ்டப்படுத்தவில்லை. அமைதியான முறையில் வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றதுடன், வன்முறைகள் மிகவும் குறைவாக இடம்பெற்ற தேர்தல் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களும் சுட்டிக்காட்டியிருந்தன. ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் புதிய அரசியல் கலாசாரம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு அல்லது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு கட்சிக்கு மக்கள் ஆணையை வழங்கியிருந்தனர்.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் எந்தவொரு தனிக்கட்சியினாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவது கடினம் என்ற போக்கே இதுவரை இருந்தது. இந்தப் போக்கையும் 2024 பொதுத்தேர்தல் மாற்றியமைத்து விட்டது. தேசிய மக்கள் சக்திக்கு 156 ஆசனங்களைப் பெற்றுக்கொடுத்த மக்கள், ஜனாதிபதி அநுர மீது வைத்துள்ள நம்பிக்கையை மீண்டும் மீளவும் உறுதிப்படுத்தி புதிய அரசியல் கலாசாரத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
மக்களின் எதிர்பார்ப்பு:
இந்தப் புதிய அரசியல் கலாசாரம் உருவாவதற்குப் பிரதான காரணம் இதுவரை ஆட்சியிலிருந்தவர்கள் மீது மக்கள் கொண்டிருந்த வெறுப்பும் மலிந்து போயிருந்த ஊழல், மோசடிகள், அரசின் வீண்விரயங்கள் என்பன நிறுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புமாகும். வரிப்பணத்தை வீண்விரயம் செய்து ஆட்சியிலிருக்கும் அரசியல்வாதிகள் தமது ஆடம்பர வாழ்க்கையைக் கொண்டுசெல்வதை மக்கள் முற்றாக எதிர்ப்பதால், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அரசாங்கத்தின் செலவினங்களை வெகுவாகக் குறைத்துள்ளது.
ஜனாதிபதியின் பதவிப்பிரமாணங்களுக்கு கடந்த காலங்களில் பல இலட்சங்கள் செலவிடப்பட்ட போதும், அநுர குமார திசாநாயக்கவின் பதவியேற்பு விழா மற்றும் புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழா என்பன மிகவும் குறைந்த செலவில் மிக மிக எளிமையான முறையில் நடத்தப்பட்டிருந்தன.
அது மாத்திரமன்றி அமைச்சுக்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் பலவற்றில் வீண்விரயங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டிருப்பதுடன், அதிக செலவை ஏற்படுத்தும் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
இதேபோன்று, ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகின்றது. இதற்கான விசாரணைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டு தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழியை அரசாங்கமும் வழங்கியுள்ளது. ஊழல் மாத்திரமன்றி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவது பற்றியும் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் மீது மக்கள் பல எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தாலும், பொருளாதார விடயத்தில் இந்த அரசும் கடந்த அரசின் பாதையையே பின்பற்றுகின்றது என்ற விமர்சனம் காணப்படுகின்றது. உண்மை என்னவெனில் தேசிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்கப்பட்ட அரசாங்கம் என்பது சவால்கள் நிறைந்ததொன்றாகும்.
சர்வதேச நாணய நிதியத்திடம் கடந்த அரசாங்கம் ஏற்படுத்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்வது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு மிகவும் அவசியம் என்பதால் இதனைத் தொடர்வதற்குப் புதிய அரசாங்கம் தீர்மானித்தது.
எனவே, கடந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படாத விடயங்கள் சிலவற்றுடன் விரும்பாவிட்டாலும் இணங்கிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இந்த அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, புதிய அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். இதன் மூலமே புதிய மாற்றங்களைக் கொண்டு வரலாம்.
இந்த மாற்றங்களை ஏற்படுத்த குறிப்பிட்ட காலஅவகாசம் தேவை என்பதால், அதுவரையில் ஏற்கனவே திட்டமிட்ட பாதையில் அரசாங்கம் பயணிக்க வேண்டியதாகவிருக்கும்.
எனவே, பூர்த்தியடையும் 2024ஆம் ஆண்டைவிட பிறக்கவிருக்கும் 2025ஆம் ஆண்டே புதிய அரசாங்கத்திற்கு சவால் மிக்க ஆண்டாக அமையும். ஏனெனில், மக்கள் வழங்கிய ஆணைக்குரிய கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படக்கூடிய சவால்களுக்கு அரசு வெற்றிகரமாக முகங்கொடுக்க வேண்டிய ஆண்டாக இருக்கப் போகின்றது.