இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இது 75 ஆவது ஆண்டு. ஆனால் 75 ஆண்டு (பவள விழா) கொண்டாட்டங்களை நடத்த முடியாத நிலையில் கட்சி உள்ளது. கட்சிக்குள் உள்மோதல்கள் வலுப்பெற்றுள்ளன. இதனால் கட்சி நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. பல வழக்கள். மேலும் வழக்குகள் தொடரப்படக்கூடும் என்றே தெரிகிறது.
மட்டுமல்ல, தமிழரசுக் கட்சிக்கு யார் தலைவர் என்பதே கேள்விக்குரியதாகி விட்டது. தானே இப்போதும் தலைவர் என்று சொல்கிறார் மாவை சேனாதிராஜா. ஏற்கனவே அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக மாவை அறிவித்திருந்தார். பின்னர் அந்தக் கடிதத்தை தான் வாபஸ் வாங்கியதாகவும் சொல்கிறார்.
கடந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் மாவையைத் தலைவராக ஏற்கத் தேவையில்லை என்று சாணக்கியன் அணி சொன்னது. இல்லை, அவரை வைத்தே கூட்டத்தை நடத்த வேண்டும் என்றது சிவமோகன் அணி. இப்படியே எதற்கெடுத்தாலும் கட்சிக்குள் பிரச்சினை, பிளவு, விவாதம், சண்டை, சச்சரவு என்பதாகவே உள்ளது. இதனால்தான் கட்சி கூடுதலான வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதற்குப் பிரதான காரணம், தலைமைத்துவத்துவக் குறைபாடேயாகும். ஏனையோரால் மதிக்கப்படக் கூடிய ஒருவர் தலைமைப் பொறுப்பிலிருந்தால், கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும். கட்சிக்குள்ளே பிணக்குகள், பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவை அந்தத் தலைமையினால், தலைமையின் ஆளுமையால் கட்டுப்படும். இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் வவுனியாவில் பலத்த அமளிகளின் மத்தியில் நடந்திருக்கிறது. இறுதியில் அரசியற் குழுவின் தலைவராக மாவை சேனாதிராஜாவும் கட்சியின் பதில் தலைவராக சி.வீ.கே. சிவஞானமும் செயற்படுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது கூட எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்று சொல்ல முடியாது. அந்தளவுக்குத்தான் உள்ளது கட்சியின் உறுப்பினர்களுடைய பொறுப்புணர்வும் அரசியற் புரிதல்களும். ஏன் இன்னும் சில வழக்குகளுக்குக் கூட இந்தக் கூட்டம் வழிவகுக்கலாம்.
இந்தளவுக்கும் வெளியே பேசும்போது தமிழரசுக் கட்சிதான் தமிழர்களுடைய பேராதரவைப் பெற்ற ஒரே கட்சி என்ற பெருமிதங்களை அதனுடைய உறுப்பினர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். இதற்கு வாய்ப்பாக கடந்த (2024 நவம்பரில்) பாராளுமன்றத் தேர்தலில் ஏனைய தமிழ்க்கட்சிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டுத் தமிழரசுக் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. அதற்கு எட்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் பாராளுமன்றத்தில் அது மூன்றாவது செல்வாக்குள்ள – அதிக உறுப்பினர்களைக் கொண்ட – கட்சியாக உள்ளது. அதேவேளை தமிழ் அடையாளக் கட்சிகளில் அதுவே முக்கியமான கட்சியாகவும் இருக்கிறது.
இதற்கு அப்பால், இலங்கையின் மூத்த கட்சிகளில் ஒன்றாகத் தமிழரசுக்கட்சி உள்ளது. மூத்த தமிழ்க் கட்சிகள் இரண்டில் ஒன்றாகவும் இருக்கிறது. மற்றது அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ். இரண்டும் இப்போதும் அரசியலில் செல்வாக்கோடுள்ள கட்சிகள். இப்போதும் என்பதைச் சற்று ஊன்றிக் கவனிக்க வேண்டும். இந்த இரண்டு கட்சிகளின் அரசியலும் தோல்விக்குள்ளானதை அடுத்தே இதற்குப் பின்னர் விடுதலை இயக்கங்கள் உருவாகியதும் ஆயுதப் போராட்ட அரசியல் வலுப்பெற்றதுமாகும்.
ஆயுதப்போராட்ட அரசியல் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக வலுப்பெற்றிருந்தது. ஆயுதப்போராட்ட அரசியலின்போது இந்த இரண்டு கட்சிகளும் முடக்கத்துக்குள்ளாகி விட்டன. ஏறக்குறைய இரண்டும் அழிந்த நிலையிலேயே இருந்தன.
2000 த்தில் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட சர்வதேச நெருக்குவாரம், தவிர்க்க முடியாமல் ஏனைய அரசியற் தரப்புகளோடு உடன்பாட்டுக்குச் சொல்ல வேண்டிய நிலையை உருவாக்கியது. அதற்காக இந்த அரசியற் கட்சிகளைத் தூசு தட்டி எடுக்க வைத்தது. ஆனாலும் இவற்றைத் தமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே விடுதலைப்புலிகள் வைத்திருந்தனர்.
விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, அந்த வெற்றிடத்தைப் பயன்படுத்தி, தம்மை மீண்டும் மீள்நிலைப்படுத்திக் கொண்டன இவை இரண்டும். அதனால்தான் இரண்டு கட்சிகளும் இப்போதும் உயிர்வாழ்கின்றன.
மட்டுமல்ல, விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு எழுச்சியடைந்திருக்க வேண்டிய ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்றவற்றின் அரசியல் பலவீனமும் இதற்கு அப்பாலான புதிய அரசியற் தரப்புகளுடைய இயலாமைகளும் தமிழரசுக் கட்சியையும் தமிழ்க் காங்கிரஸையும் உயிரூட்டி, வளர்த்துக் கொண்டேயிருக்கிறது.ஒரு காலம் இந்தக் கட்சிகளால் பயனே இல்லை. இந்தக் கட்சிகள் மக்களுக்குத் துரோகமிழைத்து விட்டன. இவற்றின் தலைவர்களை விட்டு வைக்கவே கூடாது என்று கடும்போக்கைப் பின்பற்றிய விடுதலைப்புலிகளும் ஏனைய இயக்கங்களும் பின்னர் இந்தக் கட்சிகளுடன் சமரசத்துக்குச் சென்றது வரலாற்றின் விசித்திரமும் சோகமுமாகும். உண்மையில் தமிழரசுக் கட்சியானது, அதனுடைய ஸ்தாபகரான எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் காலத்திலேயே – 1970 களின் தொடக்கத்திலேயே – தன்னுடைய அரசியல் இலக்குகளை எட்ட முடியாத நிலைக்குள்ளாகி விட்டது. இதைச் செல்வநாயகமே வெளிப்படையாகச் சொல்லியிருந்தார். அவருடைய புகழ்பெற்ற வாசகம் ஒன்றுண்டு. ‘‘ தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்‘‘ என.
அதற்குப் பிறகு, செல்வநாயகத்துக்கு அடுத்த நிலையிலிருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், செல்லாக் காசான நிலையிலிருந்த தமிழரசுக் கட்சியையும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸையும் இணைத்து மலையகத்தை மையப்படுத்தி இயங்கி வந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸோடு ஒரு உடன்பாட்டுக்கு வந்தார். அதன்விளைவாக உருவாகியதே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். 1977 இல் தமிழர் விடுதலைக் கூட்டணி புதிய லேபிளில் வெற்றியைப் பெற்றது. ஆனாலும் அதனால் தொடர்ந்து அரசியல் அரங்கில் நிற்க முடியவில்லை. 1977 க்குப் பிறகு எழுச்சியடைந்த ஈழ விடுதலை இயக்கங்கள் தமிழர் விடுதலைக்கூட்டணியை முற்றாகவே நிராகரித்தன. அதனோடு இலங்கை தமிழரசுக் கட்சியும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸூம் தமிழ்ப் பிராந்தியத்தை விட்டே வெளியேறி விட்டன.
அதாவது, 1977 இல் அமிர்தலிங்கத்தினால் மீளுருவாக்கத்துக்கு எடுக்கப்பட்ட முயற்சியும் தோற்றது. இறுதியில் அமிர்தலிங்கமும் விடுதலைப்புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2001 இல் உருவாகிய அரசியற் சூழல் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாய்ப்பைக் கொடுத்தாலும் ஆனந்தசங்கரியினால் அதைத் தக்க வைக்க முடியவில்லை. அந்த வாய்ப்பை சம்பந்தன் பயன்படுத்திக் கொண்டார். சம்பந்தனுக்கு விடுதலைப்புலிகளுடன் முழுமையான உடன்பாடு இல்லாது விட்டாலும் முரண்பட்டுக் கொள்ளாமல் சமரச அரசியலை மேற்கொண்டு தன்னைத் தக்க வைத்துக் கொண்டார். அதன் விளைவாகவே இப்பொழுது தமிழரசுக் கட்சி இன்றைய நிலையை எட்டியது. ஆகவே இன்றைய தமிழரசுக் கட்சி, சம்பந்தனுக்கே நன்றி சொல்ல வேண்டும். சம்மந்தனுக்கே கடமைப்பட்டுள்ளது.
சம்பந்தனுடைய காலத்தில் தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கமாக இயங்க வேண்டியிருந்தது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று பங்காளிக்கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியவை அழுத்தம் கொடுத்தன. அதற்கு முன்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் நெருக்கடியைக் கொடுத்தது. ஆனால், சம்பந்தன் எதற்கும் மசியவில்லை. இதனால் காங்கிரஸ் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது. சம்பந்தனுடைய பிடிவாதத்தினால் கூட்டமைப்பு உடைகிறது என்ற குற்றச்சாட்டும் விமர்சனமும் பலமாக முன்வைக்கப்பட்டன. சம்பந்தன் கிறங்கவேயில்லை. மட்டுமல்ல, கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் கையை மேலுயர்த்தியே வைத்திருந்தார். இதனால் ஏனைய பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியவை கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று பிடிவாதமாகவே நின்றன. இறுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் வெளியேறியது. அப்போதும் சம்பந்தன் எந்த விட்டுக் கொடுப்புக்கும் செல்லவில்லை. பதிலாக தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டார். இது சம்மந்தன் மீதான விமர்சனங்களைக் கடுமையாக்கியது. கூடவே சம்பந்தனுக்கு ஆதரவாகச் செயற்பட்ட சுமந்திரனையும் எதிர்நிலையில் நோக்க வைத்தது. அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சுமந்திரனும் சம்மந்தனும் உடைத்து விட்டனர். தமிழர்களுடைய பலத்தைச் சிதைத்து விட்டனர் என்ற விதமாக. இப்போதும் அந்த விமர்சனம் உண்டு.
ஆனால் தமிழரசுக் கட்சியின் பலத்தில் – செல்வாக்கில் – தான் ஏனைய கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்றவை உயிர்வாழ்கின்றன எனச் சம்பந்தனும் சுமந்திரனும் மதிப்பிட்டனர். அதையே இன்று வரலாறு நிரூபித்துள்ளது. இப்பொழுது தமிழரசுக் கட்சிக்கு எட்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன. காங்கிரசுக்கு ஒரு ஆசனம். அப்படியென்றால், இந்த மூத்த கட்சிகளைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்றனரா? அவற்றின் அரசியல்தான் தமிழ் மக்களுடைய அரசியலா? என்ற கேள்வி எழலாம். இது விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் அரசியற் போதாமைகளிலிருந்து உருவாகியதே இலங்கைத் தமிழரசுக் கட்சியாகும். தமிழரசுக் கட்சியின் போதாமையிலிருந்து உருவாகியதே தமிழர் விடுதலைக் கூட்டணி. அதனுடைய போதாமையிலிருந்தே உருவாகியவை ஈழ விடுதலை இயக்கங்கள். அவற்றின் போதாமைகளிலிருந்து உருவாகியதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. இப்படியெல்லாம் நிகழ்ந்து வந்த வரலாற்று வளர்ச்சி, இப்பொழுது திரும்பி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸிடமும் இலங்கைத் தமிழரசுக் கட்சியிடமும் சென்றிருக்கிறது என்றால், தமிழர்களின் அரசியலும் பின்னோக்கிச் சென்றுள்ளது என்றே அர்த்தமாகும். நிச்சயமாக. ஏனென்றால், முப்பது ஆண்டுகளுக்கு முன், தோற்றுப்போன அரசியற் சித்தாந்தந்தத்துக்கு இன்னும் குறைந்தளவேனும் மதிப்பிருக்கிறது – செல்வாக்கிருக்கிறது என்றால், இதை வேறு எப்படிச் சொல்வது?
தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரசும் பிராந்திய அரசியலையே மேற்கொண்டன. பிராந்திய அரசியல் அதிகாரத்தையே கோரின. ஆனாலும் அவற்றின் பெயரோ அகில இலங்கையைச் சுட்டுவதாகும். ஒரு நாடு இரு தேசம் என்று கூறும் தமிழ்க் காங்கிரஸ் (கஜேந்திரகுமார் பொன்னம்பலம்) அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உத்தியோக பூர்வ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாவார். அப்படித்தான் இலங்கைத் தமிழரசுக் கட்சிக் காரர்களும். இவர்கள் பாதி கொழும்பு மைய அரசியலிலும் பாதி வடக்குக் கிழக்கு பிராந்திய அரசியலிலும் முகம் காட்டுவோர். இந்த அடையாள முரணே அவற்றின் அரசியல் முரணுமாகும். இதனால்தான் அவற்றின் அரசியல் கடந்த காலத்தில் தோற்றுப் போனது. அதாவது, வடக்குக் கிழக்கில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக பிராந்திய அரசியலை – தமிழ்த்தேசிய அரசியலை – பிரிவினைவாத அரசியலைப் பேசுவது. நடைமுறையில் கொழும்பு மையத்தோடு உறவைப் பேணுவது. இந்த இரட்டை நிலைப்பாடே அவற்றின் அரசியற் தோல்வியாகும்.
இதைச் சற்று விளக்கமாகப் பார்க்க வேண்டுமானால், தமிழர்களுடைய அரசியல் பலமானதாக உள்ளது. தமிழ் மக்கள் ஒற்றுமையாக உள்ளனர். தமிழர்கள் தங்களுடைய உரிமைக் கோட்பாட்டால் உறுதியாக உள்ளனர். ஆகவே பிராந்திய அரசியல் ஸ்திரமாக உள்ளது என்ற தோற்றப்பாட்டைக் காட்டி, அதன் மூலம் மக்களைத் திருப்திப்படுத்திய தலைமைகளால் மக்களுடைய அரசியல் உரிமைகளையோ அபிவிருத்தித் தேவைகளையோ பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டது. எனவேதான் தலைமைகள் வெற்றியடைந்தனவே தவிர, தமிழ் மக்கள் வெற்றியடையவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இவை உள்ளாகியுள்ளன. ஆனாலும் இதெல்லாம் அவற்றுக்குப் பொருட்டேயில்லை.
மக்களுடைய விடுதலையை, அவர்களுடைய வாழ்க்கைப் பிரச்சினைகளை விட, மக்களுடைய மேம்பாட்டை விட தமது வெற்றியும் பதவியுமே இவற்றுக்குத் தேவையானது. இதனால்தான் அது முன்மொழிந்த, அது தன்னுடைய அரசியல் நிலைப்பாடாகக் கொண்ட சமஸ்டியையும் பெற முடியவில்லை. தனிநாட்டையும் பெற முடியவில்லை.
இதனால் இவை மேற்கொண்டு வந்த பிராந்திய அரசியல் இப்போது நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. பதிலாகத் தேசிய மக்கள் சக்தி பிராந்தியத்திலும் பெரு வெற்றியைப் பெற்று, இதை உறுதிப்படுத்தியது.
கருணாகரன்